புளு ஈகல்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய சோண்டர்ஸ்

86
Sri Lanka Club Football

Vantage FA கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் புளு ஈகல்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக 5-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் FA கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. 

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற இந்த தொடரின் முதலாவது அரையிறுதியில், ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சோண்டர்ஸ் முன்கள வீரர் சமத் ரஷ்மித்த கோலுக்கான சிறந்த வாய்ப்பை தவறிவிட்டார்.  

தொடர்ந்தும் ஆட்டத்தில் சோண்டர்ஸ் வீரர்களே தமக்குள் பந்தை அதிக நேரம் வைத்து கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டு ஆடினர். 

போராட்டத்தின் பின்னர் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த டிபெண்டர்ஸ் அணி

2020 AFC கிண்ண தகுதிகாண் தொடரின் ஆரம்ப சுற்றுப் போட்டியின் இரண்டாம் கட்ட மோதலில் (Second Leg) பூட்டானின் பாரோ கால்பந்து கழகத்தை

போட்டியின் 32ஆவது நிமிடத்தில் புளு ஈகல்ஸ் அணியின் கோல் எல்லையில் சுந்தரராஜ் நிரேஷ், கிறிஷான்த அபேசேகர மற்றும் சமத் ரஷ்மித்த ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற வேகமான பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் சமத் ரஷ்மித்த சோண்டர்ஸ் அணிக்கான முதல் கோலைப் பதிவு செய்தார். 

மீண்டும் 39ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து சோண்டர்ஸ் பின்கள வீரர் ஷலன சமீர உள்ளனுப்பிய பந்தை இளம் வீரர் மொஹமட் குர்ஷித் ஹெடர் மூலம் கோலாக்கினார். 

இரண்டு கோல்கள் பதிவானதன் பின்னர் தமது ஆட்டத்தில் வேகத்தைக் காண்பித்த புளு ஈகல்ஸ் வீரர்கள் தமக்கு 42ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் உதையின்போது முதல் கோலைப் பதிவு செய்தனர். உள்ளனுப்பப்பட்ட பந்தை பெர்ணான்டோ கோல் பெட்டிக்குள் இருந்து கம்பங்களுக்குள் உதைந்தார். 

முதல் பாதி: சோண்டர்ஸ் வி.க 2 – 1 புளு ஈகல்ஸ் வி.க   

இரண்டாம் பாதியில் 58ஆவது நிமிடத்தில் மைதானத்தின் மத்தியில் பந்தைப் பெற்ற நிரேஷ் அதனை முன்னோக்கி எடுத்து வந்து தனியே இருந்த கிறிஷான்த அபேசேகரவுக்கு வழங்க, அவர் அதனை இலகுவாக கோலாக்கினார். 

முதல் பாதியின்போது மாற்று வீரராக வந்த புளு ஈகல்ஸ் வீரர் நிபுன பன்டார இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து இரண்டு மஞ்சள் அட்டைகளைப் பெற்று, சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.  

10 வீரர்களுடன் ஆடிய புளு ஈகல்ஸ் அணியின் மல்ஷான்  67ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லைக்கு அண்மையில் வைத்து கோல் வாய்ப்பை வீணடித்தார். 

69ஆவது நிமிடத்தில் மீண்டும் சோண்டர்ஸ் கோல் எல்லையில் இருந்து கவிந்து இஷான் உதைந்த பந்து இடது பக்க கம்பத்தை அண்மித்து வெளியே சென்றது. 

மீண்டும் 87ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து குர்ஷித் வேகமாக அடித்த பந்து எதிரணியின் வலது பக்க கம்பத்தில் பட்டு மைதானத்திற்கு வர, கோலுக்கு அண்மையில் இருந்து நிரேஷ் அதனை பைசிகல் கிக் முறையில் உதைந்து கோலாக்கினார்.  

அடுத்த நிமிடம் புளு ஈகல்ஸ் வீரர் BSC பெர்ணான்டோ இரண்டாம் மஞ்சள் அட்டை பெற்று சிவப்பு அட்டையுடன் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

Photos: Saunders SC vs Blue Eagle SC | Vantage FA Cup 2019 | Semi Final 1

போட்டியின் உபாதையீடு நேரத்தில் நிரேஷ் மத்திய களத்தில் பந்தைப் பெற்ற வேளை புளு ஈகல்ஸ் கோல் காப்பாளர் ருவன் அறுனசிறி மைதானத்தின் மத்திய பகுதிக்கு வர நிரேஷ், அபேசேகரவிடம் பந்தைக் கொடுத்தார். அவர் மத்திய களத்தில் இருந்து நீண்ட தூர உதையின்மூலம் பந்தை கோலுக்குள் செலுத்தி, போட்டியின் 5ஆவது கோலைப் பதிவு செய்தார். 

எனவே, போட்டி முடிவின்போது 5-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற சோண்டர்ஸ் அணியினர் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் Vantage FA கிண்ண இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர். 

முழு நேரம்: சோண்டர்ஸ் வி.க 5 – 1 புளு ஈகல்ஸ் வி.க  

கோல் பெற்றவர்கள் 

சோண்டர்ஸ் வி.க – சமத் ரஷ்மித்த 32′, மொஹமட் குர்ஷித் 39′,  கிறிஷான்த அபேசேகர 57 & 90+2′, சுந்தரராஜ் நிரேஷ் 86′

புளு ஈகல்ஸ் வி.க – MMPCM பெர்ணான்டோ 41′ 

மஞ்சள் அட்டை  

சோண்டர்ஸ் வி.க – சமத் ரஷ்மித்த 79′ 

புளு ஈகல்ஸ் வி.க – TAD விஜேசேன 1′, நிபுன பன்டார 59′ & 63′, BSC பெர்ணான்டோ 14′ & 88′ 

சிவப்பு அட்டை  

புளு ஈகல்ஸ் வி.க – நிபுன பன்டார 63′, BSC பெர்ணான்டோ 88′

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க