லொஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் ; உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது!

LA Olympics 2028

320

லொஸ் ஏன்ஜல்ஸில் (LA) நடைபெறவுள்ள 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டின் குறுகிய வடிவமான T20i போட்டிகளை ஆடவர் மற்றும் மகளிருக்கென லொஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக்கில் நடத்துவதற்கான பரிந்துரையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் முன்வைத்திருந்தது.

>> ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவில் கிரிக்கெட் போட்டிகள்

குறித்த பரிந்துரையை ஆராய்ந்த சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு, லொஸ் ஏன்ஜல்ஸ் நகரத்தில் 2028ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதியை வழங்கியுள்ளது.

இந்தியாவின் மும்பையில் இன்று திங்கட்கிழமை (16) நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் சந்திப்பின் போது கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

லொஸ் ஏன்ஜல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறிவித்த சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கிரெக் பார்க்லே குறிப்பிடுகையில்,

“லொஸ் ஏன்ஜல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளமை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளமையை நாம் உற்சாகத்துடன் அறிவிக்கிறோம். எம்முடைய மிகச்சிறந்த விளையாட்டை ஒலிம்பிக்கில் காட்சிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.  அதேநேரம் மேலும் பல ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இணைக்கப்படுமாயின், குறித்த விடயம் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிக சிறந்த விடயமாக இருக்கும்” என்றார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<