சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திலிருந்து விலகும் டேவிட் வோர்னர்?

Indian Premier League – 2021

220
IPL

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இனி தன்னை பார்க்க முடியாது என்று டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வருட இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிக மோசமான பருவமாக அமைந்துள்ளது. இதுவரை அந்த அணி விளையாடியுள்ள 10 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.இதனால் புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற IPL தொடரின் 40ஆவது லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

எனினும், குறித்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் தலைவர் டேவிட் வோர்னர் இடம்பெறவில்லை. மேலும், அவர் மைதானத்துக்கும் வரவில்லை. ஹோட்டலில் இருந்து போட்டியைப் பார்த்து இன்ஸ்டகிராமில் அணியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் டேவிட் வோர்னரைக் காணாத ரசிகர் ஒருவர் வருத்ததுடன் “வோர்னரை பார்த்தீர்களா” என்று ஒரு பதிவை இன்ஸ்டகிராமில் வெளியிட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த டேவிட் வோர்னர்,  இனிமேல் என்னை பார்க்க முடியாமல் கூட போகலாம், ஆனால் தொடர்ந்து அணிக்கு ஆதரவு கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

எனவே வோர்னர் அளித்த பதிலின் மூலம் அவர் மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட மாட்டார் என்பது உறுதியானது.

EMBERD LINKS

இதேவேளை, குறித்த போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டேவிட் வோர்னரின் இந்தப் பதிவு குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் டிரிவர் பெய்லிஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில்,

“இம்முறை IPL தொடரில் எமது அணிக்கு இனிமேல் இறுதிப் போட்டிக்குச் செல்ல முடியாது. இதனால் இளம் வீரர்களுக்கு போட்டி அனுபவம் குறித்து கற்றுக்கொடுக்க விரும்பினோம்.

ஏனெனில், அணியில் பல இளம் வீரர்கள் களத்திற்கு வெளியிலேயே அமர்ந்துள்ளனர். பலர் மேலதிக வீரர்களாவும் உள்ளனர். இதனால் அவர்களுக்கு தொடர்ந்து பல போட்டிகளில் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்தோம்.

இதற்கு டேவிட் வோர்னரும் ஆதரவு கொடுத்தார். அவர் ஹோட்டலில் இருந்தே போட்டிகளைப் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தார். மற்றபடி நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகத் தான் உள்ளோம்.

அவர் அணியில் தொடர்ந்து இடம்பெறுவாரா என்பது பற்றி விவாதிக்கப்படவில்லை. ஒரு பெரிய ஏலத்துக்கு முன்பு இதுதான் கடைசி வருடம். இனிமேல்தான் அதுபற்றிய முடிவுகள் எடுக்கப்படும். பல வருடங்களாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டேவிட் வோர்னர் பங்களித்துள்ளார். அவர் அடித்த ஓட்டங்களுக்காக மிகவும் மதிக்கப்படுகிறார். IPL போட்டியில் இன்னும் நிறைய ஓட்டங்களை அவர் எடுப்பார் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக சிறப்பாக செயல்பட்ட டேவிட் வோர்னர், அந்த அணிக்கு IPL பட்டத்தை வென்று கொடுத்தார்.

ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகிகளுக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதால் தற்போது தலைவராக கேன் வில்லியம்சன் செயல்பட்டு வருகிறார். மேலும் டேவிட் வோர்னருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்காமல் போட்டிகளில் இருந்தும் ஓரம்கட்டப்படு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

மறுபுறத்தில் இந்தாண்டில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடிய அவர் 185 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<