ஐ.சி.சியின் போட்டித் தடைக்கு எதிராக சந்திமால் மேன்முறையீடு

543

இலங்கை – மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்தின் தன்மையை மாற்ற முனைந்த குற்றச்சாட்டில் அபராதத்துடன், போட்டித் தடைக்குள்ளாகிய இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால், அந்த தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.

சந்திமாலுக்கு போட்டித் தடை : பயிற்சியாளர், முகாமையாளர் மீது குற்றச்சாட்டு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் …

தன்மீதான குறித்த குற்றச்சாட்டை தினேஷ் சந்திமால் ஏற்கனவே மறுத்திருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் கடந்த திங்கட்கிழமை முடிவடைந்த பின்னர், போட்டி மத்தியஸ்தர் ஜவஹல் ஸ்ரீநாத், இலங்கை அணி முகாமைத்துவம் மற்றும் போட்டி நடுவர்களின் முன்னிலையில் விசாரணை இடம்பெற்றது. குறித்த விசாரணையில், தனது வாயில் ஏதோ இட்டதை ஏற்றுக் கொண்ட தினேஷ் சந்திமால், ஆனால் அது என்ன என ஞாபகமில்லை என்று தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து, பந்தின் தன்மையை மாற்ற முயற்சித்தமைக்கான குற்றச்சாட்டில் சந்திமாலுக்கு அதிகபட்ச தண்டனையாக, இரண்டு இடைநிறுத்த புள்ளிகளுடன், போட்டி ஊதியத்தின் 100 சதவீதத்தை அபராதமாக விதிக்க போட்டி மத்தியஸ்தர் நடவடிக்கை எடுத்தார். இரண்டு இடைநிறுத்தப் புள்ளிகள் என்பது ஒரு டெஸ்ட் தடைக்குச் சமம் என்பதால் தினேஷ் சந்திமால் அடுத்து விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, இதனை எதிர்த்தே இன்றைய தினம் (21) தினேஷ் சந்திமால் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் மேன்முறையீடு செய்யதுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதன்படி, சந்திமாலின் மேன்முறையீடு தொடர்பில் .சி.சி விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஒருசில வாரங்கள் தேவைப்படும் என்பதால், மேற்கிந்திய தீவுகளுடன் எதிர்வரும் சனிக்கிழமை (23) நடைபெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவுள்ளது.

இதேநேரம், சந்திமால் தற்போது .சி.சியின் முடிவிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால், அந்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக .சி.சி நிதியாணையாளர் ஒருவரை இன்னும் ஒருசில தினங்களில் நியமிக்கவுள்ளது. எனவே, இதுதொடர்பிலான விசாரணைகள் மேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு .சி.சி தலைமையகமாக டுபாயில் இடம்பெறலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் காலை இரண்டு மணித்தியாலங்களாக இலங்கை அணி மைதானத்திற்குள் களமிறங்க மறுத்த நிலையில், தினேஷ் சந்திமால், இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2.21 சரத்தின் பிரகாரம் கிரிக்கெட்டின் மகத்துவத்தை பாதுகாக்க தவறியதுடன், .சி.சியின் நடத்தைக் கோவையை மீறினார்கள் என தெரிவித்து  அவர்களுக்கு இரண்டு தொடக்கம் நான்கு வரையான டெஸ்ட் போட்டித் தடைகளை விதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டால், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் போட்டித் தொடரையும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளையும் தினேஷ் சந்திமால், அசங்க குருசிங்க, சந்திக்க ஹத்துருசிங்க ஆகிய மூவரும் தவறவிடுவதற்கான  வாய்ப்புகள் காணப்படுகின்றன.

ஒரு நாள் அரங்கில் புதிய உலக சாதனை படைத்த இங்கிலாந்து

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 481 ஓட்டங்களைக் குவித்து …

கடந்த மார்ச் மாதம் தென்னாபிரிக்காவுக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்த முயன்ற சம்பவம் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இதன்பிறகு பந்தை சேதப்படுத்துகின்ற குற்றச்சாட்டில் தொடர்புபடுகின்ற வீரர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என .சி.சி அறிவித்திருந்தது.

எனவே, பந்தைச் சேதப்படுத்த முயலுவதை சர்வதேச கிரிக்கெட் சபை கடுமையாக எதிர்ப்பதை தினேஷ் சந்திமாலுக்கு வழங்கப்பட்ட தண்டணை காண்பிப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை அணி ஒரு போட்டியில் தோல்வியடைந்து, அடுத்த போட்டியை சமநிலையில் நிறைவு செய்து 0-1 என பின்னிலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…