சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை உறுதி செய்த மாத்தறை சிடி

Champions League 2022

135
Champions League 2022
Image Courtesy - Football Sri Lanka

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 12ஆவது வாரத்திற்கான முதல் நாள் போட்டிகளின் முடிவுகளின்படி, தொடரின் சம்பியன் கிண்ணத்தை வெல்லும் அணியாக மாத்தறை சிடி கழகம் தம்மை உறுதி செய்துகொண்டது.

தொடரின் 12ஆவது வாரத்திற்கான முதல் நாள் போட்டிகள் சனிக்கிழமை (3) நாட்டின் பல பகுதிகளிலும் நான்கு ஆட்டங்கள் இடம்பெற்றன. குறித்த நான்கு போட்டிகளினதும் சுருக்கம் கீழே.

ஜாவா லேன் வி.க எதிர் செரண்டிப் கா. க

சிறந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் குருணாகலை மாலிகாபிடிய விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டி ஜாவா லேன் அணிக்கு மிகவும் முக்கிய போட்டியாக அமைந்தது.

மாத்தறை சிடி அணி இந்த வார போட்டியில் தோல்வியடைந்தால், இறுதி வாரப் போட்டியில் ஜாவா லேன் அணி மாத்தறை சிடி அணியை வெற்றி கொள்ளும் பட்சத்தில், ஜாவா லேன் அணி சம்பியன்ஸ் லீக்கின் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு இருந்தது.

எனினும், இந்தப் போட்டி நிறைவுவரை இரு அணிகளாலும் எந்த கோலும் பெறப்படவில்லை. எனவே, ஆட்டம் சமநிலையடைந்தமையினால் ஜாவா லேன் தொடரில் சம்பியனாகும் வாய்ப்பை இழந்தது.

முழு நேரம்: ஜாவா லேன் வி.க 0 – 0 செரண்டிப் கா. க


சென் மேரிஸ் வி.க எதிர் நிகம்பூ யூத் கா.க

யாழ்ப்பாணம் துரையப்பா அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் சென் மேரிஸ் அணியின் தலைவர் மரியதாஸ் நிதர்சன்

இரண்டு கோல்களையும், நிகம்பு யூத் அணி வீரர் கிறிஸ்டீன் பெர்னாண்டோ ஒரு கோலையும் பெற்றனர்.

போட்டியின் இரண்டாம் பாதியில் மேலதிக கோல்கள் எதுவும் பெறப்படாத நிலையில், போட்டி 2-1 என்ற கோல்கள் கணக்கில் சென் மேரிஸ் அணியின் வெற்றியுடன் நிறைவடைந்தது. இது சென் மேரிஸ் அணி இந்த தொடரில் பதிவு செய்த நான்காவது வெற்றியாகும்.

முழு நேரம்: சென் மேரிஸ் வி.க 2 -1 நிகம்பூ யூத் கா.க


கிறிஸ்டல் பெலஸ் கா.க எதிர் மாத்தறை சிடி க

கண்டி போகம்பரை விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டி மாத்தறை வீரர்களுக்கு தீர்மானம் மிக்க போட்டியாக இருந்தது. மாத்தறை சிடி வெற்றி பெற்றால் தாம் சம்பினாவது உறுதி என்ற நிலையில் ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் பாதி எந்தவொரு கோலும் பெறப்படாத நிலையில் முடிவடைந்தது.

இந்நிலையில், முதல் பாதியில் மாற்று வீரராக வந்த கிறிஸ்டல் பெலஸ் வீரர் ரிபாஸ், இரண்டாம் பாதி ஆரம்பமாகி 5 நிமிடங்கள் கடந்த நிலையில் போட்டியின் முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

எனினும், மாத்தறை சிடி அணிக்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பினை பிரின்ஸ் நேராக கோலுக்குள் செலுத்தி போட்டியை சமப்படுத்தினார். தொடர்ந்து 74ஆவது நிமிடத்தில் பாசித் அஹமட் ஹெடர் முறையில் பெற்ற கோலினால் கிறிஸ்டல் பெலஸ் வீரர்கள் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றனர்.

இந்த போட்டியில் தோல்வியடைந்த போதும், ஜாவா லேன் அணி தமது போட்டியில் சமநிலையான முடிவினைப் பெற்றமையினால், புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகள் முன்னிலையில் (31) உள்ள மாத்தறை சிடி கழகம் இன்னும் ஒரு வாரம் மீதமிருக்கும் நிலையில் இம்முறை சம்பியன்ஸ் லீக் தொடரின் சம்பியனாகத் தெரிவாகியது.

முழு நேரம்: கிறிஸ்டல் பெலஸ் கா.க 2 -1 மாத்தறை சிடி க


நியூ ஸ்டார் வி.க எதிர் சோண்டர்ஸ் வி.க

காலி மாவட்ட விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் பாதியும் கோல்கள் எதுவும் பெறப்படவில்லை.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 4 நிமிடங்களில் சுந்தராஜ் நிரேஷ் சோண்டர்ஸ் அணிக்கான கோலைப் பெற்றுக் கொடுத்தார். பின்னர் எந்த கோலும் பெறப்படாத நிலையில் போட்டியின் இறுதி தருணமான 90ஆவது நிமிடத்தில் நியூ ஸ்டார் அணிக்காக அஹமட் ஆதில் ஒரு கோலைப் பெற, போட்டி தலா ஒரு கோலுடன் சமநிலையில் முடிவடைந்தது.

முழு நேரம்: நியூ ஸ்டார் வி.க 1 – 1 சோண்டர்ஸ் வி.க

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<