சந்திமாலின் மேன்முறையீட்டை விசாரிக்க ஐ.சி.சி.யினால் நீதியாணையாளர் நியமனம்

376

பந்தின் தன்மையை மாற்றி சேதப்படுத்தல் வேலைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் போட்டித் தடையைப் பெற்றுக் கொண்ட இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால், ஐ.சி.சி. இனால் தன் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நேற்று (21) மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மேன்முறையீட்டில் தினேஷ் சந்திமால் பக்கத்தில் இருக்கும், நியாயங்களை விசாரிக்க ஐ.சி.சி. அதன் விதிமுறை மீறல் தொகுதிக்கு தலைவராக இருக்கும், மாண்புமிகு மைக்கல் பெலோபினை (Michael Beloff) நியமித்திருக்கின்றது.

ஐ.சி.சியின் போட்டித் தடைக்கு எதிராக சந்திமால் மேன்முறையீடு

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, இலங்கை அணியின் தலைவரான தினேஷ் சந்திமால் தனது உமிழ்நீரில் செயற்கை பதார்த்தம் ஒன்றை பயன்படுத்தி பந்தின் தன்மையை மாற்றினார் என வீடியோ ஆதாரம் முன்வைக்கப்பட்டு அவர் மீது குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த திங்கட்கிழமை (18) முடிவடைந்த பின்னர், போட்டி மத்தியஸ்தர் ஜவஹல் ஸ்ரீநாத், இலங்கை அணி முகாமைத்துவக்குழு மற்றும் போட்டி நடுவர்களின் முன்னிலையில் இந்த பந்து சேதப்படுத்தல் சம்பவம் தொடர்பான விசாரணை இடம்பெற்றது. குறித்த விசாரணையில், தனது வாயில் (உமிழ் நீரில்) ஏதோ இட்டதை ஏற்றுக் கொண்ட தினேஷ் சந்திமால், அது என்ன என்பது ஞாபகமில்லை எனக் கூறியிருந்தார்.

உமிழ்நீருடன் கலந்த பதார்த்தம் என்னவென்பதை கூறாத காரணத்தினால், அது  பந்தின் தன்மையை மாற்றும் செயற்கை பதார்த்தம் என கருதப்பட்டு சந்திமால் பந்தின் தன்மையை மாற்றும் குற்றத்தில்  ஈடுபட்டார் எனக் கூறி அதிகபட்ச தண்டனையாக, இரண்டு போட்டி இடைநிறுத்த புள்ளிகளுடன், போட்டி கட்டணத்தின் 100 சதவீதத்தை அபராதமாக விதிக்க போட்டி மத்தியஸ்தரான ஜவஹல் ஸ்ரீநாத் நடவடிக்கை எடுத்தார்.

இரண்டு போட்டி இடைநிறுத்தப் புள்ளிகள் என்பது ஒரு டெஸ்ட் தடைக்குச் சமம் என்பதால் தினேஷ் சந்திமாலுக்கு  மேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவதுடெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

தன்மீது வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் போதே தெரிவித்திருந்த சந்திமால், தனக்கு தண்டனை கிடைத்த பின்னரும் தனது முன்னைய கூற்றில் உறுதியாக இருந்தவாறே நேற்று (21) ஐ.சி.சி. இடம் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேன்முறையீட்டை விசாரிக்கவுள்ள ஐ.சி.சி. நீதியாணையாளர் மைக்கல் பெலோபுடன் சந்திமாலை தொலைபேசியிலோ அல்லது வீடியோ கலந்துரையாடல் (Video Conference) மூலமோ இன்று (22) வெள்ளிக்கிழமை பேச ஏற்பாடு செய்துள்ளது. இதில் இரண்டு தரப்புக்களினதும் சட்ட ஆலோசகர்களும் பங்கெடுக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சங்கா, மஹேல உள்ளிட்ட வீரர்களின் நிராகரிப்பு வரவேற்கத்தக்கது – அர்ஜுன ரணதுங்க

சந்திமால் இந்த பேச்சு வார்த்தையின் போது தனது உமிழ் நீருடன் இருந்தது பந்தை சேதப்படுத்தும் செயற்கை பதார்த்தம் இல்லை என்பதை நிரூபிக்க சான்றுகளை சமர்ப்பிப்பார் எனக் கூறப்படுகின்றது. அத்துடன், இந்த பேச்சு வார்த்தைகளில் சந்திமால் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு இருக்கும் போட்டி தடை நீக்கப்பட்டு மேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பும் உருவாகும்.

இதேவேளை, ஆரம்பத்தில் இருந்தே இலங்கை கிரிக்கெட் சபையானது பந்து சேதப்படுத்தல் தொடர்பான இந்த விடயத்தில் தமது வீரர்கள் எவரும் கிரிக்கெட் விளையாட்டின் புனித தன்மைக்கு கலங்கம் விளைவிக்கும் விதத்தில் செயற்படவில்லை எனக் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…