பிரிமியர் லீக் சுற்றுப் போட்டியில் இவ்வாரம் முன்னேறியுள்ள கழகங்கள்

157
Premier League week-3

பிரிமியர் லீக் சுற்றுப்போட்டியின் மூன்றாவது வாரத்திற்கான போட்டிகள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளதுடன் புள்ளிப்பட்டியலிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாரத்திற்கான போட்டிகளில் லிவர்பூல், மென்சஸ்டர் யுனைடட் மற்றும் மென்சஸ்டர் சிடி ஆகிய கழகங்கள் புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

2017/18 ஆம் ஆண்டின் பருவகாலத்தின் மூன்றாம் வாரத்திற்கான பீரீமியர் லீக் சுற்றுப்போட்டிகள் கடந்த 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற்று முடிந்தன. புல விறுவிறுப்பான போட்டிகளை உள்ளடக்கியதாகவே கடந்த வாரத்திற்கான போட்டிகள் அமைந்திருந்தன. முதல் இரண்டு வாரங்களில் புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கத் தவறிய கழகங்கள் இவ்வாரம் புள்ளிப்பட்டியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை காணக் கூடியதாக உள்ளது. 26ஆம் திகதி ஆறு போட்டிகளும், 27ஆம் திகதி நான்கு போட்டிகளுமாக இவ்வாரம் பத்துப் போட்டிகள் நடைபெற்று முடிந்தன.

26ஆம் திகதி நடைபெற்ற போட்டிகளில் மிகவும் விறுவிறுப்பாக அமைந்த போட்டியாக மென்சஸ்டர் சிடி கால்பந்து கழகம் மற்றும் புர்னேமவுத் கழகம் மோதிய போட்டியை குறிப்பிடலாம். புர்னேமவுத் கழகத்தின் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் போட்டியின் ஆரம்பம் முதலே புர்னேமவுத் கழகம் மென்சஸ்டர் சிடி கழகத்திற்கு சவால் கொடுக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக போட்டியின் 13ஆவது நிமிடத்தில் மத்தியகள வீரர் சார்லி டெனியள்ஸ் புர்னேமவுத்திற்கான முதல் கோலை பெற்றுக் கொடுத்தார். விரைவாக செயற்பட்ட மென்சஸ்டர் சிடி கழகத்திற்கு போட்டியின் 21ஆவது நிமிடத்தில் காப்ரியல் ஜீஸஸ் ஒரு கோலை பெற்றுக் கொடுத்து போட்டியை சமப்படுத்தினார். போட்டியின் இறுதிவரை இரு அணிகளும் சிறந்த பந்துப் பரிமாற்றம் மூலம் கோல்களை பெற முயற்சித்தனர். போட்டியின் 97ஆவது நிமிடத்தில் டேனிலோ மூலம் வழங்கப்பட்ட பந்தை கோலை நோக்கி ரஹீம் ஸ்டேர்லீங் செலுத்தியதன் மூலம் அன்றைய போட்டியில் வெற்றிபெற்று 7 புள்ளிகளுடன் மென்சஸ்டர் சிடி கழகம் இவ்வாரம் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இவ்வார இறுதியில் ஆரம்பமாகும் DCL கால்பந்து தொடர்

பெரிதும் பேசப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்பட்ட 2017 டயலொக் சம்பியன்ஸ் லீக்..

நியுகாஸ்ல் மற்றும் வெஸ்ட் ஹாம் கழகங்களிற்கு இடையில் நடைபெற்ற போட்டியில், நியுகாஸ்ல் கால்பந்து கழகம் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இப்பருவகாலத்திற்கான முதல் வெற்றியை பதிவு செய்தது. புள்ளிப்பட்டியலில் கடந்ந மூன்று வாரமாக முதல் இடத்திலுள்ள மென்சஸ்டர் யுனைடட் கழகம் இவ்வாரம் லய்செஸ்டர் சிடி கழகத்திற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

மேலும் ஸ்வன்சி சிடி கால்பந்து கழகம் மற்றும் கிரிஸ்டல் பெலஸ் கழகங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில், ஸ்வன்சி சிடி கழகம் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வோற்பொர்ட் (Watford) மற்றும் பரய்டன் (Brighton) கழகங்கள் மோதிய போட்டியும், ஹடர்ஸ்பீல்ட் (Huddersfield) மற்றும் ஸவுத்ஹம்ப்டன் கழகங்கள் மோதிய போட்டியும் வெற்றி தோல்வியின்றி நிறைவு பெற்றன. இப்போட்டி முடிவால் ஹடர்ஸ்பீல்ட் கழகமானது புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலருந்து மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

27ஆம் திகதி நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் பார்வையாளர்களை கவர்ந்த போட்டியாக ஆர்சனல் கழகம் மற்றும் லிவர்பூல் கழகங்களுக்கு இடையே நடந்த போட்டியை குறிப்பிடலாம். லிவர்பூல் அன்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் லிவர்பூல் கழகம் 4-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பாரியதொரு வெற்றியைப் பெற்றது. போட்டியின் ஆரம்பம் முதல் இறுதிவரை போட்டியின் ஆக்கிரமிப்பாளர்களாக லிவர்பூல் கழகமே காணப்பட்டது. லிவர்பூல் கழகத்திற்காக ரொபெர்டோ பெர்மினோஹ் 17ஆவது நிமிடத்திலும்,சாடியோ மெனே 40ஆவது நிமிடத்திலும், மொஹமட் ஸலாஹ் 57ஆவது நிமிடத்திலும் மற்றும் மாற்று வீரராக களமிறங்கிய டேனியல் ஸ்டுரிட்ஜ் 77ஆவது நிமிடத்திலும் கோல்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

இப்போட்டியின் மூலம் லிவர்பூல் கழகம் புள்ளிப் பட்டியலில் 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலுள்ளது. அதேவேளை ஆர்சனல் கழகம் 16ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. மேலும் செல்சி மற்றும் எவர்டன் கழகங்களுக்கு இடையே நடந்த போட்டியில், செல்சி கழகம் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றீயீட்டி புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தை கைப்பற்றியுள்ளது. செல்சி கழகத்திற்காக அல்வாரோ மொரோடா மற்றும் பெப்ரீகாஸ் ஆகியோர் கோல்களை பெற்றுக் கொடுத்தனர்.

வெஸ்ட்பூரும் மற்றும் ஸ்டோக் சிடி ஆகிய கழகங்களுக்கும், டொடன்ஹாம் மற்றும் பர்ன்லீ (Burnley) கழகங்களுக்கும் இடையே நடந்த இரண்டு போட்டிகளுமே 1-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

இவ்வாரத்திற்கான போட்டிகள் நிறைவு பெற்றதுடன் உலக கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஆரம்பமாக இருப்பதால் பிரிமியர் லீக் சுற்றுப் போட்டியின் நான்காவது வாரத்திற்கான சுற்றுப்போட்டிகள் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது.