மஹேலவின் கழகத்தில் இணைகிறார் குசல் மெண்டிஸ்

2900

உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காக (CCC) விளையாடி வந்த குசல் மெண்டிஸ், போட்டித் தடைக்குப் பிறகு எஸ்எஸ்சி (SSC) கழகத்துடன் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் இளம் துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ், 2015 முதல் தொடர்ச்சியாக 6 ஆண்டுகளாக கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்காக (CCC) விளையாடி வருகின்றார்.

இந்த நிலையில், தற்போது ஓராண்டு போட்டித் தடைக்குள்ளாகியுள்ள அவர், எதிர்வரும் காலங்களில் நடைபெறுகின்ற முதல்தரப் போட்டிகளில் SSC அணிக்காக விளையாடுவதற்கு தீர்மானித்துள்ளார்.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகின்ற பல வீரர்கள் SSC கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அதேநேரம், இலங்கையின் முன்னாள் வீரரான திலின கண்டம்பி அந்த கழகத்தின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மெண்டிஸ், டிக்வெல்ல, குணதிலக்கவுக்கு ஓராண்டு தடை ; 1 கோடி அபராதம்

அதுமாத்திரமின்றி, இலங்கை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான மஹேல ஜயவர்தன, SSC கழகத்தின் கிரிக்கெட் குழுவின் பிரதானியாகவும் செயல்பட்டு வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதுஇவ்வாறிருக்க, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகிய மூன்று வீரர்களுக்கும் சர்வதேச கிரிக்கெட்டில் ஓராண்டு போட்டித் தடையும், உள்ளூர் கிரிக்கெட்டில் 6 மாதகால போட்டித் தடையும் இலங்கை கிரிக்கெட் சபையினால் விதிக்கப்பட்டது.

Video – கேள்விக்குறியாகும் மூன்று வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை?| Sports RoundUp – Epi 168

எவ்வாறாயினும், குறித்த மூன்று வீரர்களினதும் உள்ளூர் போட்டித் தடையை குறைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை கவனம் செலுத்தியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் குறித்த மூன்று வீரர்களும் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<