சம்பியன் கிண்ணத்தை நெருங்கிய மாத்தறை சிடி; ஜாவா லேன், செரண்டிப் பின்னடைவு

Champions League 2022

242

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் பதினொராவது வாரத்திற்கான போட்டிகளின் முடிவுகளின்படி, முதல் இடத்தில் இருக்கும் மாத்தறை சிடி அணியினர் சம்பியன் கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளனர்.

அதேபோன்று, கிண்ணத்திற்கான போட்டியில் இருக்கும் இரண்டு அணிகளான ஜாவா லேன் மற்றும் செரண்டிப் அணிகள் பாதகமான முடிவுகளை பெற்றுள்ளன.

பெலிகன்ஸ் வி.க எதிர் எதிர் ஜாவா லேன் வி.க

இந்த தொடரில் உள்ள பலமிக்க இரண்டு அணிகளாக உள்ள பெலிகன்ஸ் மற்றும் ஜாவா லேன் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி குருணாகலை மாலிகாபிடிய அரங்கில் இடம்பெற்றது.

போட்டியின் முதல் கோலை ஜாவா லேன் வீரர் நவீன் ஜூட் 14ஆவது நிமிடத்தில் பெற்றறுக் கொடுத்தார். எனினும், நப்ஷான் மொஹமட் மற்றும் லஹிரு சம்பத் ஆகியோர் மூலம் பெலிகன்ஸ் முதல் பாதியில் இரண்டு கோல்களைப் பெற்றது.

மீண்டும் இரண்டாம் பாதியிலும் நப்ஷான் மேலும் ஒரு கோலைப் பெற, போட்டி நிறைவில் 3-1 என வெற்றி பெற்ற பெலிகன்ஸ் அணியினர், 20 புள்ளிகளுடன் சம்பியன்ஸ் லீக் தொடரில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கிண்ணத்திற்காக மாத்தறை சிடி அணியுடன் போட்டி போட்டுக்கொண்டுள்ள ஜாவா லேன் அணிக்கு இந்த தோல்வி பெரிய சவாலாக மாறியுள்ளது. ஜாவா லேன் அணி தற்போது 26 புள்ளிகளுடன் தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

சென் மேரிஸ் வி.க எதிர் சொலிட் வி.க

யாழ்ப்பாணம் துரையப்பா அரங்கில் இந்தப் போட்டி ஆரம்பமாகி 15 நிமிடங்கள் நிறைவடைவதற்குள் ஞானரூபன் வினோத் மூலம் சென் மேரிஸ் அணி இரு கோல்களைப் பெற, சொலிட் அணிக்காக சமித் மதுரங்க மற்றும் மதுரங்க மென்டிஸ் ஆகியோர் தலா ஒரு கோல்களைப் பெற்றனர்.

தொடர்ந்து தலா இரண்டு கோல்களுடன் சமநிலையில் இரண்டதம் பாதி ஆரம்பமாகி 5 நிமிடங்களில் மரியதாஸ் நிதர்சன் சென் மேரிஸ் அணிக்கான மூன்றாவது கோலைப் பெற, அடுத்த 6 நிமிடங்களில் சமித் மதுரங்கவுமு் தனது இரண்டாம் கோலை பதிவு செய்தார்.

எனவே, ஆட்டம் 3-3 என்ற கோல்கள் கணக்கில் சமநிலை பெற்றது.

சுபர் சன் வி.க எதிர் SLTB வி.க

சுகததாச அரங்கில் சனிக்கிழமை இடம்பெற்ற இந்தப் போட்டியின் மூன்றாம் நிமிடம் முடிவடைவதற்குள் SLTB அணி சரீக் அஹமட் மற்றும் கிறிஷான்தன் ஆகியோர் மூலம் இரண்டு கோல்களைப் பெற்றனர்.

பதிலுக்கு முதல் பாதி நிறைவடைய முன்னர் ஹசித பிரியன்கர சுப் சன் அணிக்கான இரண்டு கோல்களைப் பெற்றுக் கொடுத்தார். போட்டியின் இரண்டாம் பாதியில் எந்தவொரு கோலும் பெறப்படாத நிலையில் ஆட்டம் தலா இரண்டு கோல்களுடன் சமநிலையடைந்தது.

மாத்தறை சிடி க எதிர் நியூ ஸ்டார் வி.க

காலி மாவட்ட விளையாட்டு தொகுதி அரங்கில் சனிக்கிழமை இடம்பெற்ற இந்த மோதலின் முதல் பாதியில் பிரின்ஸ் மற்றும் இரண்டாம் பாதியில் இளம் வீரர் ரெஹான் வீரப்புலியும் பெற்ற கோல்களினால், மாத்தறை சிடி கழகம் 2-0 என இலகுவாக வெற்றி பெற்றது.

இந்த வெற்றியினால் புள்ளிப் பட்டியலில் 31 புள்ளிகளைப் பெற்றுள்ள மாத்தறை சிடி, ஜாவா லேன் அணியை விட 5 புள்ளிகள் முன்னிலையுடன் தொடரில் சம்பியனாவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.

நிகம்பூ யூத் வி.க எதிர் மொறகஸ்முல்ல வி.க

ஞாயிற்றுக்கிழமை காலி மாவட்ட விளையாட்டு தொகுதி அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் நிகம்பு யூத் அணித் தலைவர் நிலுக ஜனித் போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

இரண்டாம் பாதியில் டிலான் மதுசங்க மற்றும் தனன்ஜய ஆகியோர் மொறகஸ்முல்ல விளையாட்டு கழகத்திற்காக இரண்டு கோல்களைப் பெற, 2-1 என்ற கோல்கள் கணக்கில் அவ்வணி வெற்றி பெற்றது.

சோண்டர்ஸ் வி.க எதிர் இலங்கை பொலிஸ் வி.க

சுகததாச அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் சோண்டர்ஸ் அணிக்காக சுந்தராஜ் நிரேஷ், இந்த்ரீவ உதார மற்றும் மற்றும் டிலான் கௌஷல்ய ஆகியோர் கோல்களைப் பெற, பொலிஸ் அணி சார்பாக தமித் பதிரன மற்றும் மதுக சிறிவர்தன ஆகியோர் கோல் பெற்றனர்.

எனவே, மேலதிக ஒரு கோலினால் 3-2 என்ற கோல்கள் கணக்கில் சோண்டர்ஸ் விளையாடுக் கழகம் வெற்றி பெற்றது.

செரண்டிப் கா.க எதிர் கிறிஸ்டல் பெலஸ் கா.க

 மாலிகாபிடிய அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் அசன்டெ எவன்சின் கோலினால் செரண்டிப் முன்னிலை பெற்றிருந்தது. எனினும், இரண்டாம் பாதியில் கிறிஸ்டல் பெலஸ் வீரர் ஸாகிர் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்று அவ்வணியை முன்னலைப்படுத்தினார்.

எனினும், மாற்று வீரராக வந்த ரியாஸ் மொஹமட் செரண்டிப் அணிக்கான இரண்டாவது கோலைப் பதிவு செய்ய, போட்டி 2-2 என சமநிலையடைந்தது.

10 வார நிறைவில் புள்ளிப் பட்டியல்

                                   >> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<