இலங்கைக்கு எதிரான T20 தொடரில் 7 மாற்றங்களுடன் களமிறங்கவுள்ள பங்களாதேஷ்

1373

இலங்கைக்கு எதிரான எதிர்வரும் T20 கிரிக்கெட் தொடருக்கு பங்களாதேஷ் புதிய குழாம் ஒன்றை அறிவித்துள்ளது. தென்னாபிரிக்க தொடரில் காயம் காரணமாக இடம்பெறாத அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் மற்றும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் இந்த குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

[rev_slider LOLC]

சனிக்கிழமை (10) வெளியிடப்பட்ட 15 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாமில் ஐந்து புதுமுக வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் காயம் காரணமாக விளையாடாத ஷகீப் அல் ஹஸன் இந்த குழாமுக்கு தலைமை வகிக்கிறார்.

தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தில் இடம்பெற்ற ஏழு வீரர்கள் இரண்டு போட்டிகள் கொண்ட இந்த T20 தொடரில் இணைக்கப்படாத நிலையில் அபூ ஜயெத், ஆரிபுல் ஹக், மெஹெதி ஹஸன், சாகிர் ஹசன் மற்றும் ஹபிப் ஹொஸைன் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் இம்ருல் கைஸ், லிடோன் தாஸ், மெஹெதி ஹசன், ஷபியுல் இஸ்லாம், மோமினுல் ஹக், நாசிர் ஹொஸைன் மற்றும் தஸ்கின் அஹமட் ஆகிய வீரர்களே அணியில் இடம்பெறாதவர்கள் ஆவர்.

குறுகிய கால போட்டிகளுக்கு புதிய கட்டமைப்பு ஒன்றை எதிர்பார்த்தே தாம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்ததாக பங்களாதேஷ் அணியின் தலைமை தேர்வாளர் மின்ஹாஜுல் அபதின் Cricbuzz இணையதளத்திற்கு குறிப்பிட்டுள்ளார். “T20 தொடரின்போது எமது சில திறமைமிக்க வீரர்ககளின் திறன்களை பார்க்க எதிர்பார்க்கிறோம்” என்று மின்ஹாஜுல் குறிப்பிட்டார். “உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த திறமையை வெளிக்காட்டிய இந்த இளம் வீரர்களின் சேவையை பெற்று T20 ஆட்டத்தில் நாங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதற்கு முயற்சித்து பார்க்கவுள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

தனஞ்சயவின் மாய சுழலோடு பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடர் இலங்கை வசம்

பந்துவீச்சில் நேர்த்தியாக தாக்கக் கூடியவரும் பின்வரிசையில் பெறுமதியான துடுப்பாட்ட வீரராகவும் உள்ள ஆரிபுல் ஹக் போட்டியில் செலுத்தும் ஆதிக்கத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக மின்ஹாஜுல் குறிப்பிட்டார். 25 வயதான ஆரிபுல் 2017 பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டியில் குல்னா டைடன்ஸ் அணிக்காக சிறப்பாக செயற்பட்டார். அவர் தனது அணிக்காக மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களையும் பெற்றார்.

“ஏழாவது வரிசையில் வந்து வேகமாக துடுப்பெடுத்தாட முடியுமான ஒருவரை தீவிரமாக தேடிவரும் நிலையில் அவர் எமது எதிர்கால எதிர்பார்ப்பாக உள்ளார்” என்றார் மின்ஹாஜுல். “ஏனைய ஒவ்வொரு அணியிலும் இந்த இடத்தில் இருக்கும் வீரர்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் ஆட்டத்தை திசை திருப்பக் கூடிய திறமை இருக்கிறது. நாம் இதுவரை பார்த்ததில் அவரிடம் (ஆரிபுல்) அவ்வாறான திறமை இருப்பதாக உணர்கிறோம்” என்றும் அவர் கூறினார்.  

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டி பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி டாக்காவில் நடைபெறவுள்ளதோடு இரண்டாவது போட்டி சில்ஹெட்டில் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.    

பங்களாதேஷ் குழாம்

சகீப் அல் ஹசன் (தலைவர்), தமீம் இக்பால், சௌம்யா சாகர், முஷ்பீகுர் ரஹீம், மஹ்மூதுல்லாஹ், சப்பீர் ரஹ்மான், முஸ்தபிசுர் ரஹ்மான், ருபெல் ஹொஸைன், மொஹமது சைபுத்தீன், அபூ ஹைதர், அபூ ஜயெத், ஆரிபுல் ஹக், மெஹெதி ஹசன், சாகிர் ஹசன், ஹபீப் ஹொஸைன்.