இலங்கையரின் பயிற்றுவிப்பில் பங்களாதேஷுக்கு கன்னி உலகக் கிண்ணம்

69
Image Courtesy - Cricketworldcup Twitter

ஐ.சி.சி இளையோர் உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான இந்திய இளையோர் அணியை டக்வத் லூவிஸ் முறைப்படி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பங்களாதேஷ் அணி முதல் முறையாக சம்பியனாக முடிசூடியுள்ளது. 

மிகவும் விறுவிறுப்புக்கு மத்தியில் ஆரம்பமான இந்த இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய இளையோர் அணிக்கு வழங்கியது.

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்…….

அதன்படி, களமிறங்கிய இந்திய இளையோர் அணி முதல் விக்கெட்டினை 9 ஓட்டங்களுக்கு இழந்த போதும், யஸஷ்வி ஜெய்ஷ்வால் மற்றும் திலக் வர்மா ஆகியோரின் இரண்டாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்துடன் வலுவான ஓட்ட எண்ணிக்கையை அடைந்தது.

ஆனாலும், ஒரு கட்டத்தில் யஸஷ்வி ஜெய்ஷ்வால், இந்திய அணி 153 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழக்க, பின்னர் வருகைதந்த துடுப்பாட்ட வீரர்கள் இந்திய இளையோர் அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருந்தனர். இதனால், 153 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்திருந்த இந்திய இளையோர் அணி 47.2 ஓவர்களில் 177 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக யஸஷ்வி ஜெய்ஷ்வால் 88 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, திலக் வர்மா 38 ஓட்டங்களையும், த்ரூவ் ஜூரல் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பங்களாதேஷ் இளையோர் அணி சார்பில், அவிஷேக் டாஸ் 3 விக்கெட்டுகளையும், சொரிபுல் இஸ்லாம் மற்றும் தன்ஸிம் ஹசன் சகிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய பங்களாதேஷ் அணி ஆரம்ப விக்கெட்டுக்காக 50 ஓட்டங்களை பகிர்ந்த போதும், அதன் பின்னர் ரவி பிஷ்னோயின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு கட்டத்தில் 102 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பங்களாதேஷ் அணி பறிகொடுத்தது. 

எனினும், பங்களாதேஷ் அணித் தலைவர் அக்பர் அலியின் நிதான துடுப்பாட்டம் மற்றும் பர்வெஸ் ஹொசைன் எமோன் ஆகியோரின் மிகச்சிறந்த துடுப்பாட்டத்துடன் பங்களாதேஷ் அணி 42.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி 54 பந்துகளுக்கு 15 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில், மழைக்குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் 46 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டதுடன், வெற்றி இலக்காக 170 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஓட்ட எண்ணிக்கையை பங்களாதேஷ் அணி இலகுவாக கடந்து வெற்றியை பெற்றுக்கொண்டது.

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்…….

பங்களாதேஷ் அணியை பொருத்தவரை பர்வெஸ் ஹொசைன் எமோன் 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற அணித் தலைவர் அக்பர் அலி ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்திய இளையோர் அணியின் பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி, நான்கு தடவைகள் சம்பியனான நடப்பு சம்பியன் இந்திய அணியை, முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பங்களாதேஷ் இளையோர் அணி வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

இந்திய இளையோர் அணி – 177 (47.2) – யஸஷ்வி ஜெய்ஸ்வால் 88, திலக் வர்மா 38, த்ரூவ் ஜூரல் 22, அவிஷேக் டாஸ் 40/3, சொரிபுல் இஸ்லாம் 31/2, தன்ஸிம் ஹசன் 28/2

பங்களாதேஷ் இளையோர் அணி – 170/7 (42.1 D/L) – பர்வெஸ் ஹொசைன் எமோன் 47, அக்பர் அலி 43*, ரவி பிஷ்னோய் 30/4

முடிவு – பங்களாதேஷ் இளையோர் அணி டக்வத் லூவிஸ் முறைப்படி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆட்ட நாயகன் – அக்பர் அலி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<