வெற்றிகளை சுவைத்த ஜாவா லேன், சோண்டர்ஸ், மாத்தறை சிடி

Champions League 2022

260

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சம்பியன்ஸ் லீக் 2022 கால்பந்து தொடரில் ஏழாவது வாரத்திற்கான 4 போட்டிகள் சனிக்கிழமை (30) இடம்பெற்றன. அவற்றில் ஜாவா லேன், சோண்டர்ஸ் மற்றும் மாத்தறை சிடி அணிகள் வெற்றியைப் பதிவு செய்ய ஒரு ஆட்டம் சமநிலையில் நிறைவுற்றது.

சென் மேரிஸ் வி.க எதிர் ஜாவா லேன் வி.க

குருணாகலை மாலிகாபிடிய அரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியின் 29ஆவது நிமிடத்தில் வெளிநாட்டு வீரர் ஒலவாலேயினால் ஜாவா லேன் முதல் கோலைப் பெற்றது. அதற்கு பதிலாக முதல் பாதியின் உபாதையீடு நேரத்தில் ஞானரூபன் வினோத் சென் மேரிஸ் அணிக்கான கோலைப் போட்டு, முதல் பாதியை தலா ஒரு கோலுடன் சமநிலையில் நிறைவடையச் செய்தார்.

இரண்டாம் பாதியில் 90 நிமிடங்கள் வரை மேலதிக கோல்கள் பெறப்படாத நிலையில், போட்டியின் உபாதையீடு நேரத்தில் சென் மேரிஸ் வீரர்கள் தடுப்பில் மேற்கொண்ட தவறைப் பயன்படுத்தி, ஒலவாலே பந்தை முன்னோக்கி எடுத்துச் சென்று போட்டியின் வெற்றி கோலைப் பெற்றார்.

எனவே, இறுதி நிமிடங்களில் பெற்ற கோலினால் 2-1 என வெற்றி பெற்ற ஜாவா லேன் தொடரில் தமது ஆறாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

முழு நேரம்: சென் மேரிஸ் வி.க 1 – 2 ஜாவா லேன் வி.க

 மொறகஸ்முல்ல வி.க எதிர் சோண்டர்ஸ் வி.க

சுகததாச அரங்கில் இந்தப் போட்டி ஆரம்பமான 2ஆவது நிமிடத்திலேயே முன்னாள் தேசிய அணி வீரர் சனோஜ் சமீர மூலம் சோண்டர்ஸ் முதல் கோலைப் பெற்றது. எனினும், அடுத்த நிமிடத்தில் புபுது சகுலந்த மொறகஸ்முல்ல அணிக்கான பதில் கோலைப் பெற்றார். அதனால் முதல் பாதியாட்டம் சமநிலையில் முடிவுற்றது.

இரண்டாம் பாதி ஆரம்பித்து 4 நிமிடங்களில் இளம் வீரர் அண்ட்ரூ வாஸ் மொறகஸ்முல்ல அணிக்கு அடுத்த கோலையும் போட்டு போட்டியில் அணியை முன்னிலை பெறச் செய்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய சோண்டர்ஸ் அணிக்கு சனோஜ் இரண்டாவது கொலையும் போட, ஆட்டத்தின் உபாதையீடு நேரத்தில் டிலான் கௌஷல்ய அவ்வணிக்கான வெற்றி கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

எனவே, போட்டி நிறைவில் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

முழு நேரம்: மொறகஸ்முல்ல வி.க 2 – 3 சோண்டர்ஸ் வி.க

மாத்தறை சிடி க எதிர் SLTB வி.க

மாத்தறை கொடவில விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதி எந்தவொரு கோலும் பெறப்படாத நிலையில் நிறைவுக்கு வந்தது.

எனினும், இம்முறை சம்பியன்ஸ் லீக் தொடரில் மாத்தறை சிடி அணிக்காக தொடர்ந்து கோல்களைப் போட்டு வரும் வெளிநாட்டு வீரர்களான லார்பி பிரின்ஸ் மற்றும் B பிரின்ஸ் ஆகியோர் இரண்டாம் பாதியில் பெற்ற தலா ஒரு கோல்களினால் போட்டி நிறைவில் மாத்தறை சிடி கழகம் 2-0 என வெற்றி பெற்றது.

இதுவரை தாம் விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள மாத்தறை சிடி வீரர்கள் தொடர்ந்தும் புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: மாத்தறை சிடி க 2 – 0 SLTB வி.க

நியூ ஸ்டார் விக.க எதிர் இலங்கை பொலிஸ் வி.க

காலி மாவட்ட விளையாட்டுத் தொகுதி அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முழு நேர முடிவு வரை இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாமையினால் ஆட்டம் சமநிலையடைந்தது.

முழு நேரம்: நியூ ஸ்டார் விக.க 0 – 0 இலங்கை பொலிஸ் வி.க

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<