இம்முறையும் சமநிலையில் முடிந்த ‘சகோதரர்களின் சமர்’

152

ப்லாக்ஹெம் விஜயவர்தன நினைவுச்சின்ன கிண்ணத்திற்காக நேற்று ஆரம்பமான இசிபதன மற்றும் தர்ஸ்டன் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 55ஆவது ‘சகோதரர்கள் சமர்’ எனப்படும் இரண்டு நாட்கள் கொண்ட மாபெரும் வருடாந்த கிரிக்கெட் பெரும் சமர் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

இதில் தர்ஸ்டன் கல்லூரியினர் துடுப்பாட்டம், பந்துவீச்சு என அசத்தியிருந்த போதிலும், இசிபதன கல்லூரியின் நிதான ஆட்டத்தால் தர்ஸ்டன் வீரர்கள் 3 விக்கெட்டுக்களால் வெற்றியை தவறவிட்டனர்.  

சகோதரர்கள் சமரின் முதல் நாளில் தர்ஸ்டன் கல்லூரி வலுவான நிலையில்

‘சகோதரர்களின் சமர்’ எனும் பெயர்…

நேற்று எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியின் நாணய சுழற்சியினை வெற்றி கொண்ட இசிபதன கல்லூரியின் தலைவர் அயன சிறிவர்தன முதலில் தர்ஸ்டன் கல்லூரி அணியினரை துடுப்பாடுமாறு பணித்தார்.

இதன்படி, களமிறங்கிய தர்ஸ்டன் கல்லூரியினர், 60 ஓவர்கள் முடிவில் 56.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்த ஜயவிஹான் மஹவிதான சதம் கடந்து ஆட்டமிழக்காது 125 ஓட்டங்களையும், நிமேஷ் பெரேரா(52) மற்றும் சவன் பிரபாஷ் (50) ஆகியோர் அரைச்சதங்களையும் பெற்று அவ்வணிக்கு வலுசேர்த்திருந்தனர்.

தொடர்ந்து முதல்நாள் பிற்பாதியில் தமது முதல் இன்னிங்ஸினை ஆரம்பித்த இசிபதன கல்லூரியினர், போட்டியின் ஆரம்பம் முதல் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியிருந்தாலும், அவ்வணியின் அனுபவமிக்க வீரர்களான அயன சிறிவர்தன மற்றும் சஞ்சுல அபேவிக்ரம ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடி அவ்வணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இரண்டாவது மற்றும் இறுதி நாளான இன்றைய தினம்(24), தமது முதல் இன்னிங்ஸினை 120 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்தவாறு இசிபதன கல்லூரி தொடர்ந்தது. களத்தில் அணித் தலைவர் அயன சிறிவர்தன மற்றும் சஞ்சுல அபயவிக்ரம ஜோடி போட்டியின் முதல் பாதியில் நிதானமாக துடுப்பெடுத்தாடி 128 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக் கொண்டதுடன், அரைச்சதங்களைக் குவித்து அசத்தியிருந்தனர். எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

Photos: Thurstan College vs Isipathana College | 55th Battle of the Brothers – Day 2

தர்ஸ்டன் கல்லூரியின் வலதுகை சுழற்பந்துவீச்சாளர் சவன் பிரபாஷின் பந்து வீச்சுக்கு திணறிய இசிபதன கல்லூரி அணி, சீரான ஓட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனவே, அவ்வணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 60 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இசிபதனவின் பின்வரிசை வீரர்கள் அனைவரும் மிகவும் குறுகிய ஓட்டங்களுக்குள் வீழ்ந்திருந்தனர். அவ்வணி சார்பாக சஞ்சுல அபயவிக்ரம 79 ஓட்டங்களையும், அணித் தலைவர் அயன சிறிவர்தன 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்று அணிக்கு வலுச்சேர்த்தனர்.

சுவன் பிரபாஷ் வெறும் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்த, மறுமுனையில் சிறப்பாக செயற்பட்டிருந்த நிபுன் லக்ஷான் 2 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

பின்னர், 113 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தர்ஸ்டன் கல்லூரி அணி, மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி 23 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் தமது இரண்டாவது இன்னிங்ஸினை இடைநிறுத்திக்கொண்டது.

இதில், ஏனைய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரேனும் 15 ஓட்டங்களினை தாண்டாத நிலையில் பன்சிலு திஷான் மாத்திரம் ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில், இசிபதன கல்லூரியின் காலிக் அமாத் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

பின்னர், 57 ஓவர்களில் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 254 ஓட்டங்களினைப் பெற்றுக் கொள்வதற்காக தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இசிபதன கல்லூரி அணி, போட்டியின் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினாலும், தேநீர் இடைவெளியினைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய காரணத்தினால் போட்டியின் ஆதிக்கம் மெதுவாக தர்ஸ்டன் கல்லூரியின் பக்கம் மாறியது.

எனினும், தொடர்ந்தும் பந்துகளை சிறப்பாக தடுத்தாடி போட்டி முடிவு நேரம் வரை இசிபதன வீரர்கள் தமது ஆட்டத்தைக் கொண்டு வந்த நிலையில் போதிய வெளிச்சம் இன்றி போட்டி நிறுத்தப்பட்டது.

எனினும், இப்போட்டியில் துடுப்பாட்டத்தைப் போல பந்துவீச்சிலும் அசத்தியிருந்த தர்ஸ்டன் கல்லூரியின் வெற்றிக் கனவு வெறும் 3 விக்கெட்டுக்களால் தகர்ந்து போனது. இதனால் வரலாற்று சிறப்பு மிக்க இம்மாபெரும் கிரிக்கெட் தொடர் 46ஆவது தடவையாகவும் சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

போட்டியின் ஆட்ட நேர முடிவின்போது, இசிபதன தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 7 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது. அவ்வணி சார்பாக சஞ்சுல அபேவிக்ரம, 48 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

Photos: Thurstan College vs Isipathana College | 55th Battle of the Brothers – Day 1

பந்துவீச்சில் இசிபதன கல்லூரிக்கு அச்சுறுத்தல் கொடுத்திருந்த அயேஷ் ஹர்ஷன 4 விக்கெட்டுக்களை தன்வசப்படுத்தியிருந்ததோடு, ஜனுஷ்க பெர்னாண்டோவும் 3 விக்கெட்டுகளை தர்ஸ்டன் கல்லூரி சார்பாக பதம்பார்த்தார்.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்குமிடையில் 38ஆவது தடவையாக நடைபெறவுள்ள 50 ஓவர்களைக் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி பி.சரவணமுத்து மைதானத்திலும், ஒற்றை இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி தர்ஸ்டன் கல்லூரி மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

விருதுகள்

  • சகல துறை ஆட்டக்காரர் – சவன் பிரபாஷ் (தர்ஸ்டன் கல்லூரி)
  • சிறந்த பந்துவீச்சாளர் – காலிக் அமாத் (இசிபதன கல்லூரி)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – சஞ்சுல அபேவிக்ரம (இசிபதன கல்லூரி)
  • ஆட்ட நாயகன் ஜயவிஹான் மஹவிதான (தர்ஸ்டன் கல்லூரி)

போட்டியின் சுருக்கம்

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலை அடைந்தது.