இந்திய அணிக்கெதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

274

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் பங்கெடுக்கும், 18 பேர் அடங்கிய இலங்கை டெஸ்ட் அணிக்குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியில் முக்கிய மாற்றங்கள்

தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடிவருகின்றது.

இந்த T20I தொடரின் பின்னர், மார்ச் மாதம் 04ஆம் திகதி இலங்கை – இந்திய அணிகள் பங்குபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறவுள்ள இந்த தொடர் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மாலின் கடைசி சர்வதேச தொடராகவும் அமைகின்றது.

திமுத் கருணாரட்ன மூலம் வழிநடாத்தப்படவுள்ள இலங்கை டெஸ்ட் அணியில், ஆரம்பத் துடுப்பாட்டவீரரான லஹிரு திரிமான்ன மீண்டும் இணைக்கப்பட்டிருக்கின்றார்.

இலங்கை அணிக்காக கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் முன்னணியில் திகழ்ந்த லஹிரு திரிமான்ன இறுதியாக, இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுடன் ஆடியிருந்த டெஸ்ட் தொடரில் சொந்தக் காரணங்கள் காரணமாக பங்கேற்காமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2022 IPL தொடர் மார்ச் 26ஆம் திகதி ஆரம்பம்

இதேநேரம் இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறையானது இந்த டெஸ்ட் தொடரில் அஞ்சலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், சரித் அசலன்க போன்ற வீரர்கள் மூலம் பலப்படுத்தப்பட இவர்களுக்கு மேலதிக பலமாக விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் நிரோஷன் டிக்வெல்ல காணப்படுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் இந்த டெஸ்ட் குழாத்தினுள் துடுப்பாட்டவீரரான குசல் மெண்டிஸ் உள்ளடக்கப்பட்ட போதும் அவர், போதிய உடற்தகுதியினைப்

பெற்ற பின்னரே இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் உபாதை காரணமாக மகீஷ் தீக்ஷன மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோருக்கு இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சுத்துறையினை நோக்கும் போது வேகப்பந்துவீச்சாளர்களாக சுரங்க லக்மால், துஷ்மன்த சமீர, விஷ்வ பெர்னாண்டோ ஆகிய வீரர்களுடன் லஹிரு குமார பலம் சேர்க்க, சுழல்பந்துவீச்சாளர்களாக பிரவீன் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய மற்றும் ஜெப்ரி வன்டர்செய் ஆகியோர் பலம் தருகின்றனர்.

இலங்கை டெஸ்ட் குழாம்

திமுத் கருணாரட்ன (அணித்தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, லஹிரு திரிமான்ன, தனன்ஞய டி சில்வா, அஞ்சலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ் (உடற்தகுதியினைப் பொறுத்து), தினேஷ் சந்திமால், சரித் அசலன்க, நிரோஷன் டிக்வெல்ல, சாமிக்க கருணாரத்ன, ரமேஷ் மெண்டிஸ் (உபாதை), லஹிரு குமார, சுரங்க லக்மால், துஷ்மன்த சமீர, விஷ்வ பெர்னாண்டோ, ஜெப்ரி வன்டர்செய், பிரவீன் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய

டெஸ்ட் தொடர் அட்டவணை

  • முதல் டெஸ்ட் – மார்ச் 04 – மொஹாலி
  • இரண்டாவது டெஸ்ட் – மார்ச் 12 – பெங்களூரு (பகலிரவு)

>>மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு<<