இறுதி வரை போராடியும் அரையிறுதி வாய்ப்பை இழந்த யாழ் ஏஞ்சல்

327

இலங்கை முன்னணி பாடசாலை அணிகளுக்கு இடையில் இடம்பெறும் ThePapare கூடைப்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் காலிறுதிப் போட்டியில் கொழும்பு கேட்வே கல்லூரியிடம் 74 – 81 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்த யாழ்ப்பாணம் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

Photos: ThePapare Basketball Championship 2018 – Boys Group Stage | Day 3

ThePapare.com | Viraj Kothalawala | 27/09/2018 Editing and re-using images without permission of ThePapare.com will……

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்து சங்கத்தின் A பிரிவில் உள்ள அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியின் முதல் சுற்றில் குழுநிலைச் சம்பியனாகிய ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை, இன்றைய முதலாவது காலிறுதியில் கேட்வே கல்லூரியை எதிர்கொண்டது.

கொழும்பு ஹென்ரி பீரிஸ் கூடைப்பந்து திடலில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய யாழ்ப்பாண வீரர்கள் முதல் கால் பகுதியை 17-15 என 2 புள்ளிகள் முன்னிலையுடன் நிறைவு செய்தனர்.

தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது கால் பகுதியில் இரண்டு அணி வீரர்களும் புள்ளிகளுக்காக கடுமையாகப் போராடினர். எனினும், தேசிய அணி வீரர் சிம்ரோனின் மிக வேகமான ஆட்டத்தின் துணையுடன் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலை வீரர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்தினர். எனவே, 35-34 என்ற நெருக்கமான முன்னிலையுடன் யாழ்ப்பாண வீரர்கள் போட்டியின் முதல் பாதியை நிறைவு செய்தனர்.

எனினும், மூன்றாவது கால் பகுதியின் 10 நிமிடங்களிலும் கேட்வே கல்லூரி வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் இரண்டு கால் பகுதிகளிலும் பின்னிலை வகித்த அவ்வணியினர், இந்த கால் பகுதியில் மிக வேகமாக அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்றனர்.

>> புகைப்படங்களைப் பார்வையிட <<

அதன் பயனாக அவ்வணியினருக்கு மூன்றாம் கால் பகுதியில் 23 புள்ளிகள் கிடைக்கப்பெற, ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலைக்கு 15 புள்ளிகள் மாத்திரமே கிடைத்தது.  எனவே, மூன்றாம் கால் பகுதி நிறைவில், அபாரம் காண்பித்த கேட்வே கல்லூரி அணியினர் 57 – 50 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றனர்.

தொடர்ந்து, போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது கால் பகுதியில் இரு அணியினரும் சம அளவிலான ஆதிக்கத்தை செலுத்தி தலா 24 புள்ளிகளைப் பெற்றனர். எனினும், மூன்றாவது கால் பகுதியில் பெற்ற முன்னிலையின் உதவியுடன் கேட்வே கல்லூரி அணியினர் போட்டியின் நிறைவில் 81-74 என்ற 7 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியை தமதாக்கினர்.

எனவே, தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகிய முதல் அணியாக கேட்வே கல்லூரி தம்மைப் பதிவு செய்து கொண்டது.  

எவ்வாறிருப்பினும், முதல் முறையாக தேசிய மட்டத்தில் A பிரிவிற்கு முன்னேற்றம் கண்டுள்ள இப்பாடசாலை வீரர்கள் முன்னணி தொடரில் முதல் தடவையிலேயே காலிறுதிவரை முன்னேறியிருந்தமை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையின் குழு மட்ட முடிவுகள்

எதிர் றோயல் கல்லூரி, கொழும்பு  

57-62 (தோல்வி)

எதிர் கொழும்பு சர்வதேசப் பாடசாலை  

70-65 (வெற்றி)

எதிர் லைசியம் சர்வதேசப் பாடசாலை, நுகேகொடை

78-72 (வெற்றி)

எதிர் புனித மைக்கல் கல்லூரி, மட்டக்களப்பு 

74-70 (வெற்றி)

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<