பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் லீக் மற்றும் யாழ். மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஆகியன இணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 20 பாடசாலைகளை உள்ளடக்கியகிரிக்கெட் பாஷ் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை வீழ்த்திய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி சம்பியனாக முடிசூயது.

இம்மாதம் 1ஆம் திகதி  முதல் 5ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானம், யாழ் மத்திய கல்லூரி மைதானம், புனித பத்திரிசியார் கல்லூரி மைதானம், யாழ்ப்பாணக் கல்லூரி மைதானம் என நான்கு மைதானங்களில் குறித்த போட்டிகள் இடம்பெற்று வந்தன.

கிரிக்கெட் பாஷ் T20 அரையிறுதியில் யாழ் அணிகள்

பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் லீக் மற்றும் யாழ். மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட்..

இப்போட்டித் தொடரின் இறுதிச் சுற்றுப்போட்டிகள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருந்தன.

 முதலாவது அரையிறுதி

புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி மற்றும் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகள் மோதியிருந்தன.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி, யதுசன் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது புனித பத்திரிசியார் கல்லூரி. தொடர்ச்சியாக ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிக்கப்பட்டபோதும் மறுமுனையில் நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய அனோஜன் 33 ஓட்டங்களைச் சேகரித்து 8ஆவது விக்கெட்டாக மைதானம் விட்டு வெளியேறினார். மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் சியன்(12) மற்றும் அபிஷாக்கின் ஆட்டமிக்காத 08 ஓட்டங்களோடு 65 ஓட்டங்களை எட்டிப்பிடித்தது புனித பத்திரிசியார் கல்லூரி.

பந்து வீச்சில் யதுசன் வெறுமனே 06 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 06 விக்கெட்டுக்களை சரித்திருந்தார். இளம் பந்து வீச்சாளர் டினேசன் 02 விக்கெட்டுக்களையும், அபினாஷ், சுபீட்சன் ஆகியோரும் தம் பங்கிற்கு இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுவதற்கு களம்புகுந்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணியின் விக்கெட்டுகள் விரைவாக பிஜேட்ரிக்கால் அகற்றப்பட, 34/5 எனும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது சென் ஜோன்ஸ்.

6ஆம் இலக்கத்தில் களம் புகுந்த சரோபன் மறுமுனையில் விக்கெட்டுக்கள் இழக்கப்பட்டபோதும் ஆட்டமிழக்காது 22 ஓட்டங்கள் பெற்றுக்கொடுக்க, மிகவும் விறுவிறுப்பான போட்டியில் 02 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது சென் ஜோன்ஸ் கல்லூரி அணி.

பந்து வீச்சில் பியேட்ரிக், நிதுசன் ஆகியோர் தலா 04 விக்கெட்டுக்களைப் பகிர்ந்திருந்தனர்.

ஆட்ட நாயகன் – யதுசன் (சென் ஜோன்ஸ் கல்லூரி)

போட்டி முடிவு – 02 விக்கெட்டுக்களால் சென் ஜோன்ஸ் கல்லூரி வெற்றி.

இரண்டாவது அரையிறுதி 

சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்த இப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணிகள் மோதியிருந்தன.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த யாழ் மத்திய கல்லூரி அணித் தலைவர் தசோபன் மகாஜனாக் கல்லூரி அணியினை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். அதன்படி துடுப்பெடுத்தாடிய மகாஜனாக் கல்லூரி அணி நிசானுஜன் பெற்ற 24 ஓட்டங்கள் மற்றும் இறுதி நேரத்தில் டினேஷ் பெற்றுக்கொடுத்த 20 ஓட்டங்களின் துணையுடன், 08 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்களைப் பெற்றது. பந்து வீச்சில் நிதுசன், தசோபன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

அதிரடி நட்சத்திரங்களுடன் கிரிக்கெட் உலகைக் கலக்க வரும் T-10 போட்டி

கிரிக்கெட் உலகில் அண்மைக்காலமாக ஏற்படும் பல மாற்றங்களால் பாரம்பரிய..

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணியினர் நிஷானின் 18 ஓட்டங்கள் மற்றும் கௌதமன்(46) ஜெயதர்சன்(38) ஆகியோரது அதிரடி ஆட்டத்தின் துணையுடன் 12.3 ஓவர்கள் நிறைவில் வெறுமனே ஒரு விக்கெட் இழப்பிற்கு வெற்றியிலக்கினை அடைந்தனர். வீழ்த்தப்பட்ட ஒரு விக்கெட்டினை பகீரதன் வீழ்த்தியிருந்தார்.

ஒன்பது விக்கெட்டுகளால் அரையிறுதியிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது யாழ் மத்திய கல்லூரி.

ஆட்ட நாயகன் – தசோபன் (யாழ் மத்திய கல்லூரி)

போட்டி முடிவு – 09 விக்கெட்டுக்களால் யாழ் மத்திய கல்லூரி வெற்றி

இறுதிப் போட்டி

ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற போட்டிகளின் பின்னராக தோல்விகளேதையும் சந்திக்காது யாழ் மத்திய கல்லூரி அணியும், மறுமுனையில் குழு நிலைப் போட்டிகளுடன் தொடரிலிருந்து வெளியேறும் இக்கட்டான நிலையிலிருந்து பின்னர் தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியும் கிண்ணத்திற்கான இறுதி மோதலுக்கு நுழைந்திருந்தனர்.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணித் தலைவர் தசோபன் முதலில் களத்தடுப்பினைத் தேர்வு செய்தார்.  துடுப்பெடுத்தாடுவதற்காக களம்புகுந்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணியினரின் முன்வரிசை விரைவாக தகர்க்கப்பட 33/4 எனும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

டினோசன்(16), கபில்ராஜ்(11) மற்றும் சரோபனின் ஆட்டமிழக்காத 25 ஓட்டங்களின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் கள் நிறைவில்சென் ஜோன்ஸ் வீரர்கள் 09 விக்கெட்டிழப்பிற்கு 104 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் மதுசன் 24 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், இயலரசன் குகசதுஸ் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

105 என்ற இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் நிசான் 08 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில்  ரண் அவுட் முறை மூலம் ஆட்டமிழந்தார். மற்றைய ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்  ஜெயதர்சன் 16 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

தொடர்ந்து வந்த வீரர்கள் ஓற்றையிலக்கத்துடன் ஏமாற்ற போட்டி சென். ஜோன்ஸின் பக்கம் நகர்ந்தது. பின்வரிசையில் களம்புகுந்த நிதுசன்(23), தசோபன்(07), குகசதுஸ்(12) ஆகியோர் அணியை கௌரவமான ஓட்ட எண்ணிக்கைக்கு இட்டுச்சென்றனர். எனினும், ஆட்டத்தின் இறுதியில் யாழ் மத்திய கல்லூரி அணி 88 ஓட்டங்களைப் பெற்று 16 ஓட்டங்களால் தொடரின் முதல் தோல்வியைச் சந்தித்து இரண்டாவது இடத்தினைப் பெற்றுக்கொண்டது. பந்து வீச்சில் அபினாஷ், சௌமியன், கபில்ராஜ் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

இதனால், தொடரிலிருந்து வெளியேறும் நிலையிலிருந்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தொடர்ச்சியான வெற்றிகள் மூலம் “கிரிக்கெட் பாஷ் 2017” வெற்றிக் கிண்ணத்தை தமதாக்கியது.

போட்டி முடிவு – 16 ஓட்டங்களால் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றி

இறுதிப் போட்டி விருதுகள்

ஆட்ட நாயகன் – கபில்ராஜ் – சென் ஜோன்ஸ் கல்லூரி

சிறந்த சகலதுறை வீரர் – சுபீட்சன் – சென் ஜோன்ஸ் கல்லூரி

சிறந்த துடுப்பாட்ட வீரர் – சரோபன் – சென் ஜோன்ஸ் கல்லூரி

சிறந்த பந்துவீச்சாளர் – மதுசன் – யாழ் மத்திய கல்லூரி

சிறந்த களத்தடுப்பாளர் – சௌமியன் – சென் ஜோன்ஸ் கல்லூரி