ஆஸியை வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்த மேற்கிந்திய தீவுகள்

105
West Indies Tour Australia 2024

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இளம் வீரர்கள் அடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி புது வரலாறு படைத்துள்ளது.

இதன்மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி முதல் டெஸ்ட் வெற்றியை மேற்கிந்திய தீவுகள் அணி பதிவு செய்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி தற்போது அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகியது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி தங்களது முதல் இன்னிங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ஓட்டங்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோசுவா டா சில்வா 79 ஓட்டங்களையும், கெவின் சின்க்ளெர் 71 ஓட்டங்களையும் எடுத்தனர்.

அவுஸ்திரேலியா அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட் மற்றும் நெதன் லையன் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த அஸ்திரேலியா அணி ஆரம்பத்திலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எவ்வாறாயினும், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜா ஆகியோர் அரைச் சதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்களை எடுத்த நிலையில் டிக்ளெயார் செய்வதாக அறிவித்த்து.

மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்பில் கீமார் ரோச் 4 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 22 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸைத் ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிர்க் மெக்கன்ஸி 41 ஓட்டங்களைக் குவித்தார்.

அவுஸ்திரேலியா அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் மற்றும் நெதன் லையன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனால் அவுஸ்திரேலியா அணிக்கு 216 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

216 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அவுஸ்திரேலியா அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா அணி 2  விக்கெட்டுகளை இழந்து 60 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், இன்றைய (28) நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து 8 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித் 91 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்திருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அத்துடன், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சமன் செய்தது.

கடந்த 1999ஆம் ஆண்டுக்குப் பிறகு அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

மேலும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்திய முதல் அணியாக மேற்கிந்திய தீவுகள் அணி வரலாற்றை பதிவு செய்திருக்கிறது. பகலிரவு டெஸ்ட் போட்டியில் தோல்வியே சந்திக்காமல் (11-0) அவுஸ்திரேலியா இருந்த நிலையில், அந்த தொடர் வெற்றிக்கு மேற்கிந்திய தீவுகள் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அதுமாத்திரமின்றி, காபா மைதானத்தில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்திருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி, 31 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலியா மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை இழக்காமல் சமன்செய்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

குறிப்பாக 1988ஆம் ஆண்டுக்குப்பின் அவுஸ்திரேலியாவை அதனுடைய கோட்டையான கபா மைதானத்தில் தோற்கடித்து மேற்கிந்தியத் தீவுகள் அணி சரித்திரம் படைத்தது. மேலும் கடந்த 35 ஆண்டுகளில் இந்திய அணிக்குப் பிறகு கபா மைதானத்தில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்த இரண்டாவது அணி என்ற பெருமையும் அந்த அணி பெற்றது.

அத்துடன், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் ஐசிசி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி  ஒரு இடம் முன்னேறி 7ஆவது இடத்தில் உள்ளது.

தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடி தனது முதல் 5 விக்கெட் குவியலையும், ஒட்டுமொத்தமாக 13 விக்கெட்டுகளுடன் 57 ஓட்டங்களையும் குவித்த  இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமார ஜோசப், ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய 2 விருதுகளையும் தட்டிச் சென்றார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<