கங்குலியுடன் என்ன நடந்தது? – கருத்து வெளியிட்டார் ரசல் அர்னோல்ட்

164

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ரசல் அர்னோல்ட் இன்ஸ்டாக்கிரம் (Instagram) நேரலை ஒன்றில், கடந்த 2002ஆம் ஆண்டில் தனக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலிக்கும் இடையில் ஏற்பட்ட வார்த்தை மோதல் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். 

4000 கோடி நஷ்டத்தை சந்திக்குமா BCCI??

இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகள் நடைபெறாது போனால் இந்திய கிரிக்கெட் ………..

கடந்த 2002ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை, இந்தியா ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட இன்னிங்ஸ் நடைபெற்ற போது களத்தில் இருந்த ரசல் அர்னோல்ட் துடுப்பாட்டவீரர் முனையில் இருந்து முறையற்ற விதத்தில் வெளியேறுவதாக, இந்திய அணித் தலைவர் சௌரவ் கங்குலி அர்னோல்ட் உடன் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து, அப்போது ஏற்பட்ட இந்த வார்த்தை மோதல் போட்டி நடுவர்களின் தலையீடோடு சுமூகமாக முடிக்கப்பட்டிருந்தது.   

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினுடன் இடம்பெற்ற இன்ஸ்டாக்கிரம் நேரலை கலந்துரையடாலில் இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட அர்னோல்ட், அது சிநேகபூர்வமான வார்த்தைப் பரிமாற்றங்களில் ஒன்று எனத் தெரிவித்திருக்கின்றார். 

”ஆம், தற்போது 18 வருடங்கள் கடந்து விட்டதால், (இந்த விடயம் தொடர்பில்) உண்மையாக இருக்க விரும்புகின்றேன். நான் (பந்துவீசும் மைதானப் பகுதியில்) 2-3 அடிகள் முன் எடுத்து வைத்து விட்டேன். இது எல்லாரும் செய்வது தானே?. அப்போது, எனக்கு முன்னால் வந்த சௌரவ் கங்குலி சத்தம் போடத் தொடங்கிவிட்டார். வேறு, எதுவும் நடக்கவில்லை. (அதேநேரம் இந்திய அணியின் விக்கெட் காப்பாளராக இருந்த) ராகுல் ட்ராவிட் உம், ”ரஸ் (ரசல் அர்னோல்ட்)” மைதானத்தின் (அபாயப் பிரதேசத்திற்குள்) ஓட வேண்டாம் என கூறியிருந்தார்.” 

”அது சிநேகபூர்வமாக நடைபெற்ற வார்த்தைப் பரிமாற்றம் தான்.” என்றார்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர், ரசல் அர்னோல்ட், சௌரவ் கங்குலி ஆகிய இருவரும் இன்று வரை சிறந்த நண்பர்களாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

சௌரவ் கங்குலி பற்றி மேலும் கருத்து வெளியிட்ட ரசல் அர்னோல்ட், இந்திய அணியுடன் இலங்கை விளையாடும் சந்தர்ப்பங்களில் கங்குலி எப்போதும் சவால் தரக்கூடிய வீரர்களில் ஒருவராக இருந்தார் எனவும் தெரிவித்திருந்தார்.    

இதேநேரம், 2002ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இரண்டு தடவைகள் மழையினால் கைவிடப்பட, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இணை வெற்றியாளர்களாக இந்தியா, இலங்கை ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<