இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக பென் ஸ்டோக்ஸ் நியமனம்

England Cricket

149

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைவராக சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ ரூட் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்ததைத்தொடர்ந்து, அவரின் இடத்துக்கு பென் ஸ்டோக்ஸ் அழைக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

>>இலங்கை 19 வயதின் கீழ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகும் முபாரக்

பென் ஸ்டோக்ஸ் கடந்த 2013ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக அறிமுகமாகியிருந்ததுடன், இதுவரை 79 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேநேரம், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் உப தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

அதுமாத்திரமின்றி கடந்த 2020ம் ஆண்டு ஜோ ரூட்டின் மனைவி இரண்டாவது குழந்தையை பிரசவிக்கவிருந்த காரணத்தால், ரூட் அணியிலிருந்து வெளியேறினார். இதன்போது, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராகவும் செயற்பட்டிந்தார்.

டர்ஹாமைச் சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் இதுவரை 35.89 என்ற ஓட்ட சராசரியில் 5060 டெஸ்ட் ஓட்டங்களை பெற்றுள்ளதுடன் 174 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் 81வது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், பென் ஸ்டோக்ஸிற்கு தலைவர் பதவியை வழங்குவதற்கு இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் பணிப்பாளர் ரொப் கீ பரிந்துரைத்திருந்தார். இந்த விடயத்துக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டமையை பெருமையைாக கருதுகிறேன். இந்த பருவகாலத்தை ஆரம்பிப்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

இங்கிலாந்து கிரிக்கெட்டுக்காக சிறப்பான பணிகளை புரிந்தது மாத்திரமின்றி, சர்வதேச கிரிக்கெட்டுக்கான ஓர் அடையாளமாக விளங்கும் ஜோ ரூட்டிற்கு எனது நன்றிகளை  தெரிவிக்கிறேன். உடைமாற்றும் அறையில் தலைவராக அதிகமான முன்னேற்றங்களை கொடுத்துள்ளார். எனது தலைவர் பதவிக்கும் அவர் என்னுடன் இணைந்து முக்கியமானவராக இருப்பார் என கருதுகிறேன் என்றார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<