தனஞ்சயவின் மாய சுழலோடு பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடர் இலங்கை வசம்

864
Image Courtesy - Associated Press

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இடையில் டாக்காவில்  நடைபெற்று முடிந்திருக்கும், டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் 215 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணியை போட்டியின் மூன்றாம் நாளிலேயே இலங்கை வீழ்த்தியிருப்பதுடன் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரையும் 1-0 என கைப்பற்றியிருக்கின்றது.

 [rev_slider LOLC]

வியாழக்கிழமை (8) தொடங்கியிருந்த இந்தப் போட்டியின் முதல் இரண்டு நாட்களும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது. இதனால், போட்டியின் நாணய சுழற்சியில் வென்றிருந்த இலங்கை அணி முதலில் துடுப்பாடி 65.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களை முதல் இன்னிங்சுக்காக பெற்றிருந்தது. தொடர்ந்து மைதான சொந்தக்காரர்களான பங்களாதேஷ் அணியினர் அவர்களது முதல் இன்னிங்சில் துடுப்பாடி வெறும் 110 ஓட்டங்களுடன் சுருட்டப்பட்டிருந்தனர்.

பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இலங்கைக்கு அதிக வாய்ப்பு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது…

இதனையடுத்து இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்திருந்த இலங்கை வீரர்கள் போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் நிறைவின் போது 200 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தனர். களத்தில் ரொஷேன் சில்வா 58 ஓட்டங்களுடனும், சுரங்க லக்மால் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.

போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 312 ஓட்டங்கள் என்ற வலுவான முன்னிலை ஒன்றுடன் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை வீரர்கள் குறைந்த நேரத்துக்குள்ளேயே மீதமாக இருந்த இரண்டு விக்கெட்டுக்களையும் 73.5 ஓவர்களில் பறிகொடுத்து இரண்டாம் இன்னிங்சுக்காக 226 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ரொஷேன் சில்வா இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று 145 பந்துகளுக்கு 10 பவுண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் பங்களாதேஷ் அணி சார்பாக பந்துவீச்சில், சுழல் வீரரான தய்ஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டுக்களை 76 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து கைப்பற்றியிருந்தார்.

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்சை அடுத்து சவால் மிக்க 339 ஓட்டங்கள் பங்களாதேஷ் அணிக்கு போட்டியில் வெற்றி பெற்று இந்த டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற தேவைப்பட்டிருந்தது.

இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தமிம் இக்பாலின் விக்கெட்டை தில்ருவான் பெரேரா இந்த இன்னிங்சின் இரண்டாவது ஓவரிலேயே கைப்பற்றி அதிர்ச்சி தந்திருந்தார். தமிம் இக்பால் 2 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் சற்று பதற்றத்தை உணர்ந்த பங்களாதேஷ் அணி தொடர்ந்து பொறுமையான முறையில் போட்டியில் முன்னேறியது. எனினும், ரங்கன ஹேரத்தின் சுழல் பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிக்கலை எதிர் கொண்ட மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இம்ருல் கைஸ் மூன்றாம் நாளின் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக 17 ஓட்டங்களுடன்  ஓய்வறை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். இதனால், மீண்டும் ஒரு தடுமாற்றத்துடன் போட்டியின் மதிய உணவு இடைவேளையை பங்களாதேஷ் அணி எடுத்துக் கொண்டது.

மதிய உணவு இடைவேளையை அடுத்து பங்களாதேஷ் அணியின் ஏனைய விக்கெட்டுக்களை இலங்கையின் சுழல் வீரர்கள் வேட்டையாடத் தொடங்கியிருந்தனர். மதிய போசணத்தின் பின்னர் முதல் விக்கெட்டாக பங்களாதேஷ் அணியின் பெரும் எதிர்பார்ப்பு வீரர்களில் ஒருவரான மொமினுல் ஹக், ரங்கன ஹேரத்தின் பந்துவீச்சில் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இப்போட்டி மூலம் டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட அகில தனஞ்சய பங்களாதேஷ் அணியின் மத்திய வரிசை வீரர்கள் அனைவருக்கும் பெரும் நெருக்கடியாக அமைந்திருந்தார். தனஞ்சயவின் சுழலின் காரணமாக, லிடன் தாஸ், அணித் தலைவர் மஹ்மதுல்லா, சபீர் ரஹ்மான் ஆகிய வீரர்கள் குறைந்த ஓட்டங்களை குவித்து மைதானத்தினை விட்டு வெளியேறினர். இவர்களோடு அணிக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த முஸ்பிகுர் ரஹீமும் 24 ஓட்டங்களுடன் மீண்டும் ஹேரத்தின் சுழலில் வீழ்ந்தார்.

மாலிங்க ஓய்வு பற்றி சூசகம்

மாலிங்க ஓய்வு பற்றி சூசகம்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து நட்சத்திரம் லசித் மாலிங்கவின்…

பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களும் வந்த வேகத்திலேயே ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி முடிவில், 29.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வியடைந்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சில், அகில தனஞ்சய வெறும் 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்திருந்ததோடு டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சினையும் பதிவு செய்திருந்தார். அத்தோடு இப்போட்டியில் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த ரங்கன ஹேரத் அதன் மூலம் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் இடதுகை பந்துவீச்சாளராக அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றியிருந்த (414) பாகிஸ்தான் அணியின் வசீம் அக்ரமின் சாதனையையும் மொத்தமாக 415 டெஸ்ட் விக்கெட்டுக்களுடன் முறியடித்திருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் இலங்கை அணியின் ரொஷேன் சில்வாவுக்கு சிறந்த துடுப்பாட்டத்திற்காக வழங்கப்பட்டிருந்தது. ரொஷேன் இத்தொடரில் அவர் விளையாடிய நான்கு இன்னிங்சுகளிலும் 50 இற்கு மேலான ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி அங்கு நடைபெற்ற முக்கோண ஒரு நாள் தொடர், இந்த டெஸ்ட் தொடர் ஆகியவற்றை வெற்றிகரமான முறையில் கைப்பற்றியிருக்கின்றது. அடுத்ததாக இலங்கை அணி வீரர்கள் இந்த பயணத்தில், இரண்டு போட்டிகள் கொண்ட T-20 தொடரில் எதிர்வரும் வியாழக்கிழமை (15) பங்களாதேஷ் அணியுடன் மீண்டும் மோதுகின்றனர்.

ஸ்கோர் விபரம்


SCORECARD

முடிவு இலங்கை அணி 215 ஓட்டங்களால் வெற்றி