அனைவரது விமர்சனத்திற்கும் சாட்டையடி கொடுத்த பாகிஸ்தான்

555

இந்திய அணியுடனான முதல் போட்டியில் படுதோல்வியடைந்திருந்த பாகிஸ்தான் அணி, பலரதும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் பினிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து வெற்றியைப் பதிவு செய்து தமக்கான அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

தென்னாபிரிக்காவுடனான போட்டியில் தோல்வியுற்றதால் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேற வேண்டும் என்ற கடும் அழுத்தத்துக்கு மத்தியில், வாழ்வா சாவா என்ற சூழ்நிலையில் பாகிஸ்தான் இப்போட்டியில் களமிறங்கியது.

சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கைக்கு மற்றுமொரு இழப்பு

பர்மிங்கம், எஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி, பாகிஸ்தான் அணியை இலகுவாக வெற்றி கொள்ளலாம் என்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய அவ்வணியை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர்.

தமது பந்து வீச்சின் மூலம் உலகின் தலை சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரர் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் ஹசிம் அம்லா உள்ளடங்கலாக அனைவரையும் திணறடித்த பாகிஸ்தான் வீரர்கள் தென்னாபிரிக்க அணியை வெறும் 210 ஓட்டங்களுக்கு மடக்கியது. இதில் குறிப்பாக டி வில்லியர்ஸ் 5 பந்துகளை எதிர்கொண்டு ஓட்டமெதுவும் பெறாமாலே ஆட்டமிழந்து சென்றார்.

ஹசிம் அம்லா மற்றும் குவிண்டன் டி கொக் ஆகியோர் இலங்கை அணியுடனான கடந்த போட்டியைப் போன்றே சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் முதல் விக்கெட்டுக்காக சிறந்த  40 ஓட்டங்களை தங்களுக்கிடையே இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். மொஹமட் ஹபீஸ் தனது சுழல் பந்து வீச்சினால் குவிண்டன் டி கொக்கை LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்து, பாகிஸ்தான் அணியை அச்சுறுத்திய இந்த இணைப்பாட்டதை முறித்து விக்கெட் வேட்டையை ஆரம்பித்து வைத்தார்.

[rev_slider ct17-dsccricket]

அதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்குப் பின்னர் அணிக்கு திரும்பியிருந்த மொஹமட் ஆமீர் மற்றும் ஜுனைத் கான் ஆகியோர் நேர்த்தியாகப் பந்து வீசி ஓட்டங்களை கட்டுப்படுத்தி அதிக அழுத்தத்தினை கொடுத்திருந்தனர். அதிரடியாக பந்து வீசிய ஹசன் அலி 24 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து டு ப்லெசிஸ், ஜேபி டுமினி மற்றும் வெய்ன் பார்னெல் ஆகியோரை சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்.

இதனால், முதல் 28 ஓவர்களுக்குள் 118 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென்னாபிரிக்க அணி. பின்னர் டேவிட் மில்லர் தனியொருவராக இறுதிவரை போராடி ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு அணியை சரிவில் இருந்து மீட்டார்.

ஹசிம் அம்லாவின் விக்கெட்டினை 16 ஓட்டங்களுக்கு வீழ்த்திய இமாட் வசிம் 20 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும், ஸ்விங் மற்றும் யோக்கர் பந்து வீச்சினால் அச்சுறுத்திய ஜுனைத் கான் 53 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இங்கிலாந்து

அந்த வகையில், 50 ஓவர்கள் நிறைவில் தென்னாபிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்களை பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்காக கடும் அழுத்தத்துக்கு மத்தியில் அசார் அலி மற்றும் பாக்ஹார் ஸமான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 40 ஓட்டங்களை பெற்று சிறந்த ஆரம்பத்தை கொடுத்தனர்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசார் அலி 22 பந்துகளை எதிர்கொண்டு 9 ஓட்டங்களுக்கும், அதிரடியாக துடுப்பாடிய பாக்ஹார் ஸமான் 23 பந்துகளில் 6 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 31 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்து சென்றனர். மொஹமட் ஹபீஸ் நிதானமாக துடுப்பாடி 56 பந்துகளில் பெறுமதியான 26 ஓட்டங்களைப் பெற்று பங்களிப்புச் செய்தார்.

பாபர் அசாம் மற்றும் பாகிஸ்தான் அணியின் பினிஷர் சொஹைப் மலிக் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 31 மற்றும் 16 ஓட்டங்களுடன் களத்திலிருந்தபோது, 27ஆவது ஓவரில் மழையின் குறுக்கிட்டால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. இதன்போது பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில் அணி 23 ஓவர்களில் 119 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது.

ஐசிசி விதிகளின் படி, 20 ஓவர்களுக்கு மேல் பந்து வீசப்பட்டிருந்தமையால் பாகிஸ்தான் அணி டக்வார்த் லூயிஸ் முறைப்படி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. போட்டியின் ஆட்ட நாயகனாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஹசன் அலி தெரிவானார்.

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் விறுவிறுப்பான ஒரு போட்டியாகவும் முழு கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு போட்டியாகவும் இந்த ஆட்டம் இருந்தது.  

புகைப்படங்கள் – இங்கிலாந்தில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை வீர்ர்கள்

கடந்த இந்திய அணியுடனான போட்டியின் தோல்விக்கு பின்னர் பல இன்னல்களை சந்தித்த பாகிஸ்தான் அணியும் படுதோல்வியினால் சோகத்தில் ஆழ்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் இந்த வெற்றி மூலம் புத்துயிர் பெற்றுள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.

இந்த வெற்றியினால் B குழுவில் பாரிய மாற்றங்களை காணக்கூடியதாக உள்ளது. இன்றைய தினம் நடைபெறவுள்ள இந்திய அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி பெறுமானால், அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாக B குழுவில் பலத்த போட்டி நிலவும். எனினும், இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு பெறும் சவாலான ஒன்றாகவே உள்ளது.

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்கா 219/8 (50 ஓவர்கள்) – டேவிட் மில்லர் 75, குயிண்டன் டி கொக் 33, கிரிஸ் மொறிஸ் 28, டு ப்ளெசிஸ் 26, ககிசோ றபாடா 26, ஹசன் அலி 24/3, ஜுனைத் கான் 53/2, இமாத் கான் 20/2

பாகிஸ்தான் 119/3 (27 ஓவர்கள்) – பாக்ஹார் ஸமான் 31, பாபர் அசாம் 31*, சொயிப் மலிக் 16, மோர்னெ மோர்கல் 18/3

போட்டி முடிவு: பாகிஸ்தான் அணி டக்வார்த் லூயிஸ் முறைப்படி 19 ஓட்டங்களால் வெற்றி