கடந்த 40 ஆண்டுகளாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிகளை உயர்தரமாக ஒளிபரப்பு செய்து வந்த சேனல் 9 (Channel 9) இம்முறை கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் ஒளிபரப்பு உரிமைகளை இழந்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 6 வருடங்களுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையை சேனல் 7 மற்றும் பொக்ஸ் ஸ்போர்ட்ஸ் (Fox Sports) ஆகியன 1.82 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குத் தட்டிச் சென்றது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் என்றாலே சேனல் 9 தான். உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு முதன் முதலில் கிரிக்கெட் ஒளிபரப்பு எப்படி இருக்க வேண்டும், எந்தத் தரத்தில் இருந்தால் தொலைக்காட்சி நேரலைக்கு ரேட்டிங் அதிகமாகும் என்று சேனல் 9, 1985ஆம் ஆண்டு நடைபெற்ற மினி உலகக் கிண்ணத்தின் போது நிரூபித்தது.
அதன் பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஈ.எஸ்.பி.என் (ESPN) ஒளிபரப்பு நிறுவனங்கள் வந்ததையடுத்து அவுஸ்திரேலியாவில் கோடைகால கிரிக்கெட் நேரலை ஒளிபரப்புக்காக காத்திருந்து கிரிக்கெட் ரசிகர்கள் பயன்பெற்றனர். குறிப்பாக ஆசிய கிரிக்கெட் நாடுகளின் ரசிகர்களுக்கு அப்போதுதான் அதாவது 1992இல் உலகக் கிண்ணப் போட்டிகளை தொலைக்காட்சியின் வாயிலாக பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.
ஆசிய கிண்ணத்தில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஓரே குழுவில்
40 ஆண்டுகளாக உலகத் தரம் வாய்ந்த ஒரு ஒளிபரப்பை கிரிக்கெட் மூலம் முழு உலகிற்கும் வழங்கிய சேனல் 9, இன்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா ஒளிபரப்பு உரிமைகளை வெறும் ஒரு பில்லியன்களால் இழந்துள்ளது.
சேனல் 9 வழங்கிய உயர்தர தொழில்நுட்ப தெளிவான கிரிக்கெட் ஒளிபரப்புக்கு அதன் வர்ணனைக் குழுவான டோனி கிரேக், ரிச்சி பெனோ, இயன் செப்பல், பில் லொரி ஆகியோர் வளம் சேர்த்தனர்.
கிரிக்கெட்டை எப்படிப் பார்க்க வேண்டும், நேரடி ஒளிபரப்பு கொடுக்கும் போது எப்படி சிக்கனமாகக் கையாள வேண்டும் என்பதையெல்லாம் ரிச்சி பெனோ சக வர்ணனையாளர்களுக்குக் கற்றுக் கொடுத்த காலம். கிரிக்கெட் கற்றுக் கொள்ள வேண்டுமென்றாலும் வர்ணனையைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றாலும் அது ரிச்சி பெனோ, டோனி கிரேக், இயன் செப்பல், பில் லொரி நால்வர் குழுவிடத்தில் மட்டுமே சாத்தியம் என்பதை பலரும் அறிந்து வைத்திருந்தனர்.

ஆனால் 2019 ஆஷஸ் தொடர், 2019 ஒரு நாள் உலகக் கிணண்ம் மற்றும் 2020 டி20 உலகக் கிண்ண உரிமைகளை சேனல் 9 ஒளிபரப்பு உரிமையை வைத்திருந்தாலும், சேனல் 7 மற்றும் பொக்ஸ் ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றில் இலவசமாக ஒளிபரப்பு செய்ய முடியும் என கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இங்கிலாந்தின் போட்டிகளுக்கு தொலைக்காட்சி வர்ணனையாளராக சங்கக்கார
அதேநேரம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகள், அவுஸ்திரேலிய மகளிர் ஒரு நாள் போட்டிகள் மற்றும் பிக் பேஷ் (Big Bash) டி-20 தொடர்களையும் ஒளிபரப்பும் செய்யும் உரிமையையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட் என்பதால் அந்நாட்டு மக்களுக்கு நேரலை ஒளிபரப்புகள் இலவசமாக காண்பிக்கப்படுகின்றது.
எனவே தற்போது புதிய ஒப்பந்தங்களின்படி 80 சதவீத கிரிக்கெட் போட்டிகள் இலவசமாகவும், எஞ்சிய 20 சதவீத போட்டிகள் கட்டணம் செலுத்தியும் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் முதல் தடவையாக தொலைக்காட்சிகளில் இலவசமாக ஒளிபரப்பு செய்யவும் அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.




















