இரண்டாம் பாதியில் அசத்திய ஜாவா லேன்; நிகம்பு யூத், SLTB அணிகளுக்கு வெற்றி

Champions League 2022

218
Champions League 2022 – Week 6

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஆறாவது வாரத்திற்கான மூன்று போட்டிகள் சனிக்கிழமை (23) இடம்பெற்றன. இந்தப் போட்டிகளில் ஜாவா லேன், நிகம்பு யூத் மற்றும் SLTB அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன.

ஜாவா லேன் வி.க எதிர் நியூ ஸ்டார் வி.க

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 20 நிமிடங்கள் கடந்த நிலையில் நியூ ஸ்டார் அணிக்கு கிடைத்த பிரீ கிக்கை சமீர கிரிஷான்த பெற்றார். அவர் உதைந்த பந்து ஜாவா லேன் கோல் காப்பாளர் அஷ்பாக் ஐயூபின் கைகளில் பட்டு கோலுக்குள் சென்றது.

அடுத்த 10 நிமிடங்களில் இளம் வீரர் சாகிரும் அடுத்த கோலைப் பெற, முதல் பாதி நிறைவில் 2-0 என நியூ ஸ்டார் முன்னிலை பெற்றது.

இதுவரை எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத ஜாவா லேன் அணி, முதல் பாதியில் விளையாடாத தமது அனுபவ வீரர் ரிஸ்கானை இரண்டாம் பாதி ஆரம்பித்தவுடன் மாற்று வீரராக களமிறக்கியது. அதற்கு பலனாக இரண்டாம் பாதி ஆரம்பமாகி 3 நிமிடங்களுக்குள் ரிஸ்கான் மத்திய களத்தில் இருந்து வேகமாக உயர்த்தி பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

அடுத்த 3 நிமிடங்களில் நவீன் ஜூட் ஜாவா லேன் அணிக்கான அடுத்த கோலையும் பெற்றார். அதன் பின்னர் ஜாவா லேன் வீரர்கள் முழுமையாக போட்டியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதன் விளைவாக முழு நேரம் முடியும்போது மேலும் 3 கோல்களை ஜாவா லேன் வீரர்கள் பெற, போட்டியில் 5-2 என்ற கோல்கள் கணக்கில் ஜாவா லேன் அணி வெற்றி பெற்று, தோல்வி காணாத அணியாக சம்பியன்ஸ் லீக் தொடரில் இருக்கின்றது.

முழு நேரம்: ஜாவா லேன் வி.க 5 – 2 நியூ ஸ்டார் வி.க

நிகம்பு யூத் கா.க எதிர் சோண்டர்ஸ் வி.க

காலி மாவட்ட விளையாட்டு தொகுதி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் பாதியில் நிகம்பு யூத் அணிக்காக அந்தோனி இரண்டு கோல்களையும் நிலூக ஜனித் ஒரு கோலினையும் பெற, சோண்டர்ஸ் அணிக்காக நாலக ஒரு கோலைப் பெற்றார்.

இரண்டு கோல்கள் முன்னிலையில் இரண்டாம் பாதியை ஆரம்பித்த நிகம்பு யூத் அணிக்கு அந்தோனி மற்றும் நிலூக ஆகியோர் மேலும் ஒரு கொலைப் பெற்றுக் கொடுக்க, சோண்டர்ஸ் அணியின் தலைவர் இந்ரீவ உதார அவ்வணிக்காக ஒரு கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

எனவே, போட்டி நிறைவில் 5-2 என மூன்று கோல்கள் வித்தியாசத்தில் நிகம்பூ யூத் அணி வெற்றியைப் பதிவு செய்தது.

முழு நேரம்: நிகம்பு யூத் கா.க 5 – 2 சோண்டர்ஸ் வி.க

சொலிட் வி.க எதிர் SLTB வி.க

குருணாகலை மாலிகாபிடிய அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 10ஆவது நிமிடத்தில் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) விளையாட்டுக் கழக வீரர் மிஷால் ஓன் கோல் முறையில் சொலிட் அணிக்கு ஒரு கோலை வழங்கினார்.

எனினும், முதல் பாதியில் 14 நிமிட இடைவெளியில் SLTB அணிக்காக விஜேசுந்தரம் யோகேஷ் இரண்டு கோல்களையும் சரீக் அஹமட் ஒரு கோலையும் பெற, முதல் பாதி நிறைவடையும்போது SLTB அணியினர் 3-1 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றனர்.

எனினும், இரண்டாம் பாதியில் SLTB வீரர்கள் எந்தவொரு கோலையும் பெறவில்லை. சொலிட் அணியின் வெளிநாட்டு வீரர் டேனியல் போட்டியின் 84ஆவது நிமிடத்தில் இரண்டாவது மஞ்சள் அட்டையையும் பெற சிவப்பு அட்டையுடன் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் 10 வீரர்களுடன் ஆடிய சொலிட் அணிக்கு போட்டியின் 90ஆவது நிமிடத்தில் நிஷான்த ஒரு கோலைப் பெற்ற போதும் போட்டி நிறைவில் 3-2 என்ற கோல்கள் கணக்கில் SLTB வீரர்கள் வெற்றியை சுவைத்தனர்.

முழு நேரம்: சொலிட் வி.க 2 – 3 SLTB வி.க

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<