MCC இன் தலைவராக பொறுப்பேற்ற குமார் சங்கக்கார

113
Getty Images

கிரிக்கெட் விளையாட்டு இனம்கண்ட வரலாற்று நாயகர்களில் ஒருவரான குமார் சங்கக்கார, உயர் கௌரவத்திற்குரிய மெரிலேபோன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) தலைவராக இன்று (1) பொறுப்பேற்றுள்ளார். 

இன்று பதவியை பொறுப்பேற்றுள்ள குமார் சங்கக்கார கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகள் வடிவமைக்கும் மெரிலேபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக மாறும் முதல் பிரித்தானியர் அல்லாத நபர் என்பது குறிப்பிடத்தக்கது. 

க்ரைக் ப்ரத்வைட்டின் பந்துவீச்சி விதிமுறைக்கு உட்பட்டது என தீர்ப்பு

மேற்கிந்திய தீவுகள் அணியின் பகுதிநேர………..

இந்த ஆண்டின் மே மாதத்தில் இடம்பெற்ற மெரிலேபோன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் மூலம் குமார் சங்கக்கார, மெரிலேபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக ஒக்டோபர் மாதம் தொடக்கம் ஒரு வருட காலத்திற்கு செயற்படுவார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தான் புதிய பொறுப்பை ஏற்று மெரிலேபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக மாறியது தொடர்பில் குமார் சங்கக்கார இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். 

”நான் மிகவும் அழகிய பொறுப்புக்களில் ஒன்றான MCC இன் தலைவர் பதவியினை எடுத்துக் கொண்டதற்காக மிகவும் சந்தோஷமடைவதோடு இந்த ஆண்டில் கிரிக்கெட் விளையாட்டினை முன்னெடுத்துச் செல்வதற்காக கடுமையாக உழைக்கவிருக்கின்றேன். 

நாங்கள் இந்த விளையாட்டுக்கு (கிரிக்கெட்) இருக்கும் ஆதரவாளர்களை அதிகரிக்கும் வாய்ப்பு (இப்போது) எமக்கு காணப்படுகின்றது. அத்தோடு, MCC என்ன செய்கின்றது என்பதை உள்ளூர், வெளிநாட்டு மக்களுக்கு கல்வி ஒன்றின் மூலம் வழங்கவும் விரும்புகின்றோம்”  எனத் தெரிவித்தார். 

இதேநேரம் மெரிலேபோன் கிரிக்கெட் கழகத்தின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரியான காய் லாவேண்டர் குமார் சங்கக்கார புதிய தலைவராக நியமிக்கப்பட்டதற்காக தனது வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார்.

“இந்த (தலைவர்) பொறுப்பிற்கு ஏற்ற சிறந்த நபர் குமார் சங்கக்கார என்பதில் சந்தேகமில்லை. அவர் எமது கழகத்தின் இலக்குகளை சீராக செயற்படுத்திக் கொள்ள உதவி செய்வார் என்பது உறுதி.”

இதேநேரம், மெரிலேபோன் கிரிக்கெட் கழகத்தின் முன்னாள் தலைவரான அந்தோனி ரேபோர்டும் குமார் சங்கக்காரவை பாராட்டி தனது கருத்தினை பதிவு செய்திருந்தார்.

“அடுத்த 12 மாதங்களுக்கும் மெரிலேபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக செயற்படுவதற்கு தகுதிகள் கொண்ட சிறந்த நபர் குமார் சங்கக்காரவைத் தவிர வேறு ஒருவர் கிடையாது.” 

நாங்கள் 50 சதவீதமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம் – திரிமான்ன

பாகிஸ்தான் அணிக்கெதிரான 2ஆவது…………..

மெரிலேபோன் கிரிக்கெட் கழகத்துடன் நீண்ட காலம் தொடர்புகளை பேணிவரும் குமார் சங்கக்கார அக்கழகத்திற்கு எதிராக 2002, 2005 ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இதன் பின்னர் மெரிலேபோன் கிரிக்கெட் கழகத்தில் 2011 ஆம் ஆண்டு குமார் சங்கக்கார ஆற்றிய உரை ஒன்று மிகப் பிரபல்யமாக மாறியிருந்தது. அதனை அடுத்து 2012 ஆம் ஆண்டில் இருந்து குமார் சங்கக்கார மெரிலேபோன் கிரிக்கெட் கழகத்தின் உலக கிரிக்கெட் குழுவின் அங்கத்துவராகவும் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<