இலங்கை ஒருநாள் அணியில் மீண்டும் அவிஷ்க, ஓசத மற்றும் நுவன் பிரதீப்

162

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடவுள்ள 24 பேர் கொண்ட இலங்கை குழாத்தை தேர்வாளர்கள் அறிவித்துள்ளனர். 

எதிர்வரும் 8ஆம் திகதி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடவுள்ளது. 

இந்த தொடருக்கான இலங்கையின் உத்தேச அணிக்குழாம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இங்கிலாந்து தொடரில் பங்கேற்கவுள்ள 24 வீரர்கள் கொண்ட அணி விபரத்தை தேர்வுக் குழுவினர் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதிக்காக அனுப்பிவைத்துள்ளதாக கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இலங்கை வீரர்கள்

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நடைபெறவுள்ள இருவகைப் போட்டிகளுக்கும் இலங்கை அணியின் தலைவராக குசல் ஜனித் பெரேரா பெயரிடப்பட்டுள்ளார். 

இதன்படி, அண்மையில் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் இலங்கை அணியை வழிநடத்திய குசல் பெரேரா, தசுன் ஷானக்கவுக்குப் பதிலாக T20 அணியின் தவைவராகவும் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதில் இலங்கை T20 அணியின் தலைவராக தசுன் ஷானக்க பெயரிடப்பட்டிருந்தாலும், இறுதியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான சுற்றுப்பயணத்தை விசா பிரச்சினை காரணமாக தவறவிட்டார். இதன்காரணமாக அஞ்செலோ மெதிவ்ஸ் பதில் தலைவராகச் செயல்பட்டார். 

எதுஎவ்வாறாயினும், இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் T20 தொடரில் இளம் வீரர்களுக்கு மாத்திரம் வாய்ப்பு கொடுப்பதற்கு தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதால் அஞ்செலோ மெதிவ்ஸுக்கும் இலங்கை அணியில் இடம் கிடைக்கவில்லை. 

இந்த நிலையில், இறுதியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான T20 தொடரை காயம் காரணமாக தவறவிட்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோ மீண்டும் இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். 

இதில் உடற்தகுதி பிரச்சினையால் அண்மையில் நிறைவுக்கு வந்த பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரை அவர் தவறவிட்டார். 

இதனிடையே, டெஸ்ட் போட்டிகளில் அண்மைக்காலமாக விளையாடி வந்த ஓசத பெர்னாண்டோ மீண்டும் இலங்கை T20 அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இறுதியாக, கடந்த 2020 ஜனவரியில் இந்தயாவுடனான T20 போட்டியில் அவர் விளையாடியிருந்தார். 

ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம் காண்பித்த இலங்கை வீரர்கள்

எதுஎவ்வாறாயினும், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடரில் ஓசத பெர்னாண்டோ இடம்பெற்றாலும், இறுதியாக நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் போது தொடை எலும்பு முறிவு காயத்துக்குள்ளாகிய இளம் வீரரான அஷேன் பண்டார, இங்கிலாந்து தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் இடம்பெறவில்லை. 

இதேவேளை, இலங்கை அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளரான நுவன் பிரதீப் மீண்டும் இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளார்.  

அத்துடன், கடந்த வருடம் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற Boxing Day டெஸ்ட் போட்டியின் பிறகு இலங்கை அணியில் இடம்பெறாத வேகப் பந்துவீச்சாளர் கசுன் ராஜிதவும் இங்கிலாந்து தொடரில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். 

இதுஇவ்வாறிருக்க, உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகின்ற மத்திய வரிசை வீரரான சரித் அசலன்க, சகலதுறை வீரரான தனன்ஞய லக்ஷான் மற்றும் இஷான் ஜயரட்ன ஆகிய மூவரும் முதல்தடவையாக இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர். 

எனவே, இலங்கை அணி ஜூன் மாதம் 8ஆம் திகதி இங்கிலாந்துக்கு பயணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், முதலாவது T20 போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி கார்டிப்பில் ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை குழாம் 

துடுப்பாட்ட வீரர்கள்: குசல் பெரேரா (தலைவர்), குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க, பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, ஓசத பெர்னாண்டோ, தனன்ஞய டி சில்வா, சரித் அசலங்க, நிரோஷன் டிக்வெல்ல

சகலதுறை வீரர்கள்: தசுன் ஷானக, சாமிக கருணாரத்ன, தனன்ஞய லக்ஷான், வனிந்து ஹசரங்க

சுழல் பந்துவீச்சாளர்கள்: ரமேஷ் மெண்டிஸ், லக்ஷான் சந்தகன், அகில தனன்ஞய 

வேகப் பந்துவீச்சாளர்கள்: இசுரு உதான, பினுர பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர, ஷிரான் பெர்னாண்டோ, கசுன் ராஜித, இஷான் ஜயரட்ன, நுவன் பிரதீப்

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…