ஐ.சி.சி. இன் மாதத்திற்குரிய சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்குரிய பரிந்துரையில் சமரி அத்தபத்து

227
Chamari Athapaththu

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியான சமரி அத்தபத்து, இந்த மாதத்துக்கான ஐ.சி.சி. இன் சிறந்த வீராங்கனைகளுக்கான பரிந்துரையில் இடம் பிடித்திருக்கின்றார்.

>> கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான குசல் மெண்டிஸ்

சமரி அத்தபத்து அண்மையில் நிறைவுக்கு வந்த பொதுநலவாய தகுதிகாண் T20 கிரிக்கெட் சுற்றுத் தொடரில், தொடர்ச்சியாக திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததோடு, குறித்த தொடரின் தொடர் நாயகிக்குரிய விருதினையும் வென்றிருந்தார்.

இதேநேரம் பொதுநலவாய தகுதிகாண் கிரிக்கெட் சுற்றுத் தொடரில், இலங்கை மகளிர் அணி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று சம்பியன் பட்டம் பெறுவதற்கும் முக்கிய பங்காற்றிய சமரி அதன் மூலம், 2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவின் மகளிர் T20 தொடரில் இலங்கை தெரிவாகுவதற்கும் காரணமாக அமைந்திருந்தார்.

இவ்வாறு தொடர்ச்சியாக திறைமைகளை வெளிப்படுத்தியமை, சமரி அத்தபத்துவினை இந்த மாதத்திற்குரிய ஐ.சி.சி. இன் சிறந்த வீராங்கனைகளுக்குரிய பரிந்துரையில் உள்வாங்குவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

>> இலங்கை T20I தொடரில் இணைக்கப்பட்ட டேனியல் சேம்ஸ்

அதேவேளை சமரி அத்தபத்து தவிர இந்த மாதத்திற்கான சிறந்த வீராங்கனைகள் பரிந்துரையில் மேற்கிந்திய தீவுகளின் டீன்ட்ரா டொட்டின் மற்றும் இங்கிலாந்தின் ஹீத்தர் நைட் ஆகியோரும் இடம்பெற்றிருக்கின்றனர்.

இதில் டீன்ட்ரா டொட்டின் தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிரான தொடரில் வெளிப்படுத்திய ஆட்டத்திற்காகவும், ஹீத்தர் நைட் மகளிர் ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக வெளிப்படுத்திய ஆட்டத்திற்காகவும், சிறந்த வீராங்கனைகளுக்கான பரிந்துரையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.

இதேநேரம் ஆடவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐ.சி.சி. இன் இந்த மாதத்திற்கான சிறந்த வீரர்கள் பரிந்துரையில் தென்னாபிரிக்க 19 வயது கிரிக்கெட் அணி துடுப்பாட்ட வீரர் டேவால்ட் ப்ரேவிஸ், பங்களாதேஷ் அணியின் இபாடட் ஹொசைன் மற்றும் தென்னாபிரிக்க டெஸ்ட் அணி வீரர் கீக்கன் பீட்டர்சன் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

இம்மாதத்திற்கான சிறந்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களுக்கான பரிந்துரையில் உள்ளடக்கப்பட்டவர்களில், வெற்றியாளராகும் வீர, வீராங்கனைகள் ஐ.சி.சி. இன் சுயாதீன குழு வழங்குகின்ற வாக்குகளின் அடிப்படையிலும், இரசிகர்கள் வழங்குகின்ற வாக்குகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<