யாருமே செய்யாத சாதனையை செய்து காட்டிய பெப் !

157
BBC

சம்பியன்ஸ் லீக்கை வெல்ல மன்செஸ்டர் சிட்டியின் நீண்ட கால தேடலானது இறுதியாக இஸ்தான்புல்லில் இன்டர் மிலானுக்கு எதிராக வெற்றிகரமாக முடிந்தது. இன்டர் மிலான் அணிக்கு எதிரான போட்டியை 1-0 என வெற்றி பெற்றதன் மூலம் பெப் குவார்டியோலாவின் சிட்டி அணியானது சம்பியன்ஸ் லீக்கை வென்று, இந்த பருவகால திரெப்ல் (TREBLE) பூர்த்தி செய்தது.

துருக்கியின் இஸ்தான்புல் அரங்கில் 11ஆம் திகதி அதிகாலையில் இடம்பெற்ற இப்பருவகால சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் சிட்டி அணிக்காக ரொட்றி 68ஆவது நிமிடத்தில் கோலடித்தார்.  அந்த கோலே சிட்டிக்கு வெற்றி கோலாக அமைந்தது. இன்டர் மிலான் அணிக்கு பல கோலடிக்கும் வாய்ப்புக்கள் வந்த போதிலும் அதனை அவ்வணி வீரர்கள் கோலாக்க தவறிவிட்டனர்.  இந்த போட்டியில் சிட்டி அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கெவின் டீ ப்ருயன் முதல் பாதியிலேயே உபாதையடைந்து வெளியேறினார்.

இந்த வெற்றி மூலம் முகாமையாளர் பெப் குவார்டியோலாவின் சிட்டி அணியானது பிரீமியர் லீக், FA கிண்ணம் மற்றும் இறுதியாக சம்பியன்ஸ் லீக் கிண்ணங்களை வென்று, பிரீமியர் லீக் அணிகளில் 2ஆவது தடவையாக Treble அடித்த அணியாக சாதனை படைத்தது. இதற்கு முன் இந்த சாதனையை 1999இல் சேர் அலெக்ஸ் பெர்குசன் முகாமைத்துவம் செய்த மன்செஸ்டர் யுனைடெட் அணி படைத்திருந்தது.

சிட்டி அணியின்  இளம் நட்சத்திர வீரர்களில் ஒருவரான 22 வயது நிரம்பிய எர்லிங் ஹாலாட், இந்த பருவகாலத்தில் சிட்டி அணிக்காக 53 போட்டிகளில் விளையாடி 52 கோல்களையும், 9 கோலுக்கான பந்து பரிமாற்றங்களையும் வழங்கி  சிட்டி அணியின் இந்த வெற்றிகளுக்கு பெரும் பங்காற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல், சிட்டி அணியுடனான தனது முதல் பருவகாலத்திலேயே பிரீமியர் லீக் மற்றும் சம்பியன்ஸ் லீக்கில் தங்க பாதணிகளை வென்றுள்ளார்.

இந்த Treble வெற்றியினை பெற்றதன் மூலம் பெப் குவார்டியோலா, சர்வதேச கழக மட்ட போட்டிகளில் 2 தடவைகள் Treble வெற்றியினை பெற்ற முதல் முகாமையாளராக மாறினார். இதற்கு முன்னர் பார்சிலோனா அணியுடன் 2008/09 பருவகாலத்தில் Treble வெற்றியினை பெப் பெற்றிருந்தார். இறுதியாக பெப் 2011ஆம் ஆண்டு பார்சிலோனா அணியுடன் சம்பியன்ஸ் லீக்கை வெற்றி பெற்றிருந்தார்.

2016இல் சிட்டி அணியின் முகாமையாளராக பெப் பொறுப்பெடுத்ததிலிருந்து அவ்வணியை 5 பிரீமியர் லீக், 4 இங்கிலிஷ் கப், 2 FA கிண்ணம் மற்றும் 2 கம்யூனிட்டி ஷீல்ட் கிண்ணங்கள் வெற்றி கொள்வதற்கு வழிவகுத்துள்ளார்.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<