தினேஷின் அபாரத் தடுப்பினால் புளு ஸ்டாரை வீழ்த்தி பொலிஸ் இறுதிப் போட்டியில்

0

களுத்துறை புளு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை பெனால்டியில் 4-2 என வீழ்த்திய இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழக அணி இம்முறை Vantage FA கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.  

இதன் மூலம், கடந்த முறை அரையிறுதியுடன் வெளியேறிய பொலிஸ் அணி, கடந்த முறை Vantage FA கிண்ணத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தை இம்முறை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது.   

புளு ஈகல்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய சோண்டர்ஸ்

Vantage FA கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் புளு ஈகல்ஸ்…

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் சனிக்கிழமை (01) இரண்டாவது அரையிறுதிப் போட்டியாக இது இடம்பெற்றது.

மோதல் ஆரம்பித்த 15 நிமிடங்களும் பொலிஸ் அணியினர் அடுத்தடுத்து தொடர்ச்சியாக வாய்ப்புக்களை ஏற்படுத்தினர். எனினும், புளு ஸ்டாரின் அனுபவ கோல் காப்பாளர் மஞ்சுல பெர்ணான்டோ அவை அனைத்தையும் சிறந்த முறையில் தடுத்தார்.

20 நிமிடங்களின் பின்னர் கோலுக்கு எதிரில் பொலிஸ் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை சதுர குனரத் பெற்றார். அவர் புளு ஸ்டார் கோலின் இடது பக்கத்தினால் செலுத்திய பந்தை கோல் காப்பாளர் மஞ்சுல பெர்ணான்டோ பிடித்தார்.

34 ஆவது நிமிடத்தில் மீண்டும் பொலிஸ் வீரர்கள் அடுத்தடுத்து மேற்கொண்ட கோலுக்கான முயற்சிகளின் பின்னர் கோல் நோக்கி உதையப்பட்ட பந்தை மஞ்சுல பிடித்தார்

முதல் பாதி முழுவதும் பொலிஸ் வீரர்கள் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டினாலும் கோல் எதுவும் பெறப்படாமல் முதல் பாதி நிறைவுற்றது

முதல் பாதி: பொலிஸ் வி.க 0 – 0 புளு ஸ்டார் வி.க

இண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமாகியவுடன் பொலிஸ் வீரர்கள் புளு ஸ்டார் கோல் எல்லையில் மேற்கொண்ட இரண்டு கோல் முயற்சிகளையும் மஞ்சுல தடுத்தார்.

சில நிமிடங்களில் புளு ஸ்டார் வீரர்கள் உயர்த்தி பொலிஸ் கோல் திசைக்கு செலுத்திய பந்தை கோல் காப்பாளர் மஹேந்திரன் தினேஷ் பாய்ந்து பிடித்தார்.

60 ஆவது நிமிடத்தில் ரிப்கான் மொஹமட் மற்றும் இம்ரான் ஆகியோரிடையிலான பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் ரிப்கான் கோல் நோக்கி உதைந்த பந்து கம்பத்தை விட்டு வெளியே சென்றது

இரண்டாம் பாதியில் புளு ஸ்டாருக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக ஷன்ன உள்ளனுப்பிய கோணர் பந்தை சஹ்லான் ஹெடர் செய்ய இடது பக்க கம்பத்தை அண்மித்து பந்து வெளியே சென்றது.  

80 நிமிடங்கள் கடந்த நிலையில் புளு ஸ்டார் வீரர் மசீர் கோல் நோக்கி உதைந்த பந்தை தினேஷ் பாய்ந்து வெளியே தட்டி விட்டார். இதன்போது கிடைத்த கோணர் உதையின்போது தினேஷ் தட்டி விட்ட பந்தை மசீர் மிக வேகமாக கோலுக்கு உதைய அதையும் தினேஷ் பாய்ந்து தடுத்தார். மீண்டும் புளு ஸ்டார் வீரர்கள் கோல் திசைக்குள் செலுத்திய பந்தையும் தினேஷ் பற்றிக் கொண்டார்.

பொலிஸ் அணிக்காக ரிப்கான் மொஹமட் ஏற்படுத்திய சிறந்த பந்துப் பரிமாற்றங்களையும் கோல் வாய்ப்புக்களையும் ஏனைய வீரர்கள் சிறப்பாக நிறைவு செய்யத் தவறியமை அவ்வணிக்கு கோல்கள் இன்றி போட்டியை நிறைவு செய்ய காரணமாய் அமைந்தது

முழு நேரம்: பொலிஸ் வி.க 0 – 0 புளு ஸ்டார் வி.க

எனவே வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

பெனால்டி  

  • பு.ஸ் – ஷன்ன அடித்த பந்தை கோல் காப்பாளர் தினேஷ் வலது பக்கம் பாய்ந்து தடுத்தார்.  
  • பொலிஸ் – சதுர குனரத்ன வலது பக்கத்தினால் பந்தை உயர்த்தி கோலுக்குள் செலுத்தினார்
  • பு.ஸ் – அணித் தலைவர் லஹிரு தாரக பந்தை இலகுவாக உருட்டி கோலாக்கினார்
  • பொலிஸ் – லன்கேஸ்வர பந்தை வலைக்குள் செலுத்தினார்
  • பு.ஸ் இர்ஷான் வலது பக்கத்தினால் உதைந்த பந்தை தினேஷ் பாய்ந்து தடுத்தார்.
  • பொலிஸ் – அணித் தலைவர் ஷாமிக்க குமார வலது பக்கத்தினால் பந்தை கோலுக்குள் செலுத்தினார்
  • பு.ஸ் – ரினாஸ் இடது பக்கத்தினால் உதைந்த பந்து தினேஷ் பாய்வதற்கு முன்னர் வலைக்குள் சென்றது
  • பொலிஸ் – ரிப்கான் மெஹமட் இலகுவாக கோலுக்குள் செலுத்தி பொலிஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

பெனால்டி முடிவு: பொலிஸ் வி.க 4 – 2 புளு ஸ்டார் வி.க

 >>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<