இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணிக்கு எதிரான நான்காவது T20 போட்டியில் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் மகளிர் அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 2-2 என சமப்படுத்தியுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்த போதும், மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்று தொடர் தோல்வியை தவிர்த்திருந்தது.
>>மூன்றாவது T20 போட்டியில் பங்களாதேஷ் U19 மகளிர் அணிக்கு வெற்றி<<
இந்த நிலையில் கொழும்பு பி.ஆர்.சி. மைதானத்தில் நடைபெற்ற நான்காவது T20 போட்டியில் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் மகளிர் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி ஜன்னதுல் மோவாவின் 24 ஓட்டங்கள், அபிபா அஷிமா 21 ஓட்டங்கள் மற்றும் மொசமட் ஈவா 20 ஓட்டங்கள் என பெற்றுக்கொடுக்க 19.5 ஓவர்கள் நிறைவில் 126 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் ரஷ்மிகா செவ்வந்தி 3 விக்கெட்டுகளையும், சமோதி பிரபோதா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி ஆரம்பத்திலிருந்து தடுமாறியது. இதற்கிடையில் மனுதி நாணயக்கார 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவரின் ஆட்டமிழப்பின் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் இழக்கப்பட்டதுடன், ஓட்ட வேகமும் குறைவடைந்தது.
இறுதியாக ஹிருனி ஹன்சிகா தனியாளாக போராடி 29 பந்துகளில் வேகமாக 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதும் இலங்கை அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் மோவா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சுருக்கம்
பங்களாதேஷ் U19 மகளிர் அணி – 126 (19.5), ஜன்னதுல் மோவா 24, ரஷ்மிகா செவ்வந்தி 3/28, சமோதி பிரபோதா 2/18
இலங்கை U19 மகளிர் அணி – 105/8, ஹிருனி ஹன்சிகா 44*, மனுதி நாணயக்கார 25, ஜன்னதுல் மோவா 3/23
முடிவு – பங்களாதேஷ் 19 வயதின் கீழ் மகளிர் அணி 21 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<