ஆசியக்கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Asia Cup 2023

381
Asia Cup 2023

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக்கிண்ணத் தொடர் நாளை புதன்கிழமை ஆரம்பிக்கவுள்ளதுடன், இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை வியாழக்கிழமை (31) கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.

>>முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் இந்தியாவின் முன்னணி வீரர்!

அணியில் ஏற்பட்டிருந்த தொடர்ச்சியான உபாதைகள் காரணமாக இறுதிக்குழாத்தை அறிவிப்பதற்கு தாமதத்தை ஏற்படுத்தியிருந்த இலங்கை கிரிக்கெட் சபை, பல முன்னணி வீரர்களின்றி குழாத்தை அறிவித்திருக்கிறது.

முக்கிய மாற்றமாக நடைபெற்றுமுடிந்த LPL தொடரில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் என சகலதுறையிலும் பிரகாசித்திருந்த வனிந்து ஹஸரங்க நீக்கப்பட்டுள்ளமை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான துஷ்மந்த சமீர அணியிருந்து வெளியேறியுள்ளார். கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக்கிண்ண தொடரின்போது உபாதைக்கு முகங்கொடுத்திருந்த இவர், தொடர்ச்சியாக தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தார். எனினும் சத்திரசிகிச்சையை மேற்கொண்டு இறுதியாக நடைபெற்ற LPL தொடரில் பி-லவ் கண்டி அணிக்காக ஒருசில போட்டிகளில் விளையாடியிருந்தார்.

எனினும் இதன்போது மீண்டும் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த இவர், தற்போது ஆசியக்கிண்ணத்தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இவருடன் லஹிரு குமார மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோரும் உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் மேற்குறித்த நான்கு வீரர்களுடன் உலகக்கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கை அணிக்காக விளையாடியிருந்த  சஹான் ஆராச்சிகே மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், இளம் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே அணியில் இடத்தை பிடித்துக்கொண்டுள்ளார்.

இதேவேளை முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களின் வெளியேற்றம் காரணமாக பினுர பெர்னாண்டோ மற்றும் பிரமோத் மதுசான் ஆகியோர் LPL தொடரில் வெளிப்படுத்திய பிரகாசிப்புகள் காரணமாக மீண்டும் அணிக்குள் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

>>WATCH – தொடர் உபாதைகளால் தடுமாறும் நடப்பு சம்பியன் ; ஆசியக்கிண்ணம் நிலைக்குமா? | Asia Cup 2023

துடுப்பாட்ட வரிசையை பொருத்தவரை உலகக்கிண்ண தகுதிகாண் தொடரில் விளையாடிய துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ந்தும் அணியில் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளதுடன், உபாதையிலிருந்து திரும்பியிருந்த குசல் பெரேரா 15 பேர்கொண்ட குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். குசல் பெரேரா கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள போதும், உடற்தகுதியை கொண்டிருப்பதால் அவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஆசியக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியை தசுன் ஷானக வழமைப்போன்று வழிநடத்தவுள்ளதுடன், குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, தனன்ஜய  டி சில்வா, சரித் அசலங்க, மஹீஷ் தீக்ஷன மற்றும் திமுத் கருணாரத்ன போன்ற வீரர்கள் தொடர்ந்தும் அணியில் இடங்களை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

தசுன் ஷானக (தலைவர்), குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, திமுத் கருணாரத்ன, சரித் அசலங்க, தனன்ஜய டி சில்வா, பெதும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, துஷான் ஹேமந்த, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, கசுன் ராஜித, பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுசான், மதீஷ பதிரண

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<