2023 மார்ச் மாதத்தில் மகளிர் IPL தொடர்

137

2023 மார்ச் மாதத்தில் மகளிர் IPL போட்டித் தொடரை நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (IPL) மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இந்த தொடர் மூலம் பல திறமையான வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து விளையாடி வருகின்றனர்.

இதன் காரணமாக இந்தியாவில் மகளிருக்கான IPL தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி 2023 ஆம் ஆண்டு நிச்சயம் மகளிர் IPL தொடர் நடைபெறும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மகளிர் உள்நாட்டு கிரிக்கெட்டிற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி வழக்கமாக இந்தியாவில் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் தொடர் ஒக்டோபரில் ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். ஆனால் இம்முறை மகளிர் உள்நாட்டு தொடர்கள் அனைத்தும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதன் காரணமாக மகளிர் IPL தொடர் மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று கருதப்படுகிறது.

நீண்ட நாட்களாக எழுந்த கோரிக்கைக்கு பிறகு பிசிசிஐ மகளிர் IPL தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொடரில் 6 அணிகள் வரை பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக 2018 ஆம் ஆண்டு முதல் மகளிர் T20 சேலஞ்ச் என்ற பெயரில் இரண்டு அணிகளுடன் ஆரம்பமாகிய தொடர் 3 அணிகளுடன் தற்போது நடைபெற்று வருகிறது. 2020 ஆம் ஆண்டு மட்டும் கொரோனா பரவல் காரணமாக இந்தத் தொடர் நடத்தப்படவில்லை.

இந்தச் சூழலில் இந்தாண்டு மகளிர் IPL தொடர் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறவில்லை.

இதனிடையே, 2020 ஆம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்தது. அதன்பிறகு மகளிர் IPL தொடர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அப்போது அது வெளியாகவில்லை.

இந்த நிலையில், அண்மையில் நிறைவடைந்த பொதுநலவாய விளையாட்டு விழாவில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. T20 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் அவஸ்திரேலிய மகளிர் அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மகளிர் IPL தொடர் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மகளிர் IPL தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிசிசிஐ இன் வருடாந்த பொதுக்கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<