மைலோ கிண்ணத்திற்கான பாடசாலை மட்டத்திலான றகர் போட்டிகளில், அரையிறுதிப் போட்டிகள் இவ்வாரம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் லீக் வெற்றியாளர்களான இசிபதன கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவாகின.

இசிபதன மற்றும் புனித பீற்றர்ஸ் கல்லூரிகளுக்கிடையிலான போட்டி

இவ்வருடத்தில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வியுறாத நிலையில் இசிபதன கல்லூரி மைலோ “நொக் அவுட்” போட்டிகளில் கலந்து கொண்டது.  கால் இறுதிப் போட்டியில் டி.எஸ்.சேனநாயக கல்லூரியுடனான போட்டியில் விளையாடாமலே வெற்றியைத்  தக்கவைத்துக் கொண்டு அரை இறுதிக்கு இசிபதன முன்னேறுகையில் அடுத்த முனையில் புனித பீற்றர்ஸ் கல்லூரியானது புனித அந்தோனியர் கல்லூரியுடன் கடினமாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

போட்டியின் ஆரம்பம் முதலே யாரும் எதிர்பார்க்காத வகையில் புனித பீற்றர்ஸ் கல்லூரி தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது. இவ்வருடத்தில் ஒரு போட்டியிலேனும் தோல்வியுறாத இசிபதன கல்லூரியைப் பின்னால் தள்ளி முதல் புள்ளியை புனித பீற்றர்ஸ் கல்லூரி ஸ்டிபன் சிவராஜ் மூலம் பெற்றுக் கொண்டது. அருமையாக செயற்பட்ட சிவராஜ் கோல் கம்பங்களுக்கு நடுவிலேயே “ட்ரை” வைக்க இலகுவாகக் கம்பங்களுக்கு இடையே உதைத்து மேலதிகமான இரண்டு புள்ளிகளையும் பெற்றுக் கொடுத்து பீற்றர்ஸ் கல்லூரியை 7-0 என முன்னிலை அடைய வைத்தார். 20ஆம் மற்றும் 24ஆம் நிமிடங்களில் தமக்குக் கிடைத்த பெனால்டி சந்தர்ப்பத்தைத் தவறவிடாத பீற்றர்ஸ் கல்லூரி சிவராஜ் மூலமாக மேலும் 6 புள்ளிகளைப் பெற்று 13-0 என்று முன்னிலை கொண்டது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இசிபதன கல்லூரி தமது முதல் புள்ளியை “ட்ரை” ஒன்றை வைத்து பதிவு செய்தது. எனினும் கம்பங்களுக்கு இடையே உதைத்து பெறப்படும் மேலதிகமான இரண்டு புள்ளிகளையும் பெறத் தவறவிட்டதால் 5-13 என்று பீற்றர்ஸ் முன்னிலை கொண்டது.

சிறிது நேரத்தின் பின்னர் தமது வழமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இசிபதன கல்லூரி  ரன்கொத்கே மூலமாகக் கம்பத்தின் நடுவிலேயே “ட்ரை” வைத்து தமது பலத்தை நிரூபித்தது. இம்முறை உதையை தவறவிடாத விக்ரமரத்ன மேலும் 2 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்து முதல் பாதி முடிவுறும் நேரத்தில் 12-13 என்ற நிலைக்கு இசிபதன அணியை அழைத்துச் சென்றார். இரண்டாம் பாதியில் இசிபதன அணி தமது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என நினைத்த போதும் பீற்றர்ஸ் கல்லூரியின் தலைவர் ஜெயவிக்ரம 40m தூரம் பந்தை எடுத்துச் சென்று அருமையான “ட்ரை” வைக்க மீண்டும் ஒருமுறை பீற்றர்ஸ் கல்லூரி 20-12 என முன்னிலை கொண்டது. எனினும் தமது ஆட்டத்தை விட்டுக்கொடுக்காத இசிபதன அணி, தலைவர் குஷான் இந்துனில் மூலமாக “ட்ரை” வைத்து 19-20 என புள்ளி வித்தியாசத்தைக் குறைத்துக் கொண்டது.

இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மோதிக்கொள்ள இறுதி 5 நிமிடங்கள் எஞ்சி இருந்த நிலைமையில் இசிபதன அணி “ட்ரை” வைத்து 24-20 என்று வெற்றியை சுவீகரித்தது. லீக் வெற்றியாளர்களான இசிபதன அணிக்கு கடும் சவாலாக அமைந்த பீற்றர்ஸ் கல்லூரி அணி இறுதி நிமிடத்தில் அருமையான வாய்ப்புகளைத் தவறவிட்டதால் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் சந்தர்ப்பத்தை இழந்தது.


றோயல் மற்றும் புனித தோமஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி

லீக் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்ற புனித தோமஸ் கல்லூரி லீக் போட்டிகளில் மூன்றாம் இடத்தைப் பெற்ற றோயல் கல்லூரி அணியுடன் மோதியது. எதிர்பார்க்கப்பட்டது போலவே தோமஸ் அணி ஆரம்பம் முதலே சிறப்பாக செயற்பட்டு பெனால்டி ஒன்றைப் பெற்ற போதும் புள்ளிகள் பெறும் வாய்ப்பைத் தவறவிட்டது. எனினும் தொடர்ந்து றோயல் அணிக்கு அழுத்தம் கொடுத்த தோமஸ் அணி வேன் மெக் மூலம் தனது முதலாவது “ட்ரை” வைத்து புள்ளியைப் பதிவு செய்தது. இம்முறை உதையைத் தவறவிடாத ஹேரத் தோமஸ் அணியை 7-0 என முன்னிலைப்படுத்தினார். எனினும் உடனடியாக தமது பலத்தைக் காட்டிய றோயல் அணி 30m தூர ஒவின் அஸ்க்கேவின்  பெனால்டி ஒன்றின் மூலமாக  3 புள்ளிகளைப் பெற்று 7-3 என்று புள்ளி வித்தியாசத்தைக் குறைத்தது.

தொடர்ந்து தமது திறமையை வெளிக்காட்டிய றோயல் அணி 25 ஆவது நிமிடத்தில் தான் பலம் பெற்ற ரோலிங் மோல் மூலமாக “ட்ரை” வைக்க அஸ்க்கேவின் திறமை மிக்க உதையால் றோயல் அணி போட்டியில் முதல் முறையாக 10-7 என்று முன்னிலை அடைந்தது. முதல் பாதி முடிவுற 5 நிமிடங்களே இருக்கும் நிலையில் தமக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்திய தோமஸ் அணி 3 புள்ளிகளைப் பெற்று 10-10 ஆன போட்டியை சமநிலைக்குக் கொண்டுவந்தது.

இரண்டாம் பாதியில் றோயல் அணியே ஆதிக்கம் செலுத்தியது. தோமஸ் அணி தலைவர் பந்துல டி சில்வா மஞ்சள் அட்டை பெற்று வெளியேற, அதை சாதகமாகப் பயன்படுத்திய றோயல் அணி ரோலிங்  மோல் மூலமாக தனது இரண்டாவது “ட்ரை” வைத்து 17-10 என முன்னிலை கொண்டது. தொடர்ந்து சிறப்பாக செயற்பட்ட றோயல் அணி தோமஸ் அணியிற்கு அழுத்தம் கொடுக்க அதையும் சிறப்பாக எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை தோமஸ் கல்லூரி வெளிப்படுத்தியது. எனினும் றோயல் அணியின் அதிரடியைத் தாக்குப் பிடிக்க முடியாத தோமஸ் அணியின் வீரர்களைத் தாண்டி சென்று றோயல் அணி தலைவர்  நிகில் குணதீர “ட்ரை” வைத்தார். அதைத் தொடர்ந்து அஸ்க்கே உதைத்து மேலும் 2 புள்ளிகளைப் பெற்றுக் கொடுக்க 24-10 என றோயல் கல்லூரி தமது வெற்றியை உறுதிப்படுத்தியது.

இறுதி 20 நிமிடங்களில் தோமஸ் அணியானது தமக்குக் கிடைத்த பல சந்தர்ப்பங்களைத் தவறவிட்டது. பிழையான தீர்மானங்களாலும், பந்து கையாளுவதில் இருந்த தவறுகளாலும் புள்ளிகளைப் பெறத் தவறியது தோமஸ் அணி. இறுதி 20 நிமிடத்தில் ஒரே ஒரு “ட்ரை” மட்டுமே வைக்க முடிந்த தோமஸ் அணியானது நேரம் முடிவு அடையும் போது  15-24 என்ற புள்ளி வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய றோயல் அணியானது இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

மைலோ “நொக் அவுட்” கிண்ணத்திற்கான இறுதி போட்டி றோயல் அணிக்கும் இசிபதன அணிக்கும் இடையில் நடைபெற இருக்கிறது.