பானுகவின் உடற்தகுதி தொடர்பில் மிக்கி ஆர்தர் கூறியது என்ன?

96

உடற்தகுதியை நன்கு அதிகரித்துக்கொண்டால் மீண்டும் தேசிய அணிக்குள் நுழைய முடியும் என மிக்கி ஆர்தர் குறிப்பிட்டதாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் பானுக ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இலங்கை அணியில் புதிதாக இடம்பிடித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பானுக ராஜபக்ஷ, இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், தான் உடற்தகுதியை அதிகரித்துக்கொண்டால் தேசிய அணிக்குள் நுழைய முடியும் என்பதை எமது இணையத்தளத்துக்கு வழங்கிய காணொளி செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.

2014 T20 உலகக் கிண்ண அரையிறுதியில் என்ன நடந்தது?

“நான் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கின் விளையாடிக்கொண்டிருந்த போது, தேசிய அணியில் இருந்து என்னை அழைத்திருந்தனர். இந்திய அணிக்கு எதிரான தொடருக்காக என்னை அழைத்திருந்தனர். அங்கு சென்று ஒரு போட்டியில் நான் விளையாடினேன். குறித்த போட்டியில் சரியாக பிரகாசிக்க முடியவில்லை.

எனவே, அடுத்த போட்டியிலிருந்து என்னை நீக்கினர். பின்னர் என்னுடன் கலந்துரையாடிய தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர், உடற்தகுதியை அதிகரித்துக்கொண்டால், தேசிய அணியில் விளையாட முடியும் என கூறினார். என்னை நேரடியாக சந்தித்து இந்த விடயத்தை குறிப்பிட்டார்”

குறித்த இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு, பானுக ராஜபக்ஷ தற்போது உடற்பயிற்சிகளுக்கான அட்டவணை மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றை தினமும் மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.

“நான் தேசிய அணியின் உடற்தகுதி நிபுணர் டில்ஷானுடன் இணைந்து, உடற்தகுதிக்கான அட்டவணையொன்றை தயாரித்துக்கொண்டதுடன், உணவு கட்டுப்பாட்டையும் பின்பற்றி வருகின்றேன். அத்துடன், எனது வேகத்தை அதிகரித்துக்கொள்வதற்கான பல உடற்பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதனை நான் இன்றுவரை கடைபிடித்து வருகின்றேன்.

இதேவேளை எனது உணவு கட்டுப்பாட்டுக்காக வீட்டிலிருந்து அதிக கவனம் கொடுக்கப்படுகிறது. உணவில் அதிகமாக எண்ணெய் எடுத்துக்கொள்வதில்லை. இன்னும் 10 வருடங்கள் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனவே, இதுபோன்ற விடயங்களுக்காக விட்டுக்கொடுத்துதான் ஆகவேண்டும்” என்றார்.

அதேநேரம், மிக்கி ஆர்தர் தொடர்பிலும் தனது கருத்துகளை பானுக ராஜபக்ஷ பகிர்ந்துக்கொண்டார். “மிக்கி ஆர்தர் வீரர்கள் அனைவரிடமும் சென்று கலந்துரையாடுவார். அத்துடன், வெளிப்படையாக பேசக்கூடிய ஒருவர். மிகவும் நல்லவர். 

“நான் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்படுவேன் என எனக்கு தெரியாது. இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு பின்னர், ஏன் நீக்கினார்கள் என்பதும் எனக்க தெரியாது. 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடிய வீரர்களை, T20 தொடரிலும் இணைக்க எதிர்பார்ப்பதாகவும், அணித் தலைவர்களில் மாத்திரம், திமுத் கருணாரத்னவுக்கு பதிலாக லசித் மாலிங்க விளையாடுவார் என குறித்த சந்தர்ப்பத்தில் கூறினர்”

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு விசேட மருத்துவ பரிசோதனை

இதேவேளை, பானுக ராஜபக்ஷவை நீக்கியதற்கான முக்கிய காரணம், அவர் துடுப்பாட்ட வீரர்களுக்கு இடையில் ஓட்டங்களை வேகமாக ஓடி பெற தவறுவதாகவும், களத்தடுப்பில் வேகம் குறைவு எனவும் மிக்கி ஆர்தர் கூறியதாக குறிப்பிட்டார்.

“பின்னர் என்னை சந்தித்து, நான் ஓடி பெறும் ஓட்டங்களின் வேகம் குறைவு என கூறினார். அதற்கு நான் வேகமாக ஓட்டங்களை ஓடி பெறுவதை விடவும், என்னால் வேகமாக ஓட்டங்களை அடிக்க முடியும் என கேலிக்கையாக கூறினேன். ஆனால், சர்வதேச மட்டத்துக்கு வேகமாக ஓடி ஓட்டங்களை பெறவேண்டும் எனவும், களத்தடுப்பில் வேகமாக பந்துகளை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

நான் மீண்டும் கேலிக்கைக்காக 6 போட்டிகளில் விளையாடிய ஒரு ஆட்ட நாயகன் விருதினை வென்றிருக்கிறேன் என கூறினேன். இதுபோன்று நாம் கேலிக்கையாக கலந்துரையாடுவோம். இதேவேளை, எனது உடற்தகுதி தொடர்பில் கூறும் போது, எனது வேகத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். உடல் எடை தொடர்பில் பிரச்சினை இல்லை எனவும், உடல் அமைப்பை சற்று கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டால், மீண்டும் அணிக்குள் வர முடியும்” என கூறினார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<