தொழில்முறை கால்பந்து விளையாட்டுக்கு தயாராகும் உசைன் போல்ட்

852

8 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வென்று உலக சாதனை நாயகனாகத் திகழும் ஜமைக்காவின் உசைன் போல்ட் மெய்வல்லுனர் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றாலும் தன் ஓட்டத்தை கால்பந்தாட்டத்தில் காண்பிக்க முயற்சி செய்து வருகிறார்.

அதேபோன்று கிரிக்கெட் விளையாட்டின் மீதும் உசைன் போல்ட்டுக்கு பெரிய ஆர்வம் உண்டு என்பதை அவரே பலமுறை கூறியுள்ளார்.

இந்நிலையில் 21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவிற்கு விசேட அதிதியாகக் கலந்துகொண்ட உசைன் போல்ட், நேற்று (15) கராரா விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிறைவு நாள் நிகழ்வின் போது ஆட்டம் பாட்டம் என அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

இதேநேரம், மெய்வல்லுனர் அரங்கின் உச்சத்தை தொட்ட போல்ட், மீண்டும் ஒருமுறை போட்டித் தன்மை மிக்க தொழில் முறை விளையாட்டில் களமிறங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

அதிலும் குறிப்பாக கால்பந்து விளையாட்டில் சிறந்த வீரராக மாறுவதற்கான நடவடிக்கைகளை அவர் படிப்படியாக முன்னெடுத்து வருவதாக உசைன் போல்ட் தெரிவித்தார்.

செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள டயலொக் சம்பியன்ஸ் லீக் 2018

கோல்ட் கோஸ்ட் நகரில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

”மீண்டும் மெய்வல்லுனர் விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற துடிப்பு எனக்கு ஏற்படுகின்றது. ஆனால் குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் அல்ல. போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் போது படபடப்பாக இருக்கும். அப்போது மைதானத்திற்குச் சென்று போட்டியிடுமாறு ஆழ் மனம் அடிக்கடி கூறிக் கொண்டே இருக்கும்.

ஏனெனில் போட்டி என்று வந்துவிட்டால் அந்த உணர்வும் இயல்பாகவே வந்துவிடும். நான் எப்போதும் அதி சிறந்தவனாகவே இருக்க விரும்புகின்றேன்” என்றார்.

”இதேநேரம், போட்டிகளில் வெற்றிபெற பயிற்சி மட்டும் போதாது. கடின உழைப்பும் அவசியம். உபாதைகள், அதிலிருந்து மீள்வதற்கு எடுக்கும் காலம் என்பவற்றையும் சிந்திக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் பெரும் கடினமாக இருக்கும். அதிலும் வயது செல்லச்செல்ல அனைத்தும் கடினமாக இருக்கும்” என போல்ட் தெரிவித்தார்.

”இதேவேளை, மெய்வல்லுனர் அரங்கில் சாதிக்க வேண்டியதை சாதித்து முடித்து விட்டேன். இப்போது புதிய இலக்கை நோக்கி நகரவுள்ளேன். அதாவது கால்பந்தாட்டம் விளையாடுவதற்கு தயாராகி வருகின்றேன்.

அது என்னைப் பொறுத்தமட்டில் மிகப் பெரிய விடயம். இது வேடிக்கை அல்ல. நான் உண்மையில் டோர்ட்மண்ட் சென்று இரண்டு வாரங்கள் அங்கு பயிற்சிகனை மேற்கொண்டேன். எனவே புதிய சவாலை நோக்கியதாக எனது அடுத்த இலக்கு அமையும்” எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருடன் 31 வயதான போல்ட், மெய்வல்லுனர் அரங்கிற்கு விடைகொடுத்தார்.

பிரீமியர் லீக் சம்பியனாக முடிசூடிய மென்செஸ்டர் சிட்டி

”என்னுடைய இடத்தை நிரப்புவதற்கு இன்னும் சில காலங்கள் எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோன்று எனது உலக சாதனையும் அவ்வாறு மிக விரைவில் முறியடிக்கப்படமாட்டாது. ஆனால் நிச்சயம் 100 மற்றும் 200 மீற்றர்களில் என்னால் நிலைநாட்டப்பட்ட சாதனைகள் எதிர்காலத்தில் முறியடிக்கப்படும்” என தெரிவித்தார்.

”நான் ஜமைக்காவின் கிராமப்புற பகுதியிலிருந்தே விளையாட்டுக்கு வந்தேன். என்னுடைய சிறு பராயத்தில் தெருக்களில் கால்பந்து விளையாடியுள்ளேன். எந்த நேரத்திலும் நான் இந்த மட்டத்தில் இருப்பேன் என்று நினைக்க மாட்டேன். ஆனால் இப்போது மீண்டும் பின்வரிசையில் அமர்ந்து போட்டிகளைப் பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது.

நான் எல்லா நேரத்திலும் மெய்வல்லுனர் வீரர்களைப் போன்று சாதாரண மக்களிடம் இருந்தும் செய்திகளையும் அறிவுரைகளையும் பெற்று வருகிறேன். அவர்களுடைய வார்த்தைகள் என்னை இன்னும் இன்னும் நன்றாகச் செய்ய தூண்டுகிறது” என்று போல்ட் கூறினார்.

இந்நிலையில், உசைன் போல்ட்டின் ஓய்விற்குப் பிறகு 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஜமைக்காவுக்கு பெருமையைப் பெற்றுக் கொடுக்கும் முக்கிய வீரராக யொஹான் பிளேக் விளங்குகிறார்.

எனினும், இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் அவருக்கு 3ஆவது இடத்தை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் போட்டிக்கு முன்னர் யொஹான் பிளேக்குடன் போல்ட் உரையாடியிருந்ததாகவும், 100 மீற்றரில் தங்கம் வெல்லாமல் நாடு திரும்ப வேண்டாம் என போல்ட் தெரிவித்திருந்ததாக ஊடகவியலாளர் ஒருவர் போல்ட்டிடம் வினவிய போது,

”இது உண்மையில் ஒரு நகைச்சுவை. நான் அவருடன் பேசவில்லை, நான் அவருக்கு எதையும் சொல்லவும் இல்லை. பிளேக் சற்று தடுமாற்றத்துடன் ஓடியிருந்தார். அதிலும், போட்டியின் ஆரம்பம் முதல் ஏதோ ஒரு அச்சத்துடனேயே ஓடியிருந்தார்.

எனினும், தற்போது குறுந்தூரப் போட்டிகளில் தென்னாபிரிக்க வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். எனவே ஜமைக்கா வீரர்கள் எதிர்காலத்தில் இன்னும் அதிக அவதானத்துடன் போட்டியிட வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

சம்பியன் லீக் அரையிறுதியில் ரியல் மெட்ரிட், பயேர்ன் பலப்பரீட்சை

இந்நிலையில், கடந்த வாரம் கோல்ட் கோஸ்ட் நகரிற்கு வருகை தந்திருந்த உசைன் போல்ட், அங்கு இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிறகு கராரா விளையாட்டரங்கில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்றிருந்த ஜமைக்கா நாட்டு வீரர்களுக்கு மைதானம் சென்று உற்சாகப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கான பதக்கங்களையும் வழங்கி வைத்த போல்ட், நேற்று நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்வில் அவுஸ்திரேலிய கலைஞர்களுடன் இணைந்து ஆடிப்பாடி அனைவரையும் சந்தோஷப்படுத்தியிருந்தார்.

இதேவேளை, மென்செஸ்டர் யுனைடெட் அணியின் மிகப் பெரிய ரசிகர் போல்ட். ஆனால் அந்த அணியுடன் இணைந்துகொண்டதாக வெளியான செய்தியை வதந்தி என போல்ட் இதன்போது தெரிவித்தார். அவர் அது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

”நான் மென்செஸ்டர் அணியுடன் இணைந்து கொள்ளவில்லை, ஆனால் எதிர்காலத்தில் அவ்வணிக்காக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.

இந்நிலையில், யுனிசெப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள சொக்கர் எயிட் எனப்படும் கால்பந்தாட்ட தொடரில் உசைன் போல்ட் பங்கேற்கவுள்ளார்.

யுனிசெப் நிறுவனத்துக்கு நிதி சேகரிக்கும் முகமாக நடைபெறவுள்ள உலக பதினொருவர் மற்றும் இங்கிலாந்தின் பிரபல பாடகரான ரொபி வில்லியம்ஸ் தலைமையில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள போட்டியில் உசைன் போல்ட் விளையாடவுள்ளார்.

இந்த போட்டியில் தொழில் முறை உதைப்பந்தாட்ட வீரர்களும் விளையாடவுள்ளனர். இந்த கண்காட்சிப்போட்டி எதிர்வரும் ஜுன் 10ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.