குளோப் கால்பந்து விருதை வென்று புதிய மைல்கல்லை எட்டிய ரொனால்டோ

327
Globe Soccer Awards Official Twitter

ஐரோப்பிய கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் கால்பந்து வீரருக்கான குளோப் கால்பந்து விருதை ஜுவண்டஸ் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ச்சியாக 3 ஆவது தடவையாகவும் வென்று வரலாற்றில் இடம்பிடித்தார்.

ஐரோப்பிய கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் கால்பந்து வீரர்களுக்கு வருடந்தோறும் குளோப் கால்பந்து விருது வழங்கப்படும். இதை ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் மற்றும் ஐரோப்பிய கால்பந்து வீரர்கள் சங்கம் ஆகியன இணைந்து வழங்குகின்றன.

இந்த நிலையில், 10 ஆவது குளோப் கால்பந்து விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் (03) ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றது. அத்துடன், இம்முறை சிறந்த வீரருக்கான விருதுக்காக அன்டோனியோ கிரீஸ்மன் (அத்லெட்டிகா மெட்ரிட்), கிலியன் எம்பாப்பே (பரிஸ் செயின்ட் ஜேர்மன்) மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ (ஜுவண்டஸ்) ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.

23 வயதுக்கு உட்பட்ட இலங்கை தேசிய கால்பந்து அணிக்கான தேர்வு அடுத்த வாரம்

23 வயதுக்கு உட்பட்ட ஆடவர் தேசிய…

இதில் வருடத்தின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 33 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் சுவீகரித்தார். அத்துடன், இந்த விருதை 5 ஆவது தடவையாகவும் தட்டிச் சென்ற அவர், இதற்கு முன் 2011, 2014, 2016, 2017 ஆகிய வருடங்களில் இவ்விருதைப் பெற்றுக் கொண்டடுள்ளார்.

இதனிடையே, கால்பந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரருக்கான விருதையும் ரொனால்டோ பெற்றுக் கொள்ள, அவருடைய முகாமையாளர் ஜோர்ஜ் மெண்டஸ் வருடத்தின் சிறந்த முகாமையாளருக்கான விருதையும் பெற்றுக் கொண்டார். 2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட இவ்விருதை 2016 ஆம் ஆண்டைத் தவிர மற்றைய எல்லா வருடங்களிலும் ஜோர்ஸ் மெண்டஸ் வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

  • Globe Soccer Awards Official Twitter

அதுமாத்திரமின்றி, கடந்த பருவத்தில் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஜுவண்டஸ் அணியுடனான போட்டியில் ரொனால்டோ அடித்த கோல் (Bicycle Kick) சிறந்த கோலுக்கான விருதுக்காகவும் தெரிவு செய்யப்பட்டது.

இதேவேளை, வருடத்தின் சிறந்த வீரர் விருதை பெற்றுக் கொண்டமை குறித்து ரெனால்டோ கருத்து வெளியிடுகையில், புத்தாண்டை சிறப்புடன் ஆரம்பித்து வைக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வருடத்தில் சிறப்பாக விளையாடி இதேபோன்று இன்னும் பல விருதுகளை ஜுவண்டஸ் கழகத்துக்காக பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளேன். எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

இதேநேரம், உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் டிடியர் டிஸ்சம்ப்ஸ் வருடத்தின் சிறந்த பயிற்சியாளருக்கான விருதை தட்டிச் சென்றார். அதேபோன்று, வருடத்தின் சிறந்த கழகத்துக்கான விருதை அத்லெட்டிகா மெட்ரிட் கழகம் பெற்றுக் கொண்டது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<