9ஆவது ஐ.பி.எல் தொடர் இறுதிக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. ஒவ்வொரு அணியும் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது. இந்த அடிப்படையில் கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணி இன்று குஜராத் அணியோடும் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஹைதரபாத் அணியோடும் விளையாடவுள்ளன. அதில் இரண்டு போட்டிகளில் ஒன்றிலாவது வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் காணப்படுகிறது.

இது இவ்வாறு இருக்கையில் கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் சகலதுறை வீரர் என்டர் ரஸல் காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இன்று நடைபெறும் குஜராத் அணிக்கெதிரான  மிகமுக்கியமான போட்டியில் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த போட்டியில் கொல்கத்தா, பெங்களூர் அணியை தனது சொந்த மைதானமான கொல்கத்தா ஈடன்கார்டனில் சந்தித்தது. இதில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது. தோல்வியைக் காட்டிலும் அந்த அணிக்கு ரஸல் குறித்துதான் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா அணி களத்தடுப்பு செய்து கொண்டிருக்கும் போது இரண்டு முறை காயம் காரணமாக என்டர் ரஸல் வெளியேறினார். அதன்பின் போட்டியின் 18ஆவது ஓவரை வீச வந்தார். இந்த ஓவரின் 3ஆவது பந்தை வீசும்போது அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் மருத்துவர் உதவியுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

ஆகவே,இன்று நடக்கும் முக்கியமான போட்டியில் குஜராத் அணிக்கெதிராக அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்