அறிமுக ஒருநாள் போட்டியில் அசத்திய இலங்கை வீரர்கள்!

Sri Lanka Cricket

2358

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில், புத்தம் புதிய சுழல் பந்துவீச்சாளரான மஹீஷ் தீக்ஷன, சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகத்தை பெற்றிருந்தார்.

எமது கிரிக்கெட்டில் அதிகம் மறக்கமுடியாத சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவர் அஜந்த மெண்டிஸ். தற்போது, இவர் இலங்கை இராணுவ கிரிக்கெட் கழகத்தின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக உள்ளார். தற்போது, அவரின் பயிற்றுவிப்பின் கீழ், அவரைப்போன்றே பந்துவீசக்கூடிய மஹீஷ் தீக்ஷன தன்னுடைய முதல் போட்டியிலேயே அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.

>> சுழல் பந்துவீச்சாளர்களின் அபாரத்தால் ஒருநாள் தொடர் இலங்கை வசம்

அஜந்த மெண்டிஸ் 2008ம் ஆண்டு அறிமுகமாகிய தன்னுடைய முதல் போட்டியிலேயே, எதிரணிக்கு ஆச்சரியத்தை கொடுத்திருந்தார். அதேபோன்று, மஹீஷ் தீக்ஷன தன்னுடைய அறிமுக போட்டியில், மிகச்சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இவர், 10 ஓவர்கள் பந்துவீசி 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இவரின், இந்த பந்துவீச்சு பிரதியானது, அறிமுகப் போட்டியில் இலங்கை அணிக்காக பெறப்பட்ட சிறந்த பந்துவீச்சு பிரதிகளில் ஒன்றாக அமைந்திருந்தது.

அந்தவகையில், இலங்கை அணிக்காக தங்களுடைய அறிமுக ஒருநாள் போட்டியில் களமிறங்கிய வீரர்களில், சிறந்த பந்துவீச்சு பிரதியை பதிவுசெய்த வீரர்கள் தொடர்பில் பார்க்கலாம்

உவைஸ் கர்னைன் – 1984 – எதிர் நியூசிலாந்து

இலங்கை அணியின் மிதவேகப் பந்துவீச்சாளரான உவைஸ் கர்னைன், ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சு பிரதியை பதிவுசெய்த வீரர்களில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக 1984ம் ஆண்டு மொறட்டுவையில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில், தன்னுடைய அறிமுகத்தை உவைஸ் கர்னைன் பெற்றுக்கொண்டார். குறிப்பிட்ட இந்தப்போட்டியில், இலங்கை அணி 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

குறைந்த ஓட்டங்களாக இருந்த போதும், அறிமுகப் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு சவால் கொடுத்த இவர், அவர்களின் முதல் இலக்க துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளை பதம் பார்த்திருந்தார். இவர், 8 ஓவர்கள் பந்துவீசி 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த பந்துவீச்சு பிரதியானது, இதுவரையில், இலங்கை அணிக்காக அறிமுக ஒருநாள் போட்டியில் பெறப்பட்ட மிகச்சிறந்த பந்துவீச்சு பிரதியாக உள்ளது.

தசுன் ஷானக – 2016 – எதிர் அயர்லாந்து

தற்போதைய இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டுவரும் தசுன் ஷானக, தற்போது குறைவான ஓவர்களை மாத்திரமே வீசிவந்தாலும், இவரது ஆரம்ப காலம் சிறந்த பந்துவீச்சாளராகவும் இவரை காட்டியிருந்தது.

அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 2016ம் ஆண்டு அறிமுகமாகிய தசுன் ஷானக, ஐந்து விக்கெட் பிரதியை கைப்பற்றியிருந்தார். அதன்மூலம் அறிமுகப்போட்டியில், இலங்கை அணிக்காக இரண்டாவது சிறந்த பந்துவீச்சு பிரதியை பதிவுசெய்திருந்தார். இவர், 9 ஓவர்கள் பந்துவீசி, 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், இந்தப்போட்டியில் இலங்கை அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

சரித்த புத்திக்க – 2001 – எதிர் ஜிம்பாப்வே

இலங்கை அணிக்காக 17 ஒருநாள் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள சரித்த புத்திக்க, 2001ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் அறிமுகத்தை பெற்றிருந்தார்.

மிதவேகப் பந்துவீச்சாளரான புத்திக்க, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தான் அறிமுகமாகிய போட்டியில், ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார். சார்ஜாவில் நடைபெற்ற இந்தப்போட்டியில் இலங்கை அணி 256 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி 193 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தப்போட்டியில் சமிந்த வாஸுடன் ஆரம்ப பந்து ஓவர்களை பகிர்ந்த சரித்த புத்திக 9 ஓவர்கள் பந்துவீசி 67 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதுவே, இவரது வாழ்நாள் சிறந்த பந்துவீச்சு பிரதியாகவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் வீரருக்கு போட்டித்தடை

அசந்த டி மெல் – 1982 – எதிர் இங்கிலாந்து

இலங்கை அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான அசந்த டி மெல், தன்னுடைய சர்வதே ஒருநாள் போட்டிக்கான அறிமுகத்தை 1982ம் ஆண்டு, இங்கிலாந்து அணிக்கு எதிராக பெற்றுக்கொண்டார்.

இவர் அறிமுகமான இந்தப்போட்டியில், துரதிஷ்டவசமாக இலங்கை அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எனினும், தன்னுடைய அறிமுகத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட அசந்த டி மெல், இலங்கை அணியின் பந்துவீச்சை ஆரம்பித்திருந்தார். இவர், மொத்தமாக 8.4 ஓவர்கள் பந்துவீசியதுடன், 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இலங்கை அணிக்காக சிறந்த அறிமுகத்தை பெற்றிருந்த இவர், 57 ஒருநாள் போட்டிகளில், இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மஹீஷ் தீக்ஷன – 2021 – எதிர் தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடந்துமுடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் அறிமுகத்தை பெற்ற சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன, தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டினை கைப்பற்றினார்.

இலங்கை அணிக்காக 2000ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்து விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்ட இவர், அறிமுகப்போட்டியில் இலங்கை அணிக்காக சிறந்த பந்துவீச்சு பிரதியை பதிவுசெய்த சுழல் பந்துவீச்சாளர் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

அஜந்த மெண்டிஸின் பந்துவீச்சு பாணியை பின்பற்றும் இவர், தன்னுடைய கெரம்போல் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அதுமாத்திரமின்றி, 10 ஓவர்களை வீசிய இவர் 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, அறிமுகப்போட்டியில் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை, அறிமுகப்போட்டியின் சிறந்த பந்துவீச்சு பிரதியை தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் காகிஸோ ரபாடா தக்கவைத்திருக்கிறார். இவர், பங்களாதேஷ் அணிக்காக 2015ம் ஆண்டு அறிமுகமாகி, குறித்த போட்டியில் 16 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<