அதிரடி ஓய்வை அறிவித்தார் பேல்

90

வேல்ஸ் கால்பந்து அணித் தலைவர் கிரேத் பேல் தனது 33வது வயதில் கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வேல்ஸ் நாட்டுக்காக அதிக போட்டிகளில் ஆடியவரும் அதிக கோல்களை பெற்றவராகவும் இருக்கும் பேல் தனது இந்த முடிவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.

ரியல் மெட்ரிட் அணிக்காக ஐந்து முறை சம்பியன்ஸ் லீக் வென்ற பேல், வேல்ஸின் மிகச் சிறந்த வீரர் என பெயர் பெற்றவராவார். ‘கவனமான மற்றும் கடினமான ஆலோசனைக்குப் பின்னர் சர்வதேச மற்றும் கழகமட்ட கால்பந்தில் இருந்து உடன் ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன்’ என்று பேல் குறிப்பிட்டுள்ளார்.

‘நான் விரும்பும் விளையாட்டை விளையாடும் எனது கனவு உண்மையானது, பெரும் அதிர்ஷ்டம் என நான் உணர்கிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காடிப்பில் பிறந்த பேல், சௌதம்டனில் தனது கழக மட்ட கால்பந்தை ஆரம்பித்தநிலையில் பின்னர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அணிக்காக ஆடினார். தொடர்ந்து அவரை சாதனை தொகைக்கு ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் வாங்கியது. அவர் 2022 ஜூனில் மேஜர் லீக் கால்பந்து கழகமான லொஸ் ஏஞ்சல்ஸ் அணிக்கு மாறினார்.

தனது நாடு 2016 மற்றும் 2020 ஐரோப்பிய சம்பியன்சிப்புக்கு முன்னேற உதவிய அவர், 1958க்குப் பின்னர் வேல்ஸ் அணி முதல் முறை 2022 கட்டார் உலகக் கிண்ணத்தில் ஆடுவதற்கு முக்கிய பங்கு வகித்தார். அவர் 111 சர்வதேச போட்டிகளில் 41 கோல்களுடன் கால்பந்து வாழ்வை நிறைவு செய்துள்ளார்.

டொட்டன்ஹாமில் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக இரு முறை அறிவிக்கப்பட்ட நிலையிலேயே பேல் 2013 செப்டெம்பரில் 80 மில்லியன் பௌண்ட்ஸுக்கு மேற்பட்ட தொகைக்கு ரியல் மெட்ரிட்டால் வாங்கப்பட்டார். அது அப்போது உலக சாதனை தொகையாக இருந்தது.

அவர் ரியல் மெட்ரிட்டில் இருந்த காலத்தில் அந்த அணி மூன்று லீக் பட்டங்கள் மற்றும் ஐந்து சம்பியன்ஸ் லீக் கிண்ணங்களை வெல்ல பங்காற்றியுள்ளார். இது பிரிட்டிஷ் வீரர் ஒருவரின் சாதனையாக உள்ளது. தவிர அவர் மூன்று கழகங்களுக்கு இடையிலான உலகக் கிண்ணங்கள், மூன்று Uefa சுப்பர் கிண்ணங்கள் மற்றும் ஒரு ஸ்பானிஷ் கிண்ணத்தையும் வென்றுள்ளார்.

‘கால்பந்து எனது வாழ்வின் சிறந்த தருணங்களை தந்தது’ என்றும் பேல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<