மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையினால் நடத்தப்படுகின்ற கரீபியன் ப்ரீமியர் லீக்கில் (CPL), ஜமைக்கா தலவாஸ் அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர வீரரான கிறிஸ் கெயில், இம்முறை பருவகாலத்தில் சென். லூசியா சோக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கே.பி.எச் டிரீம் கிரிக்கெட் பிரைவெட் லிமிடெட் (KPH Dream Cricket Private Limited) நிறுவனம் கடந்த பெப்ரவரி மாதம் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் அணிகளில் ஒன்றான சென். லூசியா அணியை வாங்கியது. இதனைத் தொடர்ந்து அந்த அணியின் பயிற்சியாளராக அண்டி பிளவர் நியமிக்கப்பட்டார்.
இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் அருகில் இருப்பதாக தெரியவில்லை – கங்குலி
கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டுக்கள் …….
இந்நிலையில், தற்போது சென். லூசியா அணி பிரபல வீரர் கிறிஸ் கெயிலைத் தேர்வு செய்துள்ளது.
கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் முதல் நான்கு பருவகாலங்களில் ஜமைக்கா தலவாஸ் அணிக்காக விளையாடிய அவர், அடுத்த 2017 மற்றும் 2018 ஆகிய இரண்டு பருவகாலங்களிலும் சென்.கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியேட்ஸ் அணிகளுக்காக விளையாடினார்.
இதுஇவ்வாறிருக்க, கடந்த வருடம் நடைபெற்ற கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் மீண்டும் ஜமைக்கா தலவாஸ் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடிய கிறிஸ் கெயில், 243 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தார். அத்துடன், புள்ளிகள் பட்டியலில் ஜமைக்கா அணி கடைசி இடத்தைப் பெற்றுக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
40 வயதான கிறிஸ் கெயில், டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்றார்.
இதனிடையே, சென். லூசியா சோக்ஸ் அணியின் தலைவராக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை வீரருமான டெரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த வருடத்துக்கான 8ஆவது கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
எனினும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் நடைபெறவுள்ள திகதிகளில் மாற்றம் ஏற்படலாம் என அந்நாட்டு கிரிக்கெட் சபை கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<