டோக்கியோவை சாதனைகளால் அலங்கரித்த மும்மூர்த்திகள்

Tokyo Olympics - 2020

198
Getty Image/ Reuters

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவருகின்ற ஒலிம்பிக் விளையாட்டு விழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இம்முறை ஒலிம்பிக்கின் முதல் வாரத்தில் நீச்சல் போட்டியில் அதிகளவு உலக மற்றும் ஒலிம்பிக் சாதனைகள் முறியடிக்கப்பட்டதுடன், இரண்டாவது வாரத்தில் மெய்வல்லுனர் போட்டிகளில் அடுத்தடுத்து உலக மற்றும் ஒலிம்பிக் சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

எனவே, கொரோனா அச்சுறுத்தலினால் ஓராண்டால் பிற்போடப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா, சாதனைகள் முறியடிக்கும் ஒலிம்பிக் விழாவா மாறியுள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த போட்டியாக மெய்வல்லுனர் இடம்பிடித்தது. இதில் இன்றைய நாளில் ஆறு தங்கப் பதக்கங்களுக்கும் நடைபெற்ற போட்டிகளில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டன

எனவே, டோக்கியோ ஒலிம்பிக்கின் 11ஆவது நாளில் இடம்பெற்ற முக்கிய போட்டிகள் நிகழ்ச்சிகளின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.  

நோர்வே வீரரின் அபூர்வ உலக சாதனை 

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியை 45.94 செக்கன்களில் கடந்து புதிய உலக சாதனையுடன் நோர்வே வீரர் கார்ஸ்டன் வோர்ஹோல்ம் தங்கப் பதக்கம் வென்றார்

இதன்மூலம் தனது சொந்த உலக சாதனையை 0.76 மில்லி செக்கன்களால் முறியடித்து புதிய உலக சாதனையை அவர் நிலைநாட்டினார்.

முன்னதாக கடந்த மாதம் ஒஸ்லோவில் நடைபெற்ற டயமண்ட் லீக் மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியை 46.70 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் அமெரிக்கா வீரர் கெவின் யங் நிலைநாட்டிய (46.78 செக்.) உலக சாதனையை 29 ஆண்டுகளுக்குப் பின் முறியடித்தார்.

எனவே தன்னுடைய உலக சாதனையை ஒரு மாதம் காலப்பகுதிக்குள் மீண்டும் கார்ஸ்டன் முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்இவர் இறுதியாக நடைபெற்ற 2017, 2019 உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிலும் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அமெரிக்காவின் ராய் பென்ஞமின் போட்டியை 46.17 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்முன்னதாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அமெரிக்காவின் ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில் 400 மீட்டர் தடைதாண்டல் போட்டியை 46.83 செக்கன்களில் நிறைவுசெய்த அவர், 400 மீட்டர் தடைதாண்டல் போட்டியை 47 செக்கன்களில் நிறைவுசெய்த உலகின் நான்காவது வீரராக இடம்பிடித்தார்

இதேவேளை, பிரேசிலின் அலிசன் டொஸ் சன்டோஸ், 46.72 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கம் வென்றதுடன், தென் அமெரிக்காவின் சாதனையையும் முறியடித்தார்.

எனவே, இந்தப் போட்டியில் பங்குகொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற மூன்று வீரர்களும் 1992இல் அமெரிக்கா வீரர் கெவின் யங் நிலைநாட்டிய (46.78 செக்.) ஒலிம்பிக் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தமை சிறப்பம்சமாகும்

இதனிடையே ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் இறுதிப் போட்டியில் பங்குகொண்ட எட்டு வீரர்களில் ஆறு பேர் உலக, வலயங்கள் மற்றும் தமது நாடுகளின் தேசிய சாதனைகளை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

குதிரை பாய மறுத்ததால் மெடில்டா கார்ல்சனுக்கு ஏமாற்றம்

நீளம் பாய்தலில் ஜேர்மனிக்கு தங்கம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான நீளம் பாய்தலில் ஜேர்மனியின் மலைக்கா மிஹம்போ தங்கப் பதக்கம் வென்றார்ஆரம்பத்தில் வெண்கலப் பதக்கத்துக்கான இடத்தில் இருந்த இவர், இறுதி முயற்சியில் 7.00 மீட்டர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார்

இந்தப் பருவகாலத்தின் சிறந்த தூரத்தைப் பதிவுசெய்த மிஹம்போ, 2012 ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்காவின் பிரிட்னி ரிஸ்ஸேவை வீழ்த்தினார்.

எதுஎவ்வாறாயினும், இந்தப் போட்டியில் அமெரிக்காவின் பிரிட்னி ரிஸ்ஸே (6.97 மீட்டர்) வெள்ளிப் பதக்கத்தையும், நைஜீரியாவின் எஸே ப்ரூம் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்

ஏலைன் தோம்சனுக்கு இரட்டை தங்கம்

டோக்கியோ ஒலிம்பிக் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தோம்சன் ஹேரா தங்கப் பதக்கம் வென்றார்குறித்த போட்டியை 21.53 செக்கன்களில் நிறைவுசெய்த அவர் ஒலிம்பிக் அரங்கில் புதிய வரலாறு படைத்தார்.  

ஒலிம்பிக் வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற உலகின் முதலாவது வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டார்.

இறுதியாக நடைபெற்ற 2016 ரியோ ஒலிம்பிக்கிலும் அவர் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே, குறித்த போட்டியை 21.81 செக்கன்களில் நிறைவுசெய்த 18 வயதான நமீபியா நாட்டு வீராங்கனை கிறிஸ்டின் எம்போமா வெள்ளிப் பதக்கத்தை வென்று, 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 200 மீட்டரில் புதிய சாதனை படைத்தார்.

அமெரிக்காவின் கெப்பி தோமஸ், போட்டியை 21.87 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

Photos: Mathilda Karlsson | 2020 Tokyo Olympics Equestrian

கோலூன்றிப் பாய்தலில் கலக்கிய 21 வயது இளம் வீரர்

கோலூன்றிப் பாய்தலில் உலக சம்பியனான சுவீடனைச் சேர்ந்த மொண்டோ டுப்லன்டிஸ், இன்று நடைபெற்ற ஒலிம்பிக் கோலூன்றிப் பாய்தலில் 6.02 மீட்டர் உயரம் தாவி தங்கப் பதக்கம் வென்றார்.

கோலூன்றிப் பாய்தலில் தனது முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்று அசத்திய மொண்டோ, கோலூன்றிப் பாய்தலின் உலக சாதனையாக உள்ள 6.19 மீட்டர் உயரத்தை தாவுவதற்காக மேற்கொண்ட மூன்று முயற்சிகளிலும் ஏமாற்றம் கண்டார்

இந்தப் போட்டியில் அமெரிக்கா வீரர் கிறிஸ் நில்சன் (5.97 மீட்டர்) வெள்ளிப் பதக்கத்தையும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பிரேசில் வீரர் தியாகோ பிராஸ் (5.87 மீட்டர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

போலந்து வீராங்கனைக்கு ஹெட்ரிக் தங்கம்

இன்று நடைபெற்ற பெண்களுக்கான சம்மெட்டி எறிதலில் நடப்பு ஒலிம்பிக் சம்பியனான போலந்து நாட்டைச் சேர்ந்த எனிடா வ்லொடார்சிக், 78.48 மீட்டர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்

இதன்மூலம் ஒலிம்பிக்கில் தனது ஹெட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த அவர், ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே போட்டியில் தொடர்ந்து மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற உலகின் முதலாவது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டார்.

இவர் இறுதியாக நடைபெற்ற 2012 லண்டன், 2016 ரியோ மற்றும் தற்போது 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்

19 வயது அமெரிக்க வீராங்கனைக்கு தங்கம்

இன்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் அமெரிக்காவின் 19 வயது இளம் வீராங்கனையான எதின் மூ தங்கப் பதக்கம் வென்றார்.

குறித்த போட்டியை ஒரு நிமிடம் 55.21 செக்கன்களில் நிறைவுசெய்து அமெரிக்காவின் தேசிய சாதனையை முறியடித்த அவர், ஒலிம்பிக் வரலாற்றில் அரை நூற்றாண்டுக்குப் பிறகு பெண்களுக்கான 800 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்ற முதல் அமெரிக்கா வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டார்

எதின் மூவின் பெற்றோர் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இரண்டு தசாப்தங்களுக்கு முன் அவர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

பளுதூக்குதலில் வரலாறு படைத்தார் எமிலி

ஒலிம்பிக் வரலாற்றில் பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் பிரித்தானியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த வீராங்கனை என்ற பெருமையை எமிலி ஜேட் கெம்பல் பெற்றுக்கொண்டார்

27 வயதான எமிலி, இம்முறை டோக்கியோவில் பெண்களுக்கான 87 கிலோவுக்கும் அதிகமான எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றே இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.  

நான்கு‌ ‌ஒலிம்பிக்கில்‌ ‌நான்கு‌ ‌தங்கங்கள்:‌ ‌38‌ ‌வயது‌ ‌கியூபா‌ ‌வீரர்‌ ‌ சாதனை‌

சிமோன் பைல்ஸ் வெண்கலம்

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் அணிகளுக்கான பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த நிலையில், தனிநபர் போட்டிகளில் ஐந்து பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். ஆனால் மன அழுத்தம் காரணமாக திடீரென போட்டிகளில் இருந்து விலகினார்

இந்த நிலையில், ‘பெலன்ஸ் பீம்பிரிவு இறுதிப் போட்டியில் பங்கேற்ற சிமோன், 14.000 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். சீன வீராங்கனைகள் சென்சென், ஜிஜிங் ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

கால்பந்து இறுதிப் போட்டியில் பிரேசில், ஸ்பெயின்

ஆண்களுக்கான கால்பந்து போட்டிகளில் நடப்பு ஒலிம்பிக் சம்பியனான பிரேசில் அணி, இன்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் மெக்ஸிகோவை சந்தித்தது

போட்டி நேரத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்றபெனால்டி ஷுட் அவுட்முறையில் பிரேசில் அணி 4–1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

இதன்மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக ஒலிம்பிக் கால்பந்து இறுதிப் போட்டிக்கு பிரேசில் அணி தெரிவாகியது.

இதனிடையே, இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஜப்பானை 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

இதன்மூலம் 1992 பார்சிலோனா ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு ஸ்பெயின் அணி ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது

இதன்படி, 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஆண்களுக்கான கால்பந்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மெக்ஸிகோஜப்பான் அணிகள் மோதவுள்ளதுடன், 7ஆம் திகதி நடைபெறவுள்ள தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் பிரேசில்ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன

Photos: India vs Great Britain – Men’s Q4 | Tokyo 2020 Olympic Games

சீனா தொடர்ந்து முதலிடம்

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா, அமெரிக்கா நாடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இரு நாடுகளும் போட்டியை நடத்தும் ஜப்பானை பின்னுக்குத்தள்ளி முறையே முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன.

ஓலிம்பிக்கின் 11ஆவது நாள் நிறைவுடையும் போது சீனா 32 தங்கம், 21 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கம் பெற்று முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 24 தங்கம், 28 வெள்ளி, 21 வெண்கலப் பதக்கம் பெற்று 2ஆவது இடத்தில் உள்ளதுஜப்பான் 19 தங்கம், 6 வெள்ளி, 11 வெண்கலத்துடன் 3ஆவது இடத்தில் உள்ளது

>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<