17 வயதிற்குட்பட்ட கிரிக்கட் அரையிறுதியில் செபஸ்டியன் கல்லூரி வெற்றி

221
St. Sebastian College

17 வயதிற்குட்பட்ட பிரிவு 1 கிரிக்கட் போட்டிகளின் முதலாவது அரையிறுதியில் புனித செபஸ்டியன் கல்லூரி கொழும்பு ஆனந்த கல்லூரியை 17 ஓட்டங்களால் வென்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

கொழும்பு மூர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புனித செபஸ்டியன் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. சிறப்பாக துடுப்பெடுத்திய செபாஸ்டியன் கல்லூரியின் 3 வீரர்கள் அரைச் சதம் அடித்து அசத்தினர். சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய கிஹான் சேனாநாயக்க ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்றார். செபஸ்டியன் அணியைத் தாங்கி நின்று ஓட்டங்கள் குவித்த நுவனிது பெர்னாண்டோ மற்றும் தருஷ பெர்னாண்டோ முறையே 52 மற்றும் 51 ஓட்டங்களைக் குவித்தனர்.

ஆனந்த அணி சார்பாக சிறப்பாகப் பந்து வீசிய அஸெல் சிகேரா வெறும் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.சா னுக தனுகவும் 3 விக்கட்டுகளைக் கைப்பற்ற 50 ஓவர்களில் செபஸ்டியன் கல்லூரி 8 விக்கட்டுகளை இழந்து 254 ஓட்டங்களைக் குவித்தது.

255 எனும் சவாலான ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாட ஆனந்த கல்லூரி களமிறங்கியது. செபஸ்டியன் அணியின் பந்து வீச்சுக்குத் தடுமாறிய ஆனந்த கல்லூரி துடுப்பாட்ட வீரர்கள் விக்கட்டுகளை வரிசையாகப் பறிகொடுத்தனர். நிலைத்து நின்ற துஷான் ஹெட்டிகே 50 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சிலும் அசத்தியது போன்று துடுப்பாட்டத்திலும் அசத்திய அஸெல் சிகேரா 49 ஓட்டங்களைப் பெற்றார்.

எனினும் மற்ற துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்ட எண்ணிக்கையுடன் ஆட்டமிழக்க ஆனந்த கல்லூரி 49.1 ஓவர்களில் 237 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. செபஸ்டியன் அணி சார்பாக தினுஜ ரணசிங்க 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி – 254/8 (50)

கிஹான் சேனாநாயக்க 54*, நுவனிது பெர்னாண்டோ 52, தருஷ பெர்னாண்டோ 51 – அஸெல் சிகேரா 4/18, சாணக தனுக 3/60

ஆனந்த கல்லூரி – 237/10(49.1)

துஷான் ஹெட்டிகே 50, அஸெல் சிகேரா 49 – தினுஜ ரணசிங்க 3/41

செபஸ்டியன் கல்லூரி 17 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.