இந்து மைந்தர்களின் பெரும் சமரில் சம்பியனாக மகுடம் சூடியது யாழ். இந்துக் கல்லூரி

125

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற 12ஆவது இந்துக்களின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டியில் கே. பரேஷித்தின் அரைச் சதம் மற்றும் கஜநாத், தரணிசனின் அபார பந்துவீச்சு ஆகியவற்றின் உதவியுடன் கொழும்பு இந்துக் கல்லூரியை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி யாழ். இந்துக் கல்லூரி அணி சம்பியனாக மகுடம் சூடியது.  

யாழ். மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரிகளுக்கு இடையிலான 12ஆவது இந்துக்களின் மாபெரும் சமர், கடந்த வெள்ளிக்கிழமை (30) கொழும்பு பி. சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு இந்துக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை யாழ். இந்துக் கல்லூரிக்கு வழங்கியது. 

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்து சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கே. பரேஷித் 147 பந்துகளை எதிர்கொண்டு 12 பௌண்டரிகள், ஒரு சிக்ஸுடன் 80 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார். 

கொழும்பு இந்துக் கல்லூரியின் பந்துவீச்சில் ஆர். தேஸ்கர் 36 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், எம். அபிஷேக் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸுங்காக துடுப்பெடுத்தாடிய கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரி எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் சகல விக்கெட்களையும் இழந்து 49 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அந்த அணியின் துடுப்பாட்டத்தில் . டிரோஜன் (17), பி. தாருஜன் (15) ஆகிய இருவரும் மாத்திரம் தான் இரட்டை இலக்க எண்ணிக்கையை எடுத்தனர். 

யாழ். இந்துவின் பந்துவீச்சில் ரீ. கஜநாத் 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கே. தரணிசன் 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், எஸ். பரத்வாசன் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்ட கொழும்பு இந்துக் கல்லூரி அணி, 80.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த 170 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது 

துடுப்பாட்டத்தில் ஆர். டிலுக்ஷன் 72 ஓட்டங்களையும், என். நிரூபன் 35 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். 

யாழ். இந்துவின் பந்துவீச்சில் மீண்டும் சிறப்பாக செயல்பட்ட ரீ. கஜநாத் 71 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும் கே. தரணிசன் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதன்படி, 36 ஓட்டங்ளை வெற்றியிலக்காகக் கொண்டு தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ். இந்துக் கல்லூரி அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது 

இதன்மூலம் இந்துக்களின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் 3ஆவது தடவையாக யாழ். இந்துக் கல்லூரி அணி சம்பியனாக மகுடம் சூடியது. இறுதியாக அந்த அணி 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்துக்களின் பெரும் சமரில் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது 

அதேபோல, இந்துக்களின் பெரும் சமரில் எதிரணியினரின் மைதானத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட முதலாவது வெற்றி இதுவாகும் 

இந்த நிலையில், இம்முறை இந்துக்களின் பெரும் சமரில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை கொழும்பு இந்துக் கல்லூரியின் ஆர். டிலுக்ஷன் தட்டிச் செல்ல, சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை யாழ். இந்துக் கல்லூரியின் ரீ. கஜநாத் தனதாக்கினார். அத்துடன், போட்டியின் சிறப்பாட்டக்காரருக்கான விருது யாழ். இந்துக் கல்லூரியின் கே. பரேஷித்துக்கு வழங்கப்பட்டது 

போட்டியின் சுருக்கம் 

யாழ். இந்துக் கல்லூரி அணி – 183/10 (60) – கே. பரேஷித் 80, எம். கஜன் 28, ஆர். தேஸ்கர் 36/4, எம். அபிஷேக் 57/3   

கொழும்பு இந்துக் கல்லூரி அணி – 49/10 (23) – ராம்ராஜ் டிலோஜன் 17, பி. தாருஜன் 15, ரீ. கஜநாத் 22/5, கே. தரணிசன் 3/3, எஸ். பரத்வாசன் 5/2 

கொழும்பு இந்துக் கல்லூரி அணி – 170/10 (80.1) – ஆர். டிலுக்ஷன் 72, என். நிரூபன் 35, ரீ. கஜநாத் 71/6, கே. தரணிசன் 29/4 

யாழ். இந்துக் கல்லூரி அணி – 38/1 (12.2) – சுபானந்தன் அர்ஜன் 21 

முடிவு – யாழ். இந்துக் கல்லூரி அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<