அதிரடி வெற்றியைப் பதிவு செய்தது பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி

6616
U19 Cricket - POW v Dharmapala

2016/17 ஆண்டுக்கான 19 வயதிற்குட்பட்டோருக்கான முதலாம் டிவிஷன் கிரிக்கட் பருவ காலத்தின் ஆரம்பப் போட்டியில் மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரி அணியை ஒரு இனிங்ஸ் மற்றும் 221 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற விஷ்வ சதுரங்க தலைமயிலான பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம் செய்தது. இதன்படி முதலில் ஆடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி தமது முதல் இனிங்ஸில் 63.2 ஓவர்களில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 361 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி சார்பாக ரவிந்து ரோச்சன 44 ஓட்டங்களையும், விஷ்வ சதுரங்க 65 ஓட்டங்களையும், சனோஜ் தர்ஷிக 67 ஓட்டங்களையும், திலங்க மதுரங்க 53 ஓட்டங்களையும், அவிந்து பெர்னாண்டோ 63 ஓட்டங்களையும், அஞ்சுல சஹன் 43 ஓட்டங்களையும் பெற்றனர். பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரி அணியின் சார்பாகப் பந்துவீச்சில் மஹிம வீரக்கோன் 8 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தமது முதல் இனிங்ஸிற்காக ஆடிய பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரி அணியினர் அவிந்து பெர்னாண்டோ மற்றும் அஞ்சுல சஹன் ஆகியோரின் துல்லியமான பந்து வீச்சுகளுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 11.5 ஓவர்களில் வெறுமனே 16 ஓட்டங்களுக்கு சுருண்டது. பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியின் சார்பாகப் பந்து வீச்சில் அஞ்சுல சஹன் 6 விக்கட்டுகளையும் அவிந்து பெர்னாண்டோ 3 விக்கட்டுகளையும் தம்மிடையே பங்கு போட்டனர்.

இதனால் 345 ஓட்டங்கள் பின்னிலையில் பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரி அணி Follow on முறையில் தமது 2ஆவது இனிங்ஸைத் தொடர்ந்தது. இந்த அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்று இருந்த நிலையில் 2ஆவது நாளான இன்று தமது இனிங்ஸை ஆரம்பித்தது. ஆனால் அவர்களால் பகல் போசணை இடைவேளை வரை மட்டுமே நிலைத்து நிற்க முடிந்தது. இதன் படி பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரி அணி தமது 2ஆவது இனிங்ஸில் 50.1 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அதிக பட்சமாக ஓட்டமாக அவிஷ்க ஹசரிந்து 43 ஓட்டங்களைப் பெற்றார். பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியின் சார்பில் பந்து வீச்சில் திலான் நிமேஷ் 38 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 221 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்தது. தர்மபால கல்லூரி அணி பெற்ற 16 ஓட்டங்களே 19 வயதிற்குட்பட்டோருக்கான முதலாம் டிவிஷன் கிரிக்கட் வரலாற்றில் பெறப்பட்ட ஆகக் குறைந்த ஓட்டங்களாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் – 361/8d (63.2)
ரவிந்து ரோச்சன 44, விஷ்வ சதுரங்க 65, சனோஜ் தர்ஷிக 67, திலங்க மதுரங்க 53, அவிந்து பெர்னாண்டோ 63, அஞ்சுல சஹன் 43
மஹிம வீரக்கோன் 87/8

தர்மபால கல்லூரி – 16/10 (11.5)
அஞ்சுல சஹன் 12/6, அவிந்து பெர்னாண்டோ 4/3

தர்மபால கல்லூரி – 124/10 (50.1) [Follow on முறையில்]
அவிஷ்க ஹசரிந்து 43
திலான் நிமேஷ் 38/5

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 221 ஓட்டங்களால் வெற்றி