இலங்கையுடனான T20I தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

72

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I  கிரிக்கெட் தொடருக்கான 16 பேர்கொண்ட பாகிஸ்தான் குழாம் இன்று (02) அறிவிக்கப்பட்டுள்ளது.   

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான T20I  தொடர் எதிர்வரும் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரை லாஹூரில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் குழாத்தினை அந்த அணியின் பயிற்றுவிப்பாளரும், தேர்வுக்குழு தலைவருமான மிஸ்பா உல் ஹக்  இன்று (02) வெளியிட்டுள்ளார். 

பாகிஸ்தான் செல்லும் இலங்கை ஒருநாள் T20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 …….

அறிவிக்கப்பட்டிருக்கும் T20I  குழாத்தை பொருத்தவரை, இலங்கை அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருந்த ஒருநாள் குழாத்திலிருந்து மூன்று மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அணித் தலைவராக சர்பராஸ் அஹமட் செயற்படும் நிலையில், அஹமட் சேஷாட், உமர் அக்மல் மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோர் T20I குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் ஒருநாள் குழாத்தில் இடம்பெற்றிருந்த இமாம் உல் ஹக், அபிட் அலி மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் T20I  குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இமாம் உல் ஹக் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, உபாதைக்குள்ளாகினார். அவரது, இடதுகையில் உபாதை ஏற்பட்ட நிலையில், மிகுதிநேரத்தில் அவர் களத்தடுப்பில் ஈடுபட்டிருக்கவில்லை. இதன் காரணமாக அவர் T20I  குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், அணிக்குள் அழைக்கப்பட்டுள்ள துடுப்பாட்ட வீரரான அஹமட் சேஷாட், இறுதியாக ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற T20I போட்டியில் விளையாடியிருந்தார். அதன் பின்னர், முதன்முறையாக அவர் பாகிஸ்தான் T20I குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். இவருடன், இணைக்கப்பட்டிருக்கும் உமர் அக்மல், 2016ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20I போட்டியில் விளையாடியிருந்த நிலையில், 3 வருட இடைவெளியின் பின்னர் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார். 

இலங்கையுடனான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் …..

இவர்கள் இருவருக்கும் அடுத்தப்படியாக இணைக்கப்பட்டுள்ள வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர் பஹீம் அஷ்ரப் இறுதியாக, இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான T20I தொடரில் விளையாடியிருந்தார்.

இவர்களை தவிர்த்து இலங்கை அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் விளையாடி வரும் 13 வீரர்கள் பாகிஸ்தான் T20I குழாத்தில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் T20I குழாம்

அஹமட் சேஷாட், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), பக்கார் சமான், பஹீம் அஷ்ரப், பாபர் அசாம், ஹரிஸ் சொஹைல், ஆசிப் அலி, உமர் அக்மல், இமாத் வஸீம், மொஹமட் நவாஸ், இப்திகார் அஹ்மட், சதாப் கான், வஹாப் ரியாஸ், மொஹட் அமீர், மொஹமட் ஹஸ்னைன், உஸ்மான் ஷின்வாரி

   >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<