இந்தியாவில் முதன்முறையாக ஆரம்பமாகவுள்ள மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு வீராங்கனைகளும் வாங்கப்படவில்லை.
மொத்தமாக இலங்கையைச் சேர்ந்த 15 வீராங்கனைகள் நேற்று திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்றிருந்தனர்.
>> கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தார் இயென் மோர்கன்
சமரி அதபத்து, அனுஷ்கா சஞ்சீவினி, இனோகா ரணவீர, நிலக்ஷி டி சில்வா, ஹர்ஷிதா சமரவிக்ரம, விஷ்மி குணரத்ன, ஹாஷினி பெரேரா, மல்ஷ செஹானி, கவீஷா டில்ஹாரி, ஓசதி ரணசிங்க, அச்சினி குலசூரிய, உதேஷிகா பிரபோதனி, தாரிகா செவ்வந்தி, சுகந்திகா தசநாயக்க மற்றும் இனோஷி பெர்னாண்டோ ஆகியோர் ஏலத்திற்கு பதிவுசெய்திருந்தனர்.
மேற்குறித்த அனைவரும் 30 இலட்சம் ரூபாவை தங்களுடைய நிர்ணயத்தொகையாக அறிவித்திருந்தனர். எனினும், எந்தவொரு வீராங்கனைகளும் பங்கேற்கும் 5 அணிகளாலும் வாங்கப்படவில்லை. குறிப்பாக இலங்கை மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை சமரி அதபத்துவும் எந்த அணிகளால் வாங்கப்படவில்லை என்பது மேலும் குறிப்பிடத்தக்க அம்சமாக மாறியுள்ளது.
சமரி அதபத்து நடைபெற்றுவரும் மகளிர் T20 உலகக்கிண்ணத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக அபார அரைச்சதம் மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சிறந்த பந்துவீச்சையும் பதிவுசெய்திருந்தார். குறிப்பாக தென்னாபிரிக்க அணிக்கு அதிர்ச்சித்தோல்வியை இலங்கை மகளிர் அணி வழங்கியிருந்தது.
சமரி அதபத்துவுக்கு அடுத்தப்படியக கடந்த 12 மாதங்களில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திவரும் இனோகா ரணவீரவுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் குறித்த காலப்பகுதியில் 21 போட்டிகளில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இம்முறை நடைபெற்ற ஏலத்தில் 448 வீராங்கனைகள் பங்கேற்றிருந்ததுடன், அணியொன்று 18 வீராங்கனைகளை இணைக்க முடியும் (12 இந்திய வீராங்கனைகள், 6 வெளிநாட்டு வீராங்கனைகள்). அதன்படி 60 இந்திய வீராங்கனைகள் மற்றும் 30 வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
இதேவேளை முதன்முறையாக நடைபெற்ற இந்த ஏலத்தில் இந்திய வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா அதிககூடிய விலையாக 3.5 கோடிக்கு (இந்திய ரூபாய்) றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<