கடந்த ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண குழு மட்ட போட்டிகளில் அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் தீர்மானமிக்க போட்டியில் இலங்கை அணி மிகவும் மோசமான முறையில் தோல்வியடைந்து சம்பியன்ஸ் கிண்ண தொடரிலிருந்து வெளியேறியிருந்தமை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகற அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணி பலவீனமான அணி என்றும், அணியின் வீரர்களை வலுவான வீரர்களாக உருவாக்குவதற்கு இராணுவ முகாமொன்றுக்கு பயிற்சிகளுக்காக அனுப்ப வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் முகமாக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, ”இப்பொழுது யுத்தம் நிறைவுற்றுள்ளது. இனிமேலும் எவரும் இராணுவ பயிற்சிகளில் ஈடுபட வேண்டிய தேவையுள்ளதாக நான் நினைக்கவில்லை” என்று ஹிரு கொசிப் (Hiru Gossip) செய்திகளுக்காக தெரிவித்திருந்தார். மேலும் தெரிவிக்கையில், ”இந்திய அணியுடனான போட்டியில் வெற்றி பெற்ற போது எம்மை எல்லோரும் புகழ்ந்தார்கள். எனினும், அடுத்த போட்டியில் தோல்வியுற்ற போது நாம் பலவீனமான அணி என்று குறை கூறுகின்றார்கள்” என்று சுட்டிக்காட்டினார்.

18 மாதங்களுக்குப் பின்னர், ஒருநாள் சர்வதேசப் கிரிக்கெட் போட்டிகளுக்காக சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் மீண்டும் இலங்கை அணியுடன் இணைந்து கொண்ட லசித் மாலிங்க எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜிம்பாப்வே அணியுடனான போட்டிகளுக்காக பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே அமைச்சருக்கு பதிலடி வழங்கும் வகையில் இவ்வாறு தெரிவித்தார்.

இப்போதுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போதுள்ள நிலையுடன்  ஒப்பிடும் பொழுது, உரிய உடல் தகுதியுடன் இல்லை எனவும், 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததனாலேயே போட்டிகளில் வெற்றியீட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இலங்கை கிரிக்கெட் வீரர்களும் அது போலவே, இராணுவப் பயிற்சிகளை பெற்றுத் தம்மை பலப்படுத்திக்கொள்ளவும் யோசனை தெரிவித்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மாத்திரமே பெருத்த வயிறுகளுடன் காணப்படுவதாகவும், அந்த வகையில், பிடியெடுப்புகளை தவறவிட்டதில், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பிடியெடுப்புகளை விடுங்கள், எவ்வளவு உதிரி ஓட்டங்களை களத்தில் பெற்றுக்கொடுத்தார்கள். பங்களாதேஷ் அணியைப் பாருங்கள். கடுமையான பயிற்சிகளின் மூலம் எவ்வாறு உடலமைப்பை பேணி வருகின்றார்கள். அதனால் இலங்கை வீரர்களை 6 மாதங்களுக்கு இராணுவப் பயிற்சிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே லசித் மாலிங்க மேற்கண்டவாறு பதிலளித்திருந்தார்.