சம்பியன்ஸ் லீக்கில் முதல் இடத்திற்கு முன்னேறிய ஜாவா லேன்

Champions League 2022

268

சம்பியன்ஸ் லீக் 2022 கால்பந்து தொடரில் எட்டாம் வாரத்திற்கான இறுதி இரண்டு போட்டிகள் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்றன. இதில் ஒரு போட்டியில் ஜாவா லேன் அணி வெற்றி பெற, அடுத்த ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

ஏற்கனவே கடந்த வார இறுதியில் இடம்பெற இருந்த இந்த இரண்டு போட்டிகளும் சீரற்ற காலநிலையினால் செவ்வாய்க்கிழமைக்கு மாற்றப்பட்டிருந்தன.

கிறிஸ்டல் பெலஸ் கா.க எதிர் ஜாவா லேன் வி.க

இந்நிலையில் சுகததாச அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் மாலக பெரேரா மற்றும் ஒலவாலே மூலம் ஜாவா லேன் இரண்டு கோல்களைப் பெற்றது.

இந்நிலையில் இரண்டாம் பாதி ஆரம்பமாகிய அடுத்த நிமிடத்தில் ஜாவா லேன் அணிக்கு கிடைத்த பெனால்டியை ஒலவாலே கோலாக்கினார். அதன் பின்னர், ஜிமொவ் இப்ராஹிம் மற்றும் பாசித் அஹமட் மூலம் இரண்டு கோல்களை கிறிஸ்டல் பெலஸ் அணி பெற்ற போதும், நவீன் ஜூட் ஜாவா லேன் அணிக்கு போட்டியின் இறுதி கோலைப் பதிவு செய்தார்.

எனவே, போட்டி நிறைவில் 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் இம்முறை சம்பயின்ஸ் லீக் தொடரில் 7 வெற்றிகள் மற்றும் ஒரு சமநிலையான முடிவுடன் புள்ளிப் பட்டியலில் 22 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

மாத்தறை சிடி கழகம் அதே புள்ளிகளுடன் கோல் வித்தியாச அடிப்படையில் இரண்டாம் இடத்திலும், செரண்டிப் கால்பந்து கழம் 21 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

முழு நேரம்: கிறிஸ்டல் பெலஸ் கா.க 2 – 4 ஜாவா லேன் வி.க

 கோல் பெற்றவர்கள்

கிறிஸ்டல் பெலஸ் கா.க – மாலக பெரேரா 14’, ஒலவாலே 42’ & 46’(P), நவீன் ஜூட் 70

ஜாவா லேன் வி.க – பாசித் அஹமட் 64’, ஜிமொ இப்ராஹிம் 70’(P)  

சென் மேரிஸ் வி.க எதிர் சோண்டர்ஸ் வி.க

குருணாகலை மாலிகாபிடிய அரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் 20 நிமிடங்களில் நிதர்சன் மற்றும் அந்தோனி சார்ஸ் மூலம் சென் மேரிஸ் அணி இரண்டு கோல்களை பெற்றது.

எனினும், அதற்கு பதிலாக சோண்டர்ஸ் அணித் தலைவர் இந்த்ரீவ உதார மற்றும் நிரேஷ் முதல் பாதி நிறைவடைவதற்குள் இரண்டு கோல்களைப் பெற்று போட்டிளை சமப்படுத்தினார்.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 15 நிமிடங்களுக்குள் சோண்டர்ஸ் பின்கள வீரர் சஞ்சுக பிரியதர்சன அவ்வணிக்கு கிடைத்த கோணர் வாய்ப்பின்போது உள்வந்த பந்தை ஹெடர் செய்து அடுத்த கோலைப் பெற்று போட்டியில் சோண்டர்ஸை முன்னிலையடையச் செய்தார்.

எனினும், போட்டியின் 67ஆவது நிமிடத்தில் ஞானரூபன் வினோத் சென் மேரிஸ் அணிக்கான அடுத்த கோலைப் போட்டு ஆட்டத்தை சமப்படுத்த, போட்டியின் மேலதிக கோல்கள் பெறப்படவில்லை. எனவே, ஆட்டம் தலா 3 கோல்களுடன் நிறைவுற்றது.

முழு நேரம்: சென் மேரிஸ் வி.க 3 – 3 சோண்டர்ஸ் வி.க

கோல் பெற்றவர்கள்

சென் மேரிஸ் வி.க – மரியதாஸ் நிதர்சன் 9’, அந்தோனி சார்ஸ் 18’, ஞானரூபன் வினோத் 67’

சோண்டர்ஸ் வி.க – இந்த்ரீவ உதார 34’, சுந்தரராஜ் நிரேஷ் 43’, சஞ்சுக பிரியதர்சன 58’

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<