மீண்டும் அணிக்கு திரும்பிய ஜஸ்ப்ரிட் பும்ரா!

England tour of India 2024

69
England tour of India 2024

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கான இந்திய குழாத்தில் ஜஸ்ப்ரிட் பும்ரா இணைக்கப்பட்டுள்ளார்.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரை 3-1 என வெற்றிக்கொண்டுள்ளது.

இதில் நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து விடுவிக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா மீண்டும் அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளார். தொடரை இந்திய அணி கைப்பற்றினாலும், ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகளை கருத்திற்கொண்டு ஜஸ்ப்ரிட் பும்ரா மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.

>>இஷான், ஸ்ரேயாஸ் ஜயரின் ஒப்பந்தத்தை இரத்து செய்த பிசிசிஐ

அதேநேரம் உபாதைக்கு முகங்கொடுத்த கே.எல்.ராஹூல் நான்காவது டெஸ்டிலிருந்து நீக்கப்பட்டிருந்ததுடன், ஐந்தாவது டெஸ்டிலும் இடம்பெறவில்லை. உபாதைக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதன் காரணமாக இவர் அணியில் இடம்பெறவில்லை.

அதேநேரம் சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான வொசிங்டன் சுந்தர் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு அணிக்காக ரஞ்சிக்கிண்ண அரையிறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக விடுவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த போட்டியின் பின்னர் அணியில் இணைந்துக்கொள்வார் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

குறித்த இந்த மூன்று மாற்றங்களை தவிர்த்து நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களும் ஐந்தாவது போட்டிக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அணித்தலைவர் ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் மொஹமட் சிராஜ் போன்ற அனுபவ வீரர்கள் தொடர்ந்தும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

>>பங்களாதேஷ் T20I தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் மார்ச் 7-11ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய குழாம்

ரோஹித் சர்மா (தலைவர்), ஜஸ்ப்ரிட் பும்ரா (உப தலைவர்), யசஷ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரஜத் பட்டிதார், சர்பராஸ் கான், துரூவ் ஜூரல், கே.எஸ். பாரத், தேவ்துத் படிக்கல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ், முகேஷ் குமார், ஆகாஸ் டீப்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<