வடமாகாண விளையாட்டு விழாவில் இரட்டைச் சாதனை படைத்த பிரகாஷ்ராஜ், கிந்துசன்

107

வட மாகாண விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான தட்டெறிதல் மற்றும் சம்மெட்டி எறிதலில் எஸ். பிரகாஷ்ராஜ் மற்றும் ஆண்களுக்கான 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகளில் எஸ். கிந்துசன் ஆகிய இருவரும் இரட்டைச் சாதனைகளை நிலைநாட்டினர்.

அத்துடன், இவ்வீரர்கள் இருவரும் தத்தமது பயிற்சியாளர்களின் முன்னைய சாதனைகளை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

Photos: Northern provincial Sports Festival- 2019 | Day 2

ThePapare.com | Murugaiah Saravanan | 09/09/2019 Editing and re-using images …

வட மாகாண சபையும், வட மாகாண விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 13ஆவது வட மாகாண விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த கடந்த 07ஆம், 08ஆம் திகதிகளில் யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெற்றது.

ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட எஸ்.பிராகாஷ்ராஜ்,  42.15 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். 

முன்னதாக 2018ஆம் ஆண்டு நிலைநாட்டப்பட்ட (36.12 மீற்றர்) தனது சொந்த சாதனையை பிரகாஷ்ராஜ் இம்முறை போட்டிகளில் முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இந்நிலையில்,  சம்மட்டி எறிதலில் பிரகாஷ்ராஜுடன் போட்டியிட்ட வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சி. ஜெனோஜன் (33.88 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும்,  யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த வி. ஜதார்தன் (30.12 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.

இது இவ்வாறிருக்க, போட்டிகளின் முதல் நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்துகொண்ட பிரகாஷ்ராஜ், 40.35 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

முன்னதாக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற வட மாகாண விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய வி. ஹரிகரன் (39.13 மீற்றர்) நிகழ்த்திய சாதனையை சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு பிரகாஷ்ராஜ் முறியடித்திருந்தார்.

இதேவேளை, குறித்த போட்டியில் கலந்துகொண்ட யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ் (36.35 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும்,  வி. ஜதார்தன் (33.99 மீற்றர்), வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

யாழ் ஹார்ட்லி கல்லூரி மாணவர்களான பிரகாஷ்ராஜ் மற்றும் மிதுன்ராஜ் ஆகிய இரண்டு வீரர்களும் ஹரிகரனிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

கிந்துசனுக்கு இரட்டைத் தங்கம்

நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக வட மாகாணத்துக்கு பெருமையைத் தேடிக் கொடுத்து வருகின்ற எஸ்.கிந்துசன், இம்முறை வட மாகாண விளையாட்டு விழாவில் இரண்டு போட்டிச் சாதனைகளை நிகழ்த்தினார். 

போட்டிகளிள் முதல் நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டம் சார்பில் போட்டியிட்ட எஸ். கிந்துசன் 33 நிமிடங்கள் 57.9 செக்கன்களில் ஓடி முடித்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். 

முன்னதாக 2013 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய தேவராசாவினால் (34 நிமி. 04.6 செக்.) நிலைநாட்டிய சாதனையை சுமார் 6 வருடங்களுக்குப் பிறகு கிந்துசன் முறியடித்தார். 

குறித்த போட்டியில் வவுனியா மாவட்டம் சார்பில் கலந்துகொண்ட நிசோபன் (36 நிமி. 24.07 செக்.) மற்றும் கனகரெத்தினம் (37 நிமி. 49.7 செக்.) ஆகிய இருவரும் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டனர். 

இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட கிந்துசன், போட்டித் தூரத்தை 16 நிமிடங்கள் 10.6 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். 

கிந்துசனின் பயிற்சியாளரான க. நவனீதனால் 2016 ஆம் ஆண்டு நிலைநாட்டிய சாதனையை 3 வருடங்களுக்குப் பிறகு அவர் முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

குறித்த போட்டியில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கே. நிசோபன் (16 நிமி. 56.06 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும்,  யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜே. சுஜிகரன் (17 நிமி. 42.5 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இறுதியாக…

கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை சார்பாக போட்டியிட்ட இவ்விரண்டு வீரர்களும்,  வட மாகாணத்துக்கு பெருமையைத் தேடிக் கொடுத்தனர்.

அதிலும் குறிப்பாக, இவ்விரண்டு இளம் வீரர்களினதும் பயிற்சியாளர்களான ஹரிஹரன் மற்றும் நவநீதன் ஆகிய இருவரும் வட மாகாணம் சார்பாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குகொண்டு பதக்கங்களை வென்ற முன்னாள் வீரர்கள் என்றால் மிகையாகாது.

எனவே இவர்களது பயிற்றுவிப்பில் அண்மைக்காலமாக கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பல வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களையும் வென்று வருகின்றதையும் இந்தக் கட்டுரையின் மூலம் ஞாபகப்படுத்துகின்றோம். 

ஆகவே, எந்தவொரு அடிப்படை வசதிகளும் இன்றி, கிடைக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி தேசிய மட்டத்தில் பிரகாசிக்கின்ற வீரர்களை உருவாக்கி வருகின்ற இவ்விரண்டு பயிற்சியாளர்களின் சேவை தொடர வேண்டும் எனவும், வட மாகாணத்துக்கும்,  இலங்கைக்கும் பெருமையை தேடிக் கொடுக்கின்ற இன்னும் பல வீரர்களை முன்னுக்கு கொண்டுவர வேண்டும் என ThaPapare.com இணையத்தளத்தின் வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேபோல, பாடசாலை மாணவர்களாக இருக்கும்போதே தத்தமது போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி அதில் சாதனையும் படைத்து வட மாகாணத்தின் நடப்புச் சம்பியன்களாக உள்ள எஸ். பிரஸ்காஷ்ராஜ் மற்றும் எஸ். கிந்துசனுக்கும் இன்னும் இன்னும் பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க…