வெற்றியுடன் லீக்கை நிறைவுசெய்த ராஜஸ்தான்; வெளியேறியது பஞ்சாப்!

IPL 2023

106
Punjab Kings vs Rajasthan Royals

IPL தொடரில் இன்று (19) தங்களுடைய கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிளே-ஓஃப் வாய்ப்புக்கு மோதும் அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தீர்மானித்திருந்ததுடன், அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி பஞ்சாப் அணிக்கு தடுமாற்றத்தை கொடுத்தது.

>> விராட் கோலியின் அபார சதத்தோடு றோயல் செலஞ்சர்ஸ் வெற்றி

பஞ்சாப் அணியின் முன்னணணி துடுப்பாட்ட வீரர்களான பிரப்சிம்ரன் சிங், சிகர் தவான் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகியோரின் விக்கெட்டுகள் 46 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட பஞ்சாப் அணி பின்னடைவை சந்தித்தது.

ஆரம்பத்தில் தடுமாற்றத்தை பஞ்சாப் அணி சந்தித்த போதும் அதன் பின்னர் களமிறங்கிய செம் கரன் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் வேகமாக ஓட்டங்களை குவித்ததுடன், விக்கெட்டினை விட்டுக்கொமால் இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர்.

இதில் 28 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களை பெற்று ஜித்தேஷ் சர்மா ஆட்டமிழக்க மறுமுனையில் களமிறங்கிய ஷாருக் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷாருக் கான் 23 பந்துகளில் 41 ஓட்டங்களையும், சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கிய செம் கரன் 31 பந்துகளில் 49 ஓட்டங்களை ஆட்டமிழக்காமலும் பெற்றுக்கொண்டனர்.

எனவே மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் நவ்தீப் சைனி 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு இந்த ஆண்டு தன்னுடைய 5வது ஓட்டமின்றிய இன்னிங்ஸை ஆடி ஜோஸ் பட்லர் ஏமாற்றினார். இவர் ஆட்டமிழந்தாலும் தேவ்துத் படிக்கல் மற்றும் யசஷ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டமொன்றை கட்டியெழுப்பி அரைச்சதத்தை பதிவுசெய்தனர்.

துரதிஷ்டவசமாக தேவ்துத் படிக்கல் 30 பந்துகளில் 51 ஓட்டங்களையும், யசஷ்வி ஜெய்ஷ்வால் 36 பந்துகளில் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்து வெளியேற சிம்ரொன் ஹெட்மையர் அபாரமான ஆட்டத்துடன் அணியை இறுதிவரை அழைத்துச் சென்றார்.

ரியன் பராக் 12 பந்துகளில் 20 ஓட்டங்களை பெற்று நம்பிக்கை கொடுத்த ஆட்டமிழந்ததுடன், ஹெட்மையர் 28 பந்துகளில் 46 ஓட்டங்களை குவித்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஓட்ட விகிதத்தை கடப்பதற்கு 18.3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி வெற்றியை அடைய வேண்டிய நிலை இருந்த போதும், இறுதியில் துருவ் ஜூரலின் சிக்ஸருடன் 19.4 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றது. பந்துவீச்சில் ரபாடா 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தங்களுடைய இறுதி லீக் போட்டியில் விளையாடியதுடன், பஞ்சாப் அணி பிளே-ஓஃப் வாய்ப்பை இழந்துள்ளது. ராஜஸ்தான் அணி வெற்றிபெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஷ் (ஓட்ட விகிதம் மிகக்குறை) மற்றும் பெங்களூர் (அதிக ஓட்ட இடைவெளியுடன்) அணிகள் தங்களுடைய இறுதி லீக் போட்டியில் தோல்வியடைந்தால் ராஜஸ்தான் அணி பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு உள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<